பாலு மகேந்திராவின் வீடு | மறக்க முடியாத தமிழ் சினிமா (2) - ராகவ்

Veedu Movie

சினிமா என்பது அழகியல் மொழி. இந்த மொழியைத் தமிழ் சினிமாவில் தனது பாணியில் புதிய அணுகுமுறையில் சொல்லியவர் பாலு மகேந்திரா.

உடலால் மறைந்தாலும், படைப்பால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கலைஞர் ஆகச் சிறந்த படைப்புகளை நமக்கு அளித்துள்ளார். இவர் நடித்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘தலைமுறைகள்’ படம் தந்தை, மகனுக்கிடையேயான பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்துவதாக இருந்தது.

"நமது தமிழ்ப்படங்களை வெளிநாட்டினர் பார்த்தால் காதலைத் தவிர நமது நாட்டின் இளைஞர்களுக்குப் பிரச்சினை வேறேதுமில்லை என்று எண்ணுவார்கள்" என்பார் பாலு மகேந்திரா. காதல், ஆக்ஷன் என அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினையை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திரா ஆரம்ப நாட்களில் மலையாள சினிமாக்களில் பணியாற்றியவர். இப்படங்களின் தாக்கமோ என்னவோ, இவரால் தமிழில் மிகச் சிறந்த படங்களைக் கொடுக்க முடிந்தது.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இருக்கும் ஒரே கனவு சொந்தமாக ஒரு வீடு வாங்குவது.

“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்” என்பார்கள். கல்யாணத்தைக் கூட சிம்பிளாக ரிஜிஸ்டர் அலுவலகத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் வீட்டை இன்றைய தினத்தில், பல லட்சங்களைச் செலவு செய்துதான் கட்ட வேண்டும். மிடில் கிளாசின் இந்தக் கனவிற்கும், யதார்த்தத்திற்கும் இடையேயான போராட்டம்தான் இந்த ‘வீடு’. வீட்டு வாடகை தரும் பணத்தில் கடன் வாங்கி, சொந்தமாக வீடு கட்டும் ஒரு நடுத்தரக் குடும்பம், கட்டி முடிப்பதற்குள், ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டத்தைச் சந்திப்பார்கள். வீடு கட்டும் மேஸ்திரி செங்கல் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி மாட்டிக் கொள்வது யதார்த்தத்திற்கு ஓர் உதாரணம்.

பானுசந்தரும் அர்ச்சனாவும் நடித்திருக்க மாட்டார்கள், வாழ்ந்திருப்பார்கள். சொக்கலிங்க பாகவதர் என்ற எண்பது வயது முதியவரை அறிமுகப்படுத்தியிருப்பார் பாலு மகேந்திரா. ஒரு தாத்தாவின் கனிவு, அன்பு, நெகிழ்வு என்று பல நுண்ணிய உணர்வுகளைத் தனது கண்களால் அழகுடன் வெளிப்படுத்தியிருப்பார் பாகவதர். பேத்திகள் துவண்டு போகும்போது ஆறுதல் தருவதும், பொக்கை வாயில் குழந்தை போலச் சிரிப்பதும் என்று பாகவதரை நன்றாக நடிக்க வைத்திருப்பார் இயக்குநர்.

வீடு கட்டி முடிக்கப்படும் தறுவாயில் வீடு கட்டியுள்ள இடம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது, அதிகாரிகளின் அலட்சியத்தாலும் பேராசையாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தெரிய வரும். நீதிமன்றத்தில் படிகளில் இறங்கி வருவதுடன் படம் முடிவடையும்.

சமீப காலங்களில் ரியல் எஸ்டேட் மோசடி, போலிப் பத்திரங்கள் தயார் செய்து வீட்டை அபகரிப்பது போன்ற விஷயங்களை நிறையவே பார்க்கிறோம். இவை அதிகமாக இல்லாத 26 ஆண்டுகளுக்கு முன்பே இப்பிரச்சினைகளைப் பற்றி சினிமாவில் சொன்ன தீர்க்கதரிசி பாலு மகேந்திரா.

தேசிய விருது பெற்ற ‘வீடு’ படம் பாலு மகேந்திராவின் மற்ற படைப்புகளில் தலையாய படைப்பு! தமிழர்களாகிய நாம் வீடு கட்டும்போதும், வீடு வாங்கும்போதும் பாலு மகேந்திரா செல்லுலாய்டில் கட்டிய வீடு நினைவில் வந்துபோவது தவிர்க்க முடியாதது.

--ஓ.கே கட்!
படைப்பு
 ராகவ்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.