ஏழு தலைமுறை! 400+ குடும்பங்கள்! ஒரே கடவுள்! - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்
இன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும், திருநெல்வேலி மாவட்டம் கடங்கநேரியில் வாழும் நானூற்றுக்கும் மேற்பட்ட குடும்பதினர் ஒன்றில்லை, இரண்டில்லை ஏழு தலைமுறையாகத் தங்கள் ’மூதாட்டி’ ஒருவரையே முழு முதற்கடவுளாக வணங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்களா?
இவர்கள் கதை
தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூரான அரியபுரத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சியாம். அதனால் அந்த ஊரைச் சேர்ந்த ஐந்து சகோதரர்களும் தங்கை ஒருவரும் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு கீழ்த் திசையை நோக்கி இடம் பெயர்ந்தார்களாம். இடப்பெயர்ச்சி மூலமே ஒவ்வொரு நாளையும் கடத்திய இவர்கள், தாங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு பள்ளமான சமவெளிப் பகுதியைத் தேடித் தேர்ந்தெடுத்த ஊரே கடங்கநேரி எனச் சொல்லப்படுகிறது.
கடங்கநேரி - பெயர்க் காரணம்
கடங்கநேரி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உறுதியாகக் கிடைக்காவிட்டாலும், கிடங்கு எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு தொடக்கத்தில் ‘கிடங்கனேரி’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டு வந்ததாகவும், இதுவே காலப்போக்கில் மருவிக் கடங்கநேரி ஆனதாகவும் ஊர் மக்கள் வாய்மொழியாக வழங்கி வருகின்றனர். இதற்கேற்றாற் போல் இந்த ஊரே சற்றுத் தாழ்வான பூமியாகத்தான் உள்ளது. அஞ்சல் அலுவலகத்தில் கூட இன்னும் ‘கிடங்கனேரி’ எனும் பெயரே காணப்படுகிறது.
கன்னியம்மை மடம்
கடங்கனேரியில் இந்த ஐந்து சகோதரர்களும் சகோதரியும் குடியேறிய பின்னர், கோடையில் கிராமம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய அம்மை நோய் அவர்களின் ஒரே தங்கையையும் காவு வாங்கியது.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, அதுவும் திருமணமாகாத இளம்பெண்ணாக இறந்ததால், தங்கள் தங்கையைக் கன்னித் தெய்வமாக பாவித்து நடுகல் ஒன்றை இவர்கள் நிறுவி உள்ளனர். அதுவே பின்னாளில் இவர்களின் குலதெய்வமாக மாறியுள்ளது. இக்கன்னி குடி கொண்ட இடமே ‘கன்னியம்மை மடம்’ என்றழைக்கப்படுகிறது. முதலில் ஊன்றிய நடுகல், பின்னாளில் சுதையால் (மண்ணால்) அமைக்கப்பட்டு, பின்னர் ‘மருந்துச் சாந்துப்’ பூச்சுக் கொண்ட சிலையாக மாறியுள்ளது. மண்ணில் தெய்வ உருவங்கள் செய்யும் வேளாளர்களே இக்கோயில் பூசாரிகளான உள்ளனர்.
“எங்கள் பாட்டன்மார்கள் ஐவரும் வீடு வாசல் போன்ற சொத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. எங்களுக்கே எங்களுக்கென்று ஒரு தெய்வத்தையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதுதான் எங்கள் மூதாட்டி கன்னியம்மை” என்கிறார்கள் ஐவரின் வாரிசுகள்.
இவர்களது குடும்பம் ஆல் போல் தழைத்து அருகு போல வேரோடி இன்று நானூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் அத்தனை குடும்பத்துக்கும் முழுமுதற் கடவுளாக கன்னியம்மையே விளங்குகிறாள். இக்கன்னியம்மை வழிபாட்டால் குடும்பத்தில் மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம் என்கிறார்கள்.
பிள்ளையார், சரசுவதி, அயக்கிரீவர், சாய்பாபா என எங்கெங்கும் வட இந்திய, ஆரியத் தெய்வங்கள் கோலோச்சும் இந்தக் காலத்திலும் “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப இப்படித் தமிழ்ப் பண்பாட்டுக்கே உரிய வழிபாட்டு முறைகளும் இம்மண்ணில் நிலைத்திருக்கவே செய்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரியது, இல்லையா?
எழுத்து படம்: முத்தமிழ்க் குமார்
இது பற்றி உங்கள் கருத்து?...