மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்

Like and Share

ச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி! நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவுகளையும் தீர்மானிக்கிறது.

மண்ணை விரும்புபவன் அதனுடன் தன் வியர்வையைப் பகிர்கிறான்; உழவனாகிறான். மொழியை விரும்புபவன் அதில் தன் கற்பனையைப் பகிர்கிறான்; எழுத்தாளனாகிறான். மக்களை நேசிப்பவன் அவர்களுக்குத் தன் ரத்தத்தைப் பகிர்கிறான்; தலைவனாகிறான்.

பொது வாழ்க்கையில் இப்படியென்றால் சொந்த வாழ்க்கையில், காதலைப் பகிர்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கிறது. அன்பைப் பகிர்பவர்களுக்குச் சிறந்த உறவுகள் கிடைக்கின்றன. தோழமையைப் பகிர்பவர்களுக்கு உண்மையான நட்பு கிடைக்கிறது.

நம் விருப்பு வெறுப்புகளில் மற்றவர்கள் தலையிடும்பொழுது, அதை மாற்றிக் கொள்ளச் சொல்லும்பொழுது, அது சரியோ தவறோ நமக்கு மூக்குக்கு மேல் கோபம் வருகிறது. “நான் எதை விரும்ப வேண்டும், விரும்பக்கூடாது என்பது என் தனிப்பட்ட விஷயம். அதை மற்றவர்கள் தீர்மானிக்கக்கூடாது” என நாம் நினைக்கிறோம். உண்மைதான்; விருப்பும் வெறுப்பும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதை ஊரார் தீர்மானிக்க முடியாது. ஆனால், நாம் விரும்புகிற அல்லது வெறுக்கிற விஷயங்கள் நம்மிடம் எதைப் பகிர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாதே மச்சி!

படிக்கும் பழக்கத்தை விரும்பினால் அறிவு, துணிவு என வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களை அது நமக்குப் பகிர்கிறது. அதுவே, சிகரெட்டை விரும்பினால் அது நம்மிடம் புற்றுநோயைத்தான் பகிர்கிறது. உழைப்பை வெறுக்கிறவனுக்கு வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. ஆனால், வியர்வையை விரும்புகிறவனுக்கு வாழ்க்கை உச்சங்களைப் பரிசளிக்கிறது.

அதற்காக, நல்லதையே விரும்பி நல்லதையே பகிர்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்குக் கெட்டது நடந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறும் துணிச்சலை, ஆற்றலை அது வழங்குகிறது.

நினைத்துப் பாருங்கள்! பெண் விடுதலைக்காகப் போராடும் மாணவிகளுக்கு இருக்கும் கெத்தும் திமிரும், குடித்துவிட்டுக் காவல்துறை அதிகாரியிடம் பிடிபடுபவனுக்கு இருக்க முடியுமா?

எனவே, நம் விருப்பு வெறுப்பை மையப்படுத்தி எதையும் சிந்திக்காமல், நல்லது கெட்டதை மையப்படுத்தி நம் விருப்பு வெறுப்புகளை வடிவமைத்துக் கொள்வோம்! உலகில், நல்லது எதுவாக இருந்தாலும் அது எனக்குப் பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் எனவும், கெட்டது எதுவாக இருந்தாலும் அது என் வெறுப்புக்குரியதாகத்தான் இருக்கும் எனவும் நம் கொள்கையை வகுத்துக் கொண்டு அதனடிப்படையில் நம் விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கலாம் வாருங்கள்!

இங்கு நான், இப்படிப் பக்கம் பக்கமாக அறுத்துத் தள்ளுவதைத்தான் அன்றே சொன்னார் ஔவையார், ஒரே வரியில் ‘அறம் செய விரும்பு’ என்று!

அதே சமயம், நல்லதை விரும்பினால் மட்டும் போதாது அடுத்தவர்களுடன் பகிரவும் வேண்டும்!

இணையத்தையே எடுத்துக் கொள்வோம்! இன்று நம் நண்பர்கள் எத்தனை பேர் வலைப்பூக்கள் தொடங்கி எவ்வளவெல்லாம் அருமையாக எழுதுகிறார்கள்!

கூடங்குளம் போராட்டம் முதல் காஷ்மீர் பிரச்சினை வரை, கண் தானம் முதல் கணினிப் பாதுகாப்பு வரை எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள், படிக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவற்றைப் பகிர்கிறோம்? அட, பதிவின் இறுதியில் இருக்கும் கூகுள்+ பொத்தானை அழுத்த ஒரு நொடி ஆகுமா? அதைக் கூட நம்மில் பலர் செய்வதில்லை. படித்தவுடன் டேப் மாறிப் போய்க் கொண்டே இருக்கிறோம். தப்பு மச்சி!

நல்லதைப் பகிர வேண்டும்! நாம் அறிந்த நல்லனவற்றை அடுத்தவர்களுக்கும் பரப்ப வேண்டும். நாம் கற்ற அறிவுநுட்பங்களை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். கற்றுக்கொள்ளும்பொழுது அடிப்படை மட்டும்தான் புரியும். அதையே மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, அது மேலும் பல புதிய கோணங்களில் நமக்குப் புரியத் தொடங்கும். ஒருமுறை முயன்றுதான் பாருங்களேன்!

இதுவும் நம் முன்னோர்களில் ஒருவர் சொன்னதுதான். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்மை விழி விரிய வைக்கும் அறிவியல் நுட்பங்களைச் சொல்கிற திருமந்திரத்தை எழுதிய திருமூலர் சொன்னார் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று.

ஆமாம் மச்சி, முகநூலின் ‘விருப்பம்’ பொத்தனையும், ‘பகிர்தல்’ பொத்தானையும் உருவாக்கியது வேண்டுமானால் மார்க் சக்கர்பெர்க்காக இருக்கலாம். ஆனால், நல்லது எதுவாக இருந்தாலும் விரும்ப வேண்டும், மற்றவர்களுடன் அதைப் பகிர வேண்டும் எனும் கருத்தாக்கத்தை உருவாக்கியது தமிழ்ச் சமூகம்தான்.

எனவே, நல்லதையே விரும்புவோம், நல்லதையே பகிர்வோம்! நல்லதே நடக்காவிட்டாலும்!


--பகிர்வேன்... 

  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.