மறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்! - ராகவ்
எத்தனை முறை பேசினாலும், எந்த வயதில் யோசித்தாலும், எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மிக மிக சுவாரஸ்யமாக அனைத்துக் காலக்கட்டங்களிலும் இருக்கும் ஒரே விஷயம் காதல்!
இந்தக் காதல் நமது தமிழ் சினிமாக்காரர்களுக்கு வேத மந்திரம். பார்க்காமல் காதல், பார்த்துக்கொண்டே காதல், பஸ்ஸில் காதல், இரயிலில் காதல் எனப் பல காதல்களைச் சொல்லியிருக்கிறது கோடம்பாக்கம். ஒரு சில காதல் படங்கள் மட்டுமே அரிதிலும் அரிதாக, காவியமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில் 1960-களில் வந்த காதல் காவியம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. ஸ்ரீதர் இயக்கிய படங்களில் மிகச் சிறந்த படமாக ரசிகர்களால் இப்படம் இன்றளவும் பார்க்கப்படுகிறது.
ஒரு மனைவி தனது நோய்வாய்ப்பட்ட கணவனுக்காக, மருத்துவமனைக்கு வருகிறாள். மருத்துவமனையில் கணவனைச் சேர்த்துப் பராமரித்து வருகிறாள். கணவனுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் அப்பெண்ணின் பழைய காதலன். இந்த முக்கோணக் கேரக்டர்களை வைத்துக்கொண்டு மிக அழகியலோடும், நேர்த்தியாகவும் கதை சொல்லியிருப்பார் இயக்குநர்.
பிரம்மாண்டமான செட்டுகள், வெளிப்புறப் படப்பிடிப்புகள் இல்லாமல் மருத்துவமனைக்குள்ளேயே படத்தை எடுத்திருப்பார் டைரக்டர். தனது கணவன் உயிர்ப்பிழைக்க வேண்டுமே, தனது முன்னாள் காதலன் முறையாகக் கணவனுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு கதாநாயகியின் மனதில் இருந்துகொண்டே இருக்கும். கணவன் உயிர் பிழைப்பானா இல்லையா என்ற படபடப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி, இறுதியில் முன்னாள் காதலனை இறக்க வைத்துவிடுவார் இயக்குநர். அதாவது, காதலன் தனது உயிரைக் கொடுத்து முன்னாள் காதலியின் கணவரைக் காப்பாற்றியிருப்பார்.
முன்னாள் காதலனாக கல்யாணகுமாரும், கணவனாக முத்துராமனும், கதாநாயகியாக தேவிகாவும் வாழ்ந்திருப்பார்கள்! மருத்துவமனையின் ஒவ்வொரு கேரக்டரிடமும் ஒருவிதச் சோகம் இருக்கும். இந்தச் சோகத்தையும் தாண்டி வாழ்க்கையைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்து போய்விடுவது பார்வையாளர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.
‘சொன்னது நீதானா?’, ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’, போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடல்கள்! இவை இரண்டையும் விட ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் இன்றளவும் காதலில் தோல்வி அடையும் இளைஞர்களுக்கு ஆறுதல் மருந்து!
தன்னை மணக்கவில்லை என்றாலும், தன் காதலி மஞ்சள் குங்குமத்துடன் வாழ வேண்டும் என்று நினைத்த அன்றைய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ எங்கே! ‘எவண்டி உன்ன பெத்தான் – பெத்தான்’, ‘உன் கேர்ள் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி’, ‘நீ நிறைய புள்ள பெத்துக் கஷ்டப்பட’ எனத் தன்னை விரும்பாத பெண்ணைத் திட்டி சாபம்விடும் பாடல்கள் கொண்ட இன்றைய சினிமா எங்கே!
பிளேடால் கையை வெட்டிக்கொள்வதும், பெண்ணைக் காதலிக்க வைக்க நிர்வாணமாக ரோட்டில் ஓடுவதும் எனப் பல்வேறு அபத்தங்களை இன்றைய தமிழ் சினிமா அரங்கேற்றி வரும் வேளையில், காதலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கலாச்சாரத்தோடும், இயல்போடும் சொன்ன ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ஒரு குறிஞ்சிமலர்!
- ராகவ்
--காட்சி தொடரும்...
பதிவு பிடித்திருக்கிறதா? அப்படியானால், கீழ்க்காணும் சமூக ஊடகங்களின் பொத்தான்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிருங்களேன்! அப்படியே உங்கள் கருத்தை அறியவும் ஆவல்! கீழே கருத்துப்பெட்டி காத்திருக்கிறது! உங்கள் மனதில் இருப்பதைத் தெரிவியுங்களேன்!
இது பற்றி உங்கள் கருத்து?...