திருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்

Thiruvilayadal Dharumi Scene

மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்படங்களும் நாத்திக - பகுத்தறிவுக் கருத்துக்களைக் கொண்டிருந்தன. இக்கருத்துக்களை மாற்றி மக்களிடையே ஆன்மிக பக்திக் கருத்துக்களை சினிமாவில் சொல்ல முயற்சித்தவர் இயக்குநர் A.P.நாகராஜன்.

தமிழ் பக்தி இலக்கிய சித்தாந்தங்கள் உபன்யாசமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியிலேயே சொல்லப்பட்டு வந்த காலக்கட்டத்தில், மக்களின் ஊடகமான சினிமாவில் எளிமையாக அதைச் சொன்னவர் A.P.நாகராஜன். இவர் பல பக்திப் படங்கள் இயக்கியிருந்தாலும் மிகச்சிறந்த படமாக, இல்லையில்லை காவியமாகக் கொண்டாடப்படுவது ‘திருவிளையாடல்’.

தமிழ் சைவ பக்தி இலக்கியத்தில் சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படுவதில் நான்கு திருவிளையாடல்களை மிகவும் சுவாரஸ்யமாகவும், நேர்த்தியான திரைக்கதையுடனும் சொல்லியிருப்பார் இயக்குநர்.

திருவிளையாடல் வெளியான ஆண்டு 1965. அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது வென்ற இந்தப் படம், அதன் பிறகு இந்த ஐம்பதாண்டுகளில், தமிழகத்தின் மார்கழி மாத அதிகாலைப் பொழுதுகளைத் தனது வசனங்களாலும் பாடல்களாலும்தான் விடியச் செய்திருக்கிறது. இன்றளவும் மார்கழி மாதம் மற்றும் திருவிழா நாட்களில் கோவில்களிலிருந்து ஒலிபெருக்கி வழியாகத் திருவிளையாடல் நமது காதுகளுக்கு வந்துகொண்டேயிருக்கிறது.

தனக்குக் கிடைத்த அபூர்வமான பழத்தைத் தனது குழந்தைகளான முருகனுக்கும் விநாயகருக்கும் தர நினைக்கும் சிவபெருமான், இருவரிடமும், முதலில் உலகைச் சுற்றி வருபவர்களுக்கே பழம் என்கிறார். முருகப் பெருமான் மயிலேறி உலகம் சுற்றச் சென்றவுடன், விநாயகர் தாய்-தந்தையை உலகமாக நினைத்துச் சுற்றி வந்து பழத்தைப் பெற்று விடுகிறார். திரும்பி வந்த முருகப் பெருமான், பழம் தனக்குக் கிடைக்காததைக் கண்டு கோபமடைந்து பழநிமலைக்குச் சென்று விடுகிறார். கோபமடைந்த முருகனிடம் தாய் பார்வதிதேவி சிவபெருமான் அன்புமிகுதியால் நிகழ்த்திய நான்கு திருவிளையாடல்களைச் சொல்லிக் கோபம் தணிப்பதாக, இப்படத்தில் திரைக்கதையை உருவாக்கியிருப்பார் இயக்குநர்.

படத்தில் சிவாஜி, சாவித்திரி, முத்துராமன், A.P.நாகராஜன், கே.பி.சுந்தராம்பாள் எனப் பலர் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பலராலும் பாராட்டப்பட்ட நடிப்பு தருமியாக நடித்த நாகேஷ், ஹேமநாத பாகவதராக நடித்த பாலையா ஆகியோருடையது.

கோவிலில் கவிஞராக வரும் சிவனிடம் “எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்” என்பதும், “அவன் வரமாட்டான்” எனப் புலம்புவதும் என டயலாக்கிலும், தனித்துவமான உடல்மொழியிலும் பின்னி எடுத்திருப்பார் நாகேஷ். வறுமையிலும் ஒரு வித நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தத் திறமை பெற்றவர் சார்லி சாப்ளின். இதே போல வறுமையில் வாழும் தருமியின் இயலாமையின் காரணமாக வரும் நகைச்சுவையை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ். சிவபெருமானின் கவிதையைத் தனது கவிதை என்று சொல்லி அரசசபையில் மாட்டி கொண்டு, ‘பாட்டில் பிழையிருந்தால் அதற்கேற்றாற்போல் பொற்காசுகளைக் குறைத்துக் கொண்டு, மீதியைத் தாருங்கள்’ என்று நாகேஷ் சொல்வது நகைச்சுவையின் உச்சம்.

‘ஒருநாள் போதுமா’ என்று ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவின் நடிப்பு ஆர்ப்பாட்டமானது. இறுமாப்பு, தலைக்கனம், அலட்சியம் எனப் பலவித நடிப்பைக் கண்களாலேயே பதிவு செய்திருப்பார் பாலையா.

தமிழ் சினிமாவின் ஔவைப் பாட்டி கே.பி.சுந்தராம்பாள் கோபப்படும் முருகக்கடவுளை ஆறுதல்படுத்தி, ‘ஆறுவது சினம்’ என ஆத்திசூடி பாடுவார். இவரின் நடிப்பு வீட்டில் கோபப்படும் பேரனை சாந்தப்படுத்தும் பாட்டியைப் போல இயல்பானதாய் இருக்கும்.

ஒரு தகப்பனின் கோபம், கண்டிப்பு, பரிதவிப்பு, அன்பு, ஆதங்கம் எனப் பலவித நடிப்புகளை வாரி வழங்கியிருப்பார் சிவாஜி.

சாவித்திரியின் தாய்மை உணர்வு, சிவாஜியின் கம்பீரம், A.P.நாகராஜனின் நேர்மை கலந்த கோபம், பாலையாவின் வித்யா கர்வம், நாகேஷின் வறுமை கலந்த காமெடி, முத்துராமனின் அரச கம்பீரம் எனப் பலவித நடிப்புப் பரிணாமங்களைக் காட்டியது திருவிளையாடல். ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்குப் பல்வேறு விஷயங்களைக் கொண்டது இப்படம். 


‘தமிழ், தமிழ்’ என்று இன்று முழங்கும் ஒரு சில சினிமாக்காரர்கள், சினிமாவில் தமிழின் அழகியலைப் பதிவு செய்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. ஆனால், திருவிளையாடல் படத்துக்கான கதை, திரைக்கதை, உரையாடல் அனைத்தையும் எழுதி, இயக்கி, முக்கியமான நக்கீரர் வேடத்திலும் நடித்து, படத்தைத் தானே தயாரித்துத் தமிழ் அழகியலைச் செவ்வனே பதிவு செய்திருக்கிறார் A.P.நாகராஜன். சிவபெருமான், தருமி, நக்கீரர், தட்சன் எனப் பல சைவ இலக்கிய கேரக்டர்களை செல்லுலாய்டில் உலவ விட்டிருக்கிறார். சினிமாவையும் தாண்டி இயக்குநர் தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் மிகச் சிறந்த தொண்டு திருவிளையாடல்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் நாகேஷும், சிவாஜியும், பழநிக்குச் செல்லும்போது கே.பி.சுந்தராம்பாளும் நம்மை அறியாமல் நம் நினைவுகளில் வருவார்கள். இப்படத்தின் தாக்கமே இதற்குக் காரணம். திருவிளையாடல் திரைப்படம் தமிழனின் பெருமை, அடையாளம். அனைத்தையும் விட உலக அளவில் நமக்குக் கிடைத்த கலாச்சார கம்பீரம்!
--ஓ.கே கட்!


படைப்பு
 ராகவ்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.