ஸ்டெர்லைட் படுகொலை! - நடந்த கொடுமையின் இணைய ஆவணம்!

Sterlite Massacre - Web evidences of the shootout
மே 22, 2018 - தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். தங்கள் உயிர் பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி விண்ணப்பம் கொடுக்கச் சென்ற ஏதுமறியா மக்களைத் தமிழ்நாடு அரசே சுட்டுக் கொன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!

இந்நிகழ்வில் வன்முறை, தீ வைப்பு என எல்லா இழிசெயல்களையும் காவல்துறையினரே செய்து விட்டு, மக்கள் மீது பழி சுமத்திக் கொலைவெறித் தாண்டவம் ஆடியிருக்கிறார்கள் எனப் போராட்ட இயக்கத்தவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் ஆதாரங்களும் அடுக்கடுக்காக வெளிவந்துள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களைப் பார்க்கச் செல்கிறேன் எனப் போன ரஜினிகாந்த் அவர்களோ, "போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள். அதனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது" என்று நேரில் பார்த்தது போல் பேசியிருக்கிறார். 

நடந்தது என்ன என்பதைக் காட்டும் ஒளிப்படங்களும் காணொலிகளும் தொடர்ந்து மக்கள் பார்வையில் இருக்கும்பொழுதே இப்படி என்றால், இன்னும் ஓராண்டானால் தவறு முழுவதும் மக்கள் மீதுதான் என இவர்கள் நிறுவியே விடுவார்கள். அதைத் தடுக்கவே இந்தப் பதிவு! நடந்த கொடுமையை ஆவணப்படுத்தி வைப்பதுதான் கொடுமதியாளர்கள் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்க முதல் வழி என்பார்கள். அப்படி ஒரு முயற்சிதான் இது! தூத்துக்குடிப் போராட்டம் குறித்து இணையத்தில் வெளிவந்த ஒளிப்பட, காணொலி ஆதாரங்களில் முக்கியமான சிலவற்றை மட்டுமாவது நிலையாகப் பார்வைக்கு வைக்க விரும்பி இங்கே பட்டியலிட்டுள்ளோம். தவிர, போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறைக்கான ஆதாரங்கள் எனும் பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் நச்சுப் பொய்கள் சிலவற்றுக்கான விளக்கங்களும் இங்கு அளிக்கப்படுகின்றன. 
 
இது வெறும் பதிவு இல்லை! ஸ்டெர்லைட் படுகொலை என்னும் அரசுத் தீவிரவாதம் (state terrorism) தொடர்பான ஆதாரங்களின் குறுந்தொகுப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தமிழ் மக்கள் செய்த உயிர்த் தியாகம் குறித்த இணையக் கல்வெட்டு! 

The policemen who shot and killed the people in Tuticorin massacre have took a photo with the district collector in the same dress

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவலர்களாகக் கருதப்படுவோர் தூத்துக்குடியின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷுடன் தோன்றும் படம். துப்பாக்கிச் சூட்டின்பொழுது தாங்கள் அணிந்திருந்த அதே உடையில் இவர்கள் படமெடுத்துக் கொண்டிருப்பது, இது முன்கூட்டிய நன்கு திட்டமிடப்பட்ட படுகொலை என்கிற குற்றச்சாட்டுக்கு அசைக்க முடியாத வலுக்கூட்டுவதாக உள்ளது.


அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை நோக்கிக் காவலர் ஒருவர் கல் வீசுவதும், உடனே எதிர்வினையாக இளைஞர் ஒருவர் தானும் கல்லை எடுப்பதுமான காட்சியைக் கொண்ட காணொலி மேலே. அமைதியாக இருக்கும் மக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி, அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எதிர்த்தவுடன் வன்முறையாளர்கள் என முத்திரை குத்தி உயிரைப் பறித்து விட்டதாகக் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக இந்தக் காணொலி அமைந்துள்ளது.


 
ஊடகங்களில் ஒளிபரப்பாகி உலகமே கண்டு அதிர்ந்த இரண்டு காணொலிகள் இவை.  துப்பாக்கிச் சூடு நடத்தும் காவலர்கள் சீருடையில் இல்லாமல் பொது உடையில் இருப்பது, கலவரத்தை அடக்கப் பயன்படுத்தும் வழக்கமான துப்பாக்கியால் இல்லாமல் ஆற்றல் மிகுந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது, இடுப்புக்குக் கீழே சுட வேண்டும் என்கிற நெறிமுறைக்கு மாறாக உயரமான இடத்திலிருந்து குறி வைத்துச் சுடுவது, "ஒருத்தனாவது சாகணும்" என்று சொல்லிக் கொண்டே சுடுவது என இந்தக் காணொலிகளில் பதிவான காட்சிகள் எழுப்பும் சர்ச்சைகள் கொஞ்சநஞ்சமல்ல. 


இளைஞர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குண்டடிபட்டு விழுந்து கிடக்கும் அவரை நோக்கி "ஏய்! ரொம்ப நடிக்காத போ" என்று வெறித்தனத்தின் உச்சத்தில் நின்று காவலர்கள் பேசும் கொடூரக் காட்சி!கும்பலாக நிற்கும் காவல்துறையினர் எதையோ கொளுத்திப் போடும் காட்சி!


சிறுவன் ஒருவனைக் காவல்துறையினர் வீட்டுக்குள்ளிருந்து வெளியே இழுத்து வந்து அடித்துத் துன்புறுத்தும் கொடுமையான காட்சி!

இதுவரை தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய அட்டூழியங்களைப் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது, போராட்டக்காரர்கள் (நாட்டுப்பற்றாளர்கள் மொழியில் - வன்முறையாளர்கள்) நடத்திய அட்டூழியங்கள் என இணையத்தில் பரவும் ஓரிரு காணொலிகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் பார்ப்போம்.


மேலே உள்ள காணொலியை டிவிட்டரில் வெளியிட்டவர், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறையினர் கலவரக்காரர்களின் மிகப் பெரிய ஊர்தியால் விரட்டப்படுவதாகவும், காவலர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதாகவும் வருணித்துள்ளார். ஆனால் அதுதான் நடக்கிறதா என நீங்களே பாருங்கள்! ஊர்திக்கு முன்னால் உள்ள காவலர்கள் மட்டுமில்லை அதற்குப் பின்னாலும் இடப்புறத்திலும் உள்ள மக்கள் கூட ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கலவரம் என்றால் எல்லாரும் எப்படி ஓடுவார்களோ அப்படித்தான் அந்தக் காவலர்களும் ஓடுகிறார்களே ஒழிய, மிகப் பெரிய வண்டி விரட்டிக் கொண்டு வரும்பொழுது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவது போல அவ்வளவு வேகமாக அவர்கள் ஓடவில்லை. மேலும், பின்னால் வண்டி வருவது தெரிந்தவுடன் காவலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழிவிட்டு ஒதுங்க, அந்த ஊர்தியும் எதிர் ஓரமாக ஒதுங்கிப் போய்விடுவது கண்கூடாகத் தெரிகிறது. கொல்லும் நோக்கத்தோடு அந்த ஊர்தி ஓட்டப்பட்டு வருவது உண்மையானால் காவலர்களை விட்டு ஏன் அது விலகிச் செல்ல வேண்டும்? 

அடுத்து இதே போல் இன்னொன்று!


இதற்கு முன் உள்ள காணொலியை வெளியிட்ட அதே அரிச்சந்திரனால் பரப்பப்படுவதுதான் இதுவும். இதற்கு அவர் அளித்துள்ள உரை, "இரக்கமின்றித் தாக்கப்பட்ட காவலர் ஒருவர் போக்கிரி ஒருவனால் தூக்கிச் செல்லப்படுகிறார்" என்பது. உண்மையில் தூக்கிக் கொண்டு போவது நான்கு பேர்! அதுவும் தூக்கிப் போகிறவர்களில் முதலில் செல்பவர் அந்தக் காவலரைத் தாக்க வருகிறவர்களை மறித்து அப்படிச் செய்யக்கூடாதெனத் தடுத்துக் காப்பாற்றி அவரைக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிகிறது. தவிர, தூக்கிப் போகிறவர்களில் பின் வரிசையிலுள்ளவர் அந்தக் காவலரின் முகத்தைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு செல்கிறார். உண்மையிலேயே ஒருவரை அடித்துத் தாக்கித் தூக்கிச் செல்பவர்கள் இப்படித்தான் செய்வார்களா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்!

முத்தாய்ப்பாக ஒரே ஒரு காணொலி!


மேற்கண்ட காணொலியில் இளைஞர்கள் சிலர் கலவரத்தில் காயம்பட்டுக் கிடக்கும் காவலர் ஒருவரைக் காப்பாற்றித் தூக்கிச் செல்வதைக் காணலாம். ஒருவேளை இதற்கு முன் உள்ள காணொலியில் காவல்துறையைச் சேர்ந்தவரை அடித்துத் தூக்கிச் செல்லும் அந்தக் கலவரக்காரர்களும் (!) காவலரும் இவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆக, இப்படித் தங்களைச் சிட்டுக்குருவிகளைப் போல் சுட்டுக் கொலை செய்த காவலர்களைக் கூடக் காப்பாற்றும் இவர்களைத்தாம் கலவரக்காரர்கள், போக்கிரிகள், வன்முறையாளர்கள், சமூக விரோதிகள், விசக் கிருமிகள் எனவெல்லாம் வருணிக்கிறது நாட்டுப்பற்றாளர்கள் எனும் போர்வையில் திரியும் ஒரு கும்பல். இப்படிப்பட்ட கும்பலின் தலைவர் எனும் முறையில்தான் அப்படிப்பட்ட அரிய கருத்து முத்துகளை உதிர்த்திருக்கிறார் புதிய அரசியல்வாதியான ரஜினிகாந்த் அவர்கள்!

அது சரி, இப்படிப்பட்ட நீங்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்றால் அப்படிப்பட்ட நாங்கள் வன்முறையாளர்கள்தானே?!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.