இலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா? பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்! | மச்சி! நீ கேளேன்! (4) - இ.பு.ஞானப்பிரகாசன்

Unemployment problem of Engineering - What is the solution?
‘வேலையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’!

ஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள் இருக்கின்றன, துறையின் எதிர்காலம் எப்படி, உலகநாடுகளின் பொருளாதார வீழ்ச்சி எப்படிப்பட்ட பாதிப்புகளை அதில் ஏற்படுத்தும் என எந்தக் கணக்கும் பார்க்காமல், திருவிழாவில் தண்ணீர்ப் பந்தல் திறப்பது போல் நாடெங்கும் எவன் வேண்டுமானாலும் பொறியியல் கல்லூரி திறக்க ஒப்புதலளிக்கும் அரசுகள்...

வேலைவாய்ப்புக் கிடைக்காத பொறியாளர்கள் ஏற்கெனவே 1.8 கோடி பேர் இருக்க, அது பற்றித் துளியும் கவலைப்படாமல், ஏதோ ஊறுகாய்ப் பொட்டலம் தயாரிப்பது போல் ஆண்டுக்கு 10 இலட்சம் பொறியாளர்களை உருவாக்கித் தள்ளிக்கொண்டே இருக்கும் நம் கல்விக் கோயில்கள்...

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், மக்களுக்காக உயிரையும் கொடுக்க ஆயத்தமாய் இருப்பதாக மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் தலைவர்கள் என அனைவருமே இதில் குற்றவாளிகள்தாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களான நம் பக்கமும் சில தவறுகள் இருக்கின்றன என்பதை மக்கள் நாம் உணர வேண்டிய நேரம் இது!...

பொறியியல்துறையின் எதிர்காலம் பற்றியோ, வேலைவாய்ப்புகள் பற்றியோ நமக்குப் பெரிய புள்ளி விவரங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை; ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி பொறியியல்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிய உலக அறிவு நமக்குத் தேவையில்லை. ஆனால், ஒரே துறையில் ஆண்டுதோறும் இத்தனை இலட்சம் பேர் போய் விழுந்தால் அத்தனை பேருக்கும் வேலை கிடைக்குமா என்கிற அடிப்படைச் சிந்தனையாவது நமக்கு வேண்டாவா?
 
கூலித் தொழிலாளர்கள் கூட ஒரு வண்டியில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்டோர் ஏறிவிட்டால், ‘இதற்கு மேல் ஏறினால் போகிற இடத்தில் அவனும் எத்தனை பேருக்கென்று வேலை கொடுப்பான்’ எனச் சிந்தித்து, மேற்கொண்டு அதில் ஏறாமல் அடுத்த வண்டிக்காகக் காத்திருக்கத் தொடங்குவார்கள். படிக்காத அந்த மக்களுக்கு இருக்கும் அறிவு கூட வெள்ளைச் சட்டை வேலை பார்க்கும் படித்த பெற்றோர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? மாத ஊதியம் இலட்சங்களில் என்றவுடன் கண்களை மறைத்து விட்டதா ஆவல்?

90-களில் அரசு வேலைக்காக, படித்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருந்தோம்; உலகமயமாக்கலுக்குப் பின் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரத் தொடங்கியதும், எந்தத் துறை நிறுவனமாக இருந்தாலும் அதற்குக் கணக்கு வழக்குப் பார்க்கக் கண்டிப்பாக ஒருவன் தேவைப்படுவான் என்று கணித்து எல்லோரும் கூட்டம் கூட்டமாக பி.காம் பயிலத் தொடங்கினோம்; பி.காம் போதவில்லை என்றதும் கண்ட உப்புமா கல்லூரிகளிலும் சேர்ந்து எப்படியாவது எம்.பி.ஏ முடித்துவிடத் துடித்தோம்; எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும்படி, பொறியியல் பயின்றால் மாதம் ஒரு இலட்சத்துக்கும் மேல் ஊதியம் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு விட்டில் பூச்சிகள் போல் போய்ப் பொறியியல் கல்லூரிகளில் விழுந்தோம். என்றுதான் மாறும் நமது இந்தச் சந்தை மனப்போக்கு?

கை நிறையச் சம்பாதிக்க விரும்புவதில் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் அது முடியும் என்கிற குறுகிய மனப்பான்மைதான் தவறு! எந்தத் துறையாக இருந்தாலும், அதன் உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு வருமானமும் உச்சத்தில்தான் இருக்கிறது என்பதைக் கூர்ந்து பார்த்தால் உணர முடியும்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால், வைரமுத்து, நா.முத்துக்குமார், கபிலன் போன்றவர்கள் தங்கள் தமிழ்ப் புலமையால்தான் இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்ணெதிர் உண்மை.

கலைஞர்கள் எப்பொழுதும் வறுமையோடுதான் போராட வேண்டியிருக்கும் எனக் கருதப்படும் இதே தமிழ்நாட்டில்தான் மதன், இளையராஜா, சியாம் போன்றோர் முழுநேர ஓவியர்களாகப் பொருளோடும் புகழோடும் வலம் வருகிறார்கள்.

இவை மட்டுமல்ல எழுத்து, பேச்சு, திரைப்படம், புகைப்படம், விளையாட்டு, அறிவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு நிகராகவும், அவர்களை விடப் பன்மடங்கு கூடுதலாகவும் கூட வருவாய் ஈட்டுவது நாம் அறியாததில்லை.

எனவே, நிறைய வருமானம் வரக்கூடிய துறையையே அனைவரும் தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதன் உச்சக்கட்டத்துக்குச் செல்ல முயல்வதே சிறந்தது!

அப்படியே இருந்தாலும், ஒரு துறையின் உச்சக்கட்டத்தை அடைவது எல்லோராலும் எப்படி முடியும் எனக் கேட்பீர்கள்.

முடியும்! அவரவருக்கு ஆர்வமுள்ள, திறமையுள்ள துறையில் படித்தால்!

ஆம்! ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதேனும் ஒரு துறையில் இயல்பாகவே ஆர்வமும் திறமையும் இருக்கும். அது என்ன என்பதைக் கண்டுபிடித்து அந்தத் துறைக்கான படிப்பைத் தேர்ந்தெடுத்தால் எந்த விதச் சிரமமும் இல்லாமல் எளிமையாக அந்தத் துறையில் உச்சம் தொடலாம். பிடித்த துறை, அதுவும் இயல்பிலேயே அந்தத் துறையில் கொஞ்சம் திறமை உண்டு என்பதால் அது தொடர்பாகப் படிப்பதோ, திட்டப்பணிகளில் (projects) ஈடுபடுவதோ பெரிய சிரமமாக இருக்காது. வெகு எளிதாக மதிப்பெண்களையும், வேலைவாய்ப்பையும் எட்டலாம்.

பொறியியல்துறையும் இதற்கு விலக்கில்லை. இன்றும் அத்துறையில் வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியப் பொறியியல் கல்வி உலகத்தரத்தில் இல்லாதது, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளோ இற்றைத் தரமுள்ள (updated) ஆசிரியர்களோ இல்லாத கல்லூரிகள், இவற்றால் மாணவர்களும் போதுமான திறமையோடு உருவாக்கப்படாதது, நிறுவனங்களின் வளாகத் தேர்வுக் (Campus interview) குளறுபடிகள் போன்றவற்றையெல்லாம் மீறி இன்றும் பொறியியல்துறையில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கத்தான் செய்கிறது. யாருக்கு? முதல் தரமான கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமா? இல்லை! படிக்கும்பொழுதே துறையில் ஆழ்ந்த திறமையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வலர்களுக்கு, சிறந்த பொறியாளராவதற்குண்டான துடிப்புக் கொண்டவர்களுக்கு, துறை தொடர்புடைய திறமை இயல்பிலேயே இருப்பவர்களுக்கு.

ஆக, மாற வேண்டியது நம் கண்ணோட்டம்தான். எதைப் படித்தால் வேலை கிடைக்கும் எனப் பார்க்காதீர்கள்! எதைப் படித்தால் மிகுதியான வருமானம் கிடைக்கும் எனக் கணக்குப் போடாதீர்கள்! உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது? உங்கள் பிறவித்திறன் (Born talent) எது? அவற்றைக் கண்டுபிடியுங்கள்! பள்ளிப் பருவத்திலிருந்தே அதற்கேற்ப உங்கள் படிப்புகளைத் திட்டமிடுங்கள்! அப்படிச் செய்தால், படிப்பது எதுவாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொடலாம் மச்சி! முன்பே பார்த்தது போல், எல்லாத் துறைகளிலும், அவற்றின் உச்சக்கட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வருமானமும் இலட்சங்களில்தான் இருக்கும் என்பதால் கை நிறைய வருமானமும் பெறலாம்!

நமக்கு மட்டுமில்லை, நாட்டுக்கும் இதுதான் நல்லது! அவரவருக்கு ஆர்வமும் அறிவும் உள்ள துறையிலேயே ஒவ்வொருவரும் சேர்ந்தால், நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் ஆகச் சிறந்த திறமையாளர்கள் கிடைப்பார்கள். இதனால் அனைத்துத் துறைகளுமே வெகு விரைவில் முகடு (peak) தொடும்!

எனவே, காலங்காலமாகக் கல்வியாளர்கள் கூறி வருவது போல் வேலைக்காகப் படிக்காமல் விருப்பத்துக்காகப் படியுங்கள்! வேலை மட்டுமில்லை வானமும் வசப்படும் மச்சி!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.