ஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ்

MGR's Aayirathil Oruvan
றைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் பார்க்கவில்லை, இதயத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். திரையில் நல்ல பல விஷயங்களைச் சொன்னதாலேயே இன்றளவும் ‘வாத்தியார்’ என்று மக்களால் போற்றப்படுபவர் அவர். 1965ஆம் ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. தமிழ்நாட்டின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த படம்.

எம்.ஜி.ஆர் தனது நெய்தல் நாட்டில் மருத்துவராக இருப்பார். அந்நாட்டு மன்னன் சர்வாதிகார எண்ணம் கொண்டவன். சர்வாதிகாரத்துக்கு அடிபணியாத மக்கள் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்வார்கள். புரட்சியாளன் ஒருவனுக்கு உதவி செய்கையில், மன்னரின் படையிடம் சிக்கிக் கொள்வார் எம்.ஜி.ஆர். கோபமடைந்த மன்னன் எம்.ஜி.ஆரைப் புரட்சிக் கூட்டத்துக்குத் தலைவர் என்று தீர்மானித்து எம்.ஜி.ஆர் அண்ட் டீமைக் கன்னித்தீவில் அடிமைகளாக விற்று விடுவான். தன் குழுவோடு, அத்தீவை மேம்படுத்தக் கடுமையாக உழைப்பார் எம்.ஜி.ஆர். ஆயினும் சரியான அங்கீகாரமோ விடுதலைக்கான வாய்ப்போ கிடைக்காது. கோபப்படும் குழுவினரை சமாதானப்படுத்தப் பல வழிகளைக் கையாளுவார். நல்ல அறிவுரைகளைப் பாடலாகப் பாடிப் புரிய வைப்பார். “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” எனத் தொடங்கும் பாடல் வரிகள் அதிகார ஆணவத்தில் ஆடும் பலருக்குச் சவுக்கடி தருவது போல இருக்கும்.

இப்பாடலில் வரும் “ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே! வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் ஒரு நாளில், சில மாதங்களில் எட்டுவதற்குரிய விஷயம் அல்ல. தொடர் போராட்டம்! நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்துளிகளின் விளைவாகக் கிடைத்தது சுதந்திரம் என்பதை நமக்கு நன்கு புரிய வைக்கும் இந்தப் பாடல்.

படத்தில் நாகேஷின் உடல்மொழி பல காட்சிகளில் மிகப் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக, கூட யாருமே இல்லாமல் வெறும் மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு அவர் செய்யும் காமெடி அவருடைய மாஸ்டர் பீஸ்களில் ஒன்று!

நம்பியார் கடற்கொள்ளைக் கூட்டத்தலைவனாக மிரட்டி இருப்பார்! கிளைமேக்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ஹாலிவுட், சீனப் படங்களுக்கு இணையாக இருக்கும்!

இந்திய சினிமாவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன். இந்திய அளவில் மட்டுமில்லை, உலக அளவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று!

அப்போதைய தொழில்நுட்ப வசதிகளுடன் ஈஸ்ட்மென் கலரில், அழகிய கேமரா கோணங்கள் மற்றும் நேர்த்தியான கேமரா நகர்வுகளோடு பிரம்மாண்டத்தின் மகுடமாக இந்தப் படம் திகழ்ந்தது என்பதைத் திரையில் கண்டவர் அறிவர். டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்து 2014-இல் மீண்டும் வெளியிடப்பட்ட இப்படம், 175 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது! புதிதாக வெளியாகும் பல படங்கள் ஓரிரு நாட்களில், வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடும் சூழலில் ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் இந்தப் படம் வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடுவதிலிருந்தே எம்.ஜி.ஆருக்கு இன்றும் மக்கள் மீதுள்ள செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிக்கு இணங்கக் காலம் உள்ள வரை தமிழ் சமூகம் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.

எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவரில்லை, கோடியில் ஒருவர்!
--ஓ.கே கட்!

படைப்பு
 ராகவ்

கூடுதல் ஆர்வத்துக்கு:
எம்.ஜி.ஆர்.
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.