பூமி கண்ணைக் குத்தும்! | மச்சி! நீ கேளேன்! (3) - இ.பு.ஞானப்பிரகாசன்

சாபூமி கண்ணைக் குத்தும்!
‘டைட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ மாட்டோமோ என்று எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நாயகனையும் நாயகியையும் துப்பாக்கியால் சுட்டபடி துரத்திக் கொண்டு ஓடுவான் அந்த வில்லன்!

அதைப் பார்க்கும்பொழுது, ‘நாம இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்போம்னே தெரியாத நேரத்துல கூட அடுத்தவங்களை வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டுத் திரியறான் பாரு’ என்று அவன் மேல் நமக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும். ஆனால், இன்றைய உலகில் நாம் எல்லோருமே ஏறத்தாழ அப்படித்தான் நடந்து கொள்கிறோம் எனச் சொன்னால்...

வியக்க வேண்டாம்! இப்படி நான் சொல்லக் காரணம் நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மை!...

புவி வெப்ப உயர்வால் உலகம் வெகு வேகமாக வெந்து கொண்டிருக்கிறது! இமயமலை உருகுகிறது! துருவப் பகுதிகள் உருகி ஓடுகின்றன! பல்லாயிரம் ஆண்டுகளாகப் பனிப் போர்வைக்குள்ளேயே மறைந்திருந்த பல பனிமலைகள் இன்று வெளியே எட்டிப் பார்த்து நம்மை எச்சரிக்கின்றன! “ஐயா! என் கெணத்தைக் காணோம்” என வடிவேல் சொல்வது போல, “அண்மையில்தானே பார்த்தோம் இங்கே பெரிய பெரிய பனிப் பாளங்களை! எங்கே அவை?” என அலறுகிறார்கள் சூழலியலாளர்கள் (ecologists)! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இமயக் குளிர்நீர்க்கோள்’ (Himalayan Tsunami) எனும் பெயரில், உலகம் எப்படி அழியப் போகிறது என்பதற்கு ஒரு குட்டி முன்னோட்டமே (Trailer) காட்டி விட்டது இயற்கை!

ஆனால் நாம் இன்னும் சாதி, மொழி, மதம், இனம், மாநிலம், நாடு என ஏதாவது ஒன்றின் பெயரால் அடுத்தவரிடம் சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்! மக்களுக்குள் எவ்வளவுதான் பிரிவினைகள் இருந்தாலும், எல்லாரின் உரிமைக்கும், வாழ்வுக்கும் பிரச்சினை என வரும்பொழுது அனைவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால், உயிருக்கே ஆபத்து, உலகமே அழியப் போகிறது என்கிற நிலைமை வந்தும் நாம் இன்னும் ஒன்றுபடாவிட்டால் இனியும் எப்பொழுதுதான் திருந்தப் போகிறோம்?

ஆம்! உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் அடுத்தவருடன் கைகோத்துச் சுற்றுச்சூழலையும் இயற்கையையும் காப்பாற்றுவதற்கான பணிகளில் மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, “இன்னும் சில ஆண்டுகளில், தமிழ்நாட்டில் குடிநீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டி வரும்” என்று யாராவது சொல்லியிருந்தால் நாம் அவரை ஏற இறங்கப் பார்த்திருப்போம். இன்று, “இன்னும் சில ஆண்டுகளில், மக்கள் ஆக்சிசன் சிலிண்டரோடு அலைய வேண்டி வரும்” எனச் சிலர் கூறி வருகிறார்கள். நாம் அதையும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு, கூடவே காது குடைந்த பிளாச்டிக் குச்சியையும் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறோம். எப்பொழுது மாறப் போகிறோம் நாம்?

தனி மனிதர்களை மட்டும் சொல்லவில்லை, குறிப்பாக நாடுகள்தான் இதில் கடும் கண்டனத்துக்குரியவை!

ஆற்று மணல் கொள்ளை முதல் அணுமின் நிலையம் வரை எதையுமே தடுக்க முயலாத இந்தியா போன்ற நாடுகள் முதல் பெருமுதலாளிகள் சிலரின் இலாபங்களுக்காக உலகமே அழிந்தாலும் அழியட்டும் எனக் கியோட்டோ ஒப்பந்தத்தை வெற்று வேட்டாக்கிய மேலை நாடுகள் வரை அனைவரிடமும் நமக்கு எழும் ஒரே கேள்வி, “இப்படி மொத்த பூமியையும் அழித்துச் சம்பாதிக்கும் பணத்தை எந்தக் கோளில் கொண்டு போய்ச் செலவு செய்யப் போகிறீர்கள்?”

ஆமாம் மச்சி! ஆள்பவர்கள் மட்டுமில்லை, நாமும் இன்று சிந்திக்க வேண்டியது இதுதான். எவ்வளவுதான் கோடி கோடியாகச் சேர்த்து வைத்தாலும் அவற்றை அனுபவிக்க நாளைக்கு நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் தேவை ஒரு பூமி! அதை எவ்வளவுக்கு, எந்தப் பன்பொருள் அங்காடியில் (Super Market) அல்லது இணையத்தளக் கடையில் வாங்கப் போகிறோம்? வாய்ப்பே இல்லை!

நாம் மாறியே ஆக வேண்டும்! வேறு வழியே கிடையாது!

“நீ உயிரோடிருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்” என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்யத்தான் முயல்வோம் இல்லையா? அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மாறாவிட்டால் துளியும் தயங்காமல் தள்ளி விட்டு விடும்.

ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் கிடக்கட்டும். முதலில், தனி மனிதர்களாகிய நாம் மாறுவோம்! பூமி நம் கண்ணைக் குத்தும் முன் நாமாகவே விழித்துக் கொள்வோம்!

இயற்கை சார் வாழ்வு

பிளாச்டிக் போன்ற செயற்கைப் பொருட்களை முடிந்த அளவு தவிர்த்து இயற்கைப் பொருட்களையே நாடுவோம்! அவற்றையும் குறைவாகச் செலவிடுவோம்! செயற்கைப் பொருட்களைத் தவிர்த்தால் மக்காத குப்பைகள் உருவாகாது. இயற்கைப் பொருட்களை ஒரேயடியாகச் செலவழித்துத் தீர்த்து விடாமல் குறைவாகப் பயன்படுத்தினால்தான் தொடர்ச்சியாக அவை நமக்குக் கிடைக்கும்.

சிக்கனம்

தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என எதுவாக இருந்தாலும், ஆம்... எதுவாக இருந்தாலும் முடிந்த அளவுக்குச் சிக்கனம் செய்வோம்! பயன்பாட்டைக் குறைக்கக் குறைக்க உற்பத்தியின் அளவு குறையும். அஞ்சாதீர்கள், அளவுதான் குறையும்; உற்பத்தி நின்றும் விடாது, யாருடைய வேலைவாய்ப்புக்கோ தொழிலுக்கோ இதனால் பாதிப்பும் இருக்காது.

குப்பை மேலாண்மை

ஆண்டுக்கு ஒருமுறை கைப்பேசியை மாற்றுவது முதல் வீட்டுக் குப்பையை வெளியில் கொட்டிவிட்டுக் காசு கொடுத்து உரம் வாங்குவது வரை எல்லா வீணடிப்பையும் நிறுத்துவோம்! குப்பை போடுவது குறையக் குறையத்தான் நிலம், நீர், காற்று எல்லாம் தூய்மையடையும்.

விழிப்புணர்தல்

புவி வெப்பமாதலைத் தடுக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை எப்படி இயற்கை சார்ந்து அமைத்துக் கொள்வது எனக் கற்பிக்கும் நூல்கள், இதழ்ப் படைப்புகள், இணையப் பதிவுகள் ஆகியவற்றைத் தேடித் தேடிப் படிப்போம்! கல்வி கற்பது, வேலை செய்வது போன்றவற்றைப் போல உயிர் வாழ்வதற்கு இதுவும் இன்றியமையாதது என்பதை உணர்வோம்!

விழிப்புணர்த்தல்

இது பற்றி மற்றவர்களிடமும் விழிப்புணர்வு தூவுவோம்! பேச்சு, எழுத்து, இணையப் பகிர்வு, நூல்கள் – இதழ்கள் - துண்டு வெளியீடுகள் போன்றவற்றை இரவல் கொடுப்பது, சூழலியல் (Ecological) போராட்டங்களில் கலந்து கொள்வது என முடிந்த வழிகளிலெல்லாம் இதைப் பரப்புவோம்! நாம் மட்டும் மாறினால் போதாது. உலகம் கூடி இழுக்க வேண்டிய தேர் இது! நம்மைச் சுற்றியிருப்பவர்களும் மாறினால்தான் நாம் மாறியதற்கான பலன் நமக்குக் கிடைக்கும்.

அவ்வளவுதான், இந்த ஐந்தே ஐந்து நெறிகளைக் கடைப்பிடிக்க முடியாதா நம்மால்? நினைத்துப் பார் மச்சி!

இப்படி, மக்களாகிய நாம் மாறினால் ஆட்சியாளர்களும் மாறித்தானே ஆக வேண்டும்? நம்முடைய எண்ணிக்கை கூடுதலா பெருமுதலாளிகளின் எண்ணிக்கை கூடுதலா? நாம் அவர்களை நம்பி வாழ்கிறோமா அவர்கள் நம்மை நம்பி வாழ்கிறார்களா? நம் வாழ்க்கை முறையால்தான், நாம் பயன்படுத்துவதால்தான் கண்ட கண்ட பொருட்களையெல்லாம் இயற்கையைச் சீரழித்துப் பெருநிறுவனங்கள் உருவாக்குகின்றன. அப்படிப்பட்ட தங்கள் தொழில் பாதிக்காமல் இருக்கத்தான் அந்த நிறுவனங்கள் ஆட்சியாளர்களையும் ஆட்டுவிக்கின்றன. எனவே, நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், நாம் வாங்குவதை நிறுத்தினால், நாம் விழிப்புணர்வு பெற்று விட்டால் அவர்களும் தங்கள் கடையை மூடிவிட்டுப் போய்த்தான் ஆக வேண்டும்! 

மாறுவோம்! மாற்றுவோம்!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.