வார்த்தை என்னும் வல்லாயுதம்! - மச்சி! நீ கேளேன்! - 2 | இ.பு.ஞானப்பிரகாசன்

Word - The Powerful Tool
சீசர் செத்ததைக் கொண்டாடும் உளநிலையில் இருந்த மொத்த ரோமாபுரியையும் ஒரே ஒரு மேடைப் பேச்சால் அவரைக் கொன்றவர்களுக்கு எதிராகவே திருப்பியவை மார்க் ஆண்டனியின் சொற்கள்! எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகக் குறைவாக இருந்த பிரிட்டன் விமான வீரர்கள் தங்களை விடப் பலம் வாய்ந்து விளங்கிய ஜெர்மானியப் படையை வென்ற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவை சர்ச்சிலின் சொற்கள்! கடவுள்தான் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கிறார் என்கிற அளவுக்கு மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் கோடிக்கணக்கானவர்களைப் பகுத்தறிவுப் பெருவழிக்குத் திசை மாற்றியவை பெரியாரின் சொற்கள்!

வார்த்தைகள் வரலாற்றைப் புரட்டிப் போட்டதற்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அடுக்க முடியும்!

ஆம், வார்த்தைகள்!... சொற்கள்!... அமெரிக்க அதிபர் முதல் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சராசரி மனிதர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரே பேராயுதம்! ஆயுதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை அழிவுக் கருவிகள்தான். ஆனால், ஒரே கருவி, பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும் என்றால் அது ‘வார்த்தை’ மட்டும்தான்! அதனால்தான், புகழ்பெற்ற பேச்சாளர் ஒருவர் கூறியது போல், தமிழில் பேச்சு, எழுத்து, அறிவு ஆகிய மூன்று திறமைகளை மட்டும் ‘ஆற்றல்’ –Power- எனக் குறிப்பிடுகிறோம்!

சொற்களைக் கையாளுதல் என்பது அற்புதமான கலை. ஆனால், அனைவருக்கும் உரித்தான கலை! அனைவராலும் இது முடியும் என்பது மட்டுமில்லை, முடிகிறது! பேசவே மாட்டான், பேசவே தெரியாது, வாய் செத்த பிள்ளை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற எத்தனையோ பேர், வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், திடீரென எரிமலையாய் வெடித்து வார்த்தைகளைக் கக்குவதை, எதிராளி திகைத்து, அயர்ந்து அப்படியே உட்கார்ந்து விடுகிற அளவுக்குப் பேசிப் பிரித்து மேய்வதை நாம் பார்க்கிறோம்! காரணம், பேச்சு என்பது இயல்பான, மனிதனின் உதிரத்திலேயே ஊறிய கலை. பலர் அதை உணர்ந்து, வளர்த்தெடுத்து, தொடர்ந்து பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். சிலருக்கோ வேறுவழியில்லாத ஒரு நிலைமை வரும்பொழுதுதான் அந்தத் திறமை –தானாக- வெளிப்படுகிறது! அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல், நாமாகவே நம் பேச்சாற்றலை, எழுத்தாற்றலை, மொழி ஆளுமையை வளர்த்துக் கொண்டால் நாம் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்தத் துறையில் விரைவிலேயே உச்சம் தொடலாம்!

பொதுவாக, மொழி ஆளுமை என்பது அரசியல்வாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டும்தான் தேவை என்பது நம் நினைப்பு. ஆனால், இல்லை! வார்த்தைகளை நாம் எல்லோருமேதான் பயன்படுத்துகிறோம். எழுத்து வடிவிலோ, பேச்சு வடிவிலோ அன்றாடம் நாம் அனைவருமே அதைப் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம்.

நீங்கள் வேலை தேடுபவரா? நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற உங்களுக்குத் தேவை மொழி ஆளுமை. தொழில் செய்யப் போகிறீர்களா? உங்கள் செயல்திட்டம் (Project) பிறரைக் கவர உங்களுக்கு வேண்டியது, அதில் சரியான இடங்களில் சரியான சொற்களைப் பயன்படுத்தும் திறன்! அட, காதலிக்கப் போகிறீர்களா? இப்பொழுது உங்களுக்குத் தேவை உங்கள் உள்ளத்தில் உள்ளதை உடைத்துக் காட்டும் உண்மையான சொற்கள்!

திறமையை உணர்த்த, உறவுகளைப் பலப்படுத்த, உடன் பணியாற்றுபவர்களை ஊக்குவித்து வேலையை விரைவாக்க, திட்டங்களைச் செயல்படுத்த, செயல்பாடுகளில் வெற்றியடைய, துவண்டு கிடக்கும் நண்பனை ஊக்குவிக்க, தவறாகப் புரிந்துகொண்ட காதலியைச் சமாதானப்படுத்த, அழுகிற குழந்தையைச் சிரிக்க வைக்க, சிரித்துக் கொண்டிருக்கும் தங்கையை வெறுப்பேற்றி விளையாட... என வீட்டுக்குள்ளேயும், வெளியேயும், எல்லா இடங்களிலும், எப்பொழுதும் நமக்குத் தேவைப்படுபவை சொற்கள்!

ஓவியம், சிற்பம், நாட்டியம், சமையல் என மொழி ஆளுமை தேவைப்படாத பல துறைகள் இருக்கின்றனவே என நீங்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட துறைகளில் கூட, துறை சார்ந்த பணியை, கலையை நிகழ்த்துவதற்கு மொழி தேவைப்படாவிட்டாலும், அந்தத் திறமையைக் காசாக்கவும், தனக்கிருக்கும் அந்தத் திறமையை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் மொழி தேவைப்படுகிறது. பேச முடியாத மாற்றுத்திறன் வாய்ந்த நண்பர்கள் கூடத் தங்களுக்கென்று ஒரு செய்கை மொழியை வைத்திருக்கிறார்கள். ஆக, வார்த்தைகள் இங்கு அனைவரின் வாழ்க்கையிலும் நிரம்பி வழிகின்றன. எனவே, அதன் மீதான ஆளுமை நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது! அப்படி அது இல்லாவிட்டால்...

எத்தனையோ திறமையாளர்கள், பிறவி அறிஞர்கள் தங்களுக்கு வர வேண்டிய நல்வாய்ப்புகளை இன்னொருவரிடம் பறி கொடுத்து விட்டு நிற்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் இதற்குக் காரணம், இவர்களுடைய வாய்ப்பைத் தட்டிப் பறித்தவர்கள் இவர்களை விடத் திறமையில் குறைந்தவர்களாக இருந்தாலும் வாய்த் திறனில் வல்லவர்களாக இருப்பதுதான்!

எத்தனையோ ஆண்டுகளாக நகமும் சதையுமாய்ப் பழகி வந்த நண்பர்கள் ஒற்றைச் சொல்லால் பிரிந்து விடுவதையும் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம். பிரியக் காரணமானது எப்பேர்ப்பட்ட சொல்லாக இருந்தாலும், உரிய நேரத்தில் மன்னிப்பு எனும் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் அந்த அரிய உறவை நீட்டித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாததால் கடைசி வரை நினைவாலேயே வாடுகின்றன எத்தனையோ அன்புள்ளங்கள்!

தொடக்கத்தில், வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் சாதிக்கக்கூடியவை பற்றிப் பார்த்த நமக்கு, வார்த்தைகளைத் தேவையான நேரத்தில் பயன்படுத்தாமல் விடுவதாலோ, தவறாகப் பயன்படுத்துவதாலோ விளையக்கூடிய விபரீதங்களை இவை எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே, எக்காரணம் கொண்டும் பேசத் தயங்காதீர்கள்! நாம் எந்தத் துறையில் இருந்தாலும் நம் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வது நம் திறமைக்குத் துணை நிற்கும்.

எனவே பேசுங்கள்!... பேசுங்கள்! வாய் திறந்து, பேனா திறந்து, இணையம் திறந்து கூடவே இதயம் திறந்து பேசுங்கள்! தெளிவாக, கூர்மையாக, உறுதியாக அதே நேரம் மென்மையாக, உண்மையாகப் பேசுங்கள்! பேச்சாற்றலை வளர்க்கிற, எழுத்தாற்றலைக் கற்பிக்கிற, மொழி ஆளுமையை மேம்படுத்தக்கூடிய வழிகாட்டல் நூல்களைப் படியுங்கள்! இவை செலவு அல்ல, வெற்றிகரமான, இனிமையான வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடுகள்!

ஏற்கெனவே பார்த்தது போல் பேச்சு, இயற்கை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கும் இலவசமான பேராயுதம்! அதைச் சரியான நேரத்தில், சரியானபடிப் பயன்படுத்தினால், ஆக்கவும் அழிக்கவும் அதை விடப் பெரிய ஆயுதம் வேறில்லை! அதை வீணடித்து விடாதீர்கள் மச்சிகளா!

- பகிர்வேன்...

பதிவு பிடித்திருக்கிறதா? அப்படியானால், கீழ்க்காணும் சமூக ஊடகங்களின் பொத்தான்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிருங்களேன்! அப்படியே உங்கள் கருத்தை அறியவும் ஆவல்! கீழே கருத்துப்பெட்டி காத்திருக்கிறது! உங்கள் மனதில் இருப்பதைத் தெரிவியுங்களேன்!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.