தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் முதல் வணக்கம்!


நேசத் தமிழ் நெஞ்சங்களே, அனைவருக்கும் ‘நமது களம்’ கூறும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்பு வணக்கம்!

இதுவரை எத்தனையோ இணைய இதழ்களை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால், இப்பொழுது நீங்கள் சுவைத்துக் கொண்டிருப்பது ஒரு பல்லூடக (Multimedia) இதழ். அது என்ன பல்லூடக இதழ் எனக் கேட்கிறீர்களா?

நிறைய எழுத்துப் படைப்புகள், இடையிடையே சில படங்கள் - இதுதான் பத்திரிக்கை என்றாலே நம் நினைவுக்கு வரும். ஆனால், நமது களத்தில், எழுத்தாலான படைப்புகளில் நடுநடுவே விழியங்கள் (videos) எழுந்தாடுவதை நீங்கள் பார்த்து வியக்கலாம். சுவையான சிறுகதைகளுக்கு அசையும் சித்திரங்கள் எழிலூட்டுவதைக் கண்டு களிக்கலாம். அழகிய கவிதைகளின் முடிவில் பாடல்களைக் கேட்டும் மகிழலாம்.

இவை மட்டுமல்ல, நையாண்டிச் சித்திரங்கள் (memes), நக்கல் விழியங்கள் (video memes), புதுமைத் தொடர்கள் என இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படிப்புலகுக்கு உங்களை அழைத்துச் செல்ல மலர்ந்திருக்கிறது இந்தப் புதிய இதழ்!

அதற்காக, தோற்றத்தில் மட்டும்தான் நாங்கள் புதுமை படைப்போம் என நினைத்து விடாதீர்கள் நண்பர்களே! ஆழமான கட்டுரைகள், வீச்சு மிகுந்த கவிதைகள், நயம் மிக்க புனைவுகள், நுட்பமான கருத்துக்கள் எனப் படைப்புகளின் செறிவிலும் உங்களுக்கு விருந்து படைக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்!

அதே நேரம், இந்தப் பெரு முயற்சியை நாங்கள் எங்களை மட்டும் நம்பித் தொடங்கவில்லை. நேயர்களான உங்களையும் நம்பியே இதில் இறங்கியிருக்கிறோம். கதை, கவிதை, கட்டுரை, நையாண்டிச் சித்திரம் (meme), பகடிப் படம் (Cartoon), குறும்படம் என எதுவாக இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம்.


ஆம்!
தேடல் மிகுந்தோருக்கு இது வேட்டைக் களம்! - இலக்கியத்
தேன் விரும்புவோர்க்கு இது மலர்க்களம்!
சமூக ஆர்வலர்களுக்கு இது ஆடுகளம்! 
சிந்தனையாளர்களுக்கு வயற்களம்! 
மாணவர்களுக்கு இது பயிற்சிக்களம்! 
மாறானவர்களுக்கோ பலிகளம்! 
படைப்பாளிகளுக்குப் போர்க்களம்! - மொத்தத்தில் 
தமிழர்கள் அனைவருக்கும் இனி அமர்க்களம்!
அதனால்தான் சொல்கிறோம் இது ‘நமது களம்’!

படியுங்கள்!படையுங்கள்!பகிருங்கள்!

Hearty Pongal Wishes from 'Namadhu Kalam'
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.