தமிழர்கள் பற்றி காந்தியடிகள்

Gandhiji and his Tamil Signature

மிழர்களுடனான காந்தியடிகளின் உறவு மிகவும் நெருக்கமானது. தென்னாப்பிரிக்காவில் அவர் தங்கியிருந்தபொழுது அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் பெரும்பாலோர் தமிழர்கள். தனக்குத் தெரிந்த ஓரளவு தமிழை வைத்துக் கொண்டு அங்கிருந்த தமிழ்க் குழந்தைகளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்திய அனுபவமெல்லாம் காந்தியடிகளுக்கு உண்டு! இந்த உறவு கடைசியில் எந்த அளவில் போய் நின்றது எனக் கேட்டால், தமிழர்களுக்காகவாவது தமிழைக் கற்றுக் கண்டாக வேண்டும் என அவர் ஆவல் கொள்ளும் அளவுக்கு. அதைப் பற்றி அவரே எழுதியிருப்பதை இதோ படித்துப் பாருங்களேன்!

"தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த திராவிடர்கள் என்மீது பொழிந்த அன்பு, இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்து வருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர் ஒருவரை நான் காணும்போது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர்களுடைய இனத்தினரான தமிழரும் தெலுங்கரும் காட்டிய விடாமுயற்சியையும் தன்னலமற்ற தியாகத்தையும் நினைக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்து வாசனையே இல்லாதவர்கள். அவர்கள் பெண்களும் அப்படியே. இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே தென்னாப்பிரிக்கப் போராட்டம். எழுதப் படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர்; ஏழைகளுக்காக நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப் பங்கும் வகித்தனர். என் நாட்டினரான கள்ளங் கபடமற்ற அந்த நல்ல மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுவதற்கு, அவர்களுடைய மொழி எனக்குத் தெரியாதது ஓர் இடையூறாக இருந்ததே இல்லை. அரைகுறை ஹிந்துஸ்தானியோ, அரைகுறை ஆங்கிலமோ அவர்கள் பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள் வேலைகளைச் செய்து கொண்டு போவதில் எங்களுக்குக் கஷ்டமே தோன்றியதில்லை. ஆனால், அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு நன்றியறிதலாகத் தமிழும் தெலுங்கும் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்று விரும்பினேன். முன்பே நான் கூறியது போல், தமிழ்க் கல்வியில் கொஞ்சம் அபிவிருத்தியடைந்தேன். ஆனால், இந்தியாவில் தெலுங்கு கற்றுக் கொள்ள முயன்றும் நான் நெடுங்கணக்கைத் தாண்டி அப்பால் போகவில்லை. இம்மொழிகளை நான் இனி கற்றுக் கொள்ளவே முடியாது என்று இப்பொழுது அஞ்சுகிறேன்."

- சத்திய சோதனை, ‘தாய்நாடு நோக்கி’ பகுதியிலிருந்து.
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.