திருமுருகன் காந்தியை விடுதலை செய்! - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை

திருமுருகன் காந்தியை விடுதலை செய்! - #ReleaseThirumuruganGandhi
- தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை

லகின் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவின் எந்த மூலையில், யார் பாதிக்கப்பட்டாலும் உடனே அதற்காக முதல் குரல் எழுப்புவது மே பதினேழு இயக்கம்! தமிழ்நாட்டு இயக்கமாக இருப்பினும், வெறும் தமிழர் பிரச்சினைகளை மட்டுமே தங்களுக்கான எல்லையாக வைத்துக் கொள்ளாமல் சிரியாவில் நடக்கும் இனப்படுகொலை, ஹைத்தியில் இலங்கைப் படையினர் செய்த பாலியல்  குற்றங்கள், காசுமீரில் தொடரும் ஆயுதப்படை அட்டூழியங்கள் என உலகில் எல்லாருடைய பிரச்சினைகளுக்காகவும் போராடும் பெருமைக்குரிய தமிழ் இயக்கம் இது.

இதன் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி அவர்கள், வெறும் போராளியாக மட்டுமில்லாமல் தங்கள் போராட்டங்கள் குறித்து - குறிப்பாக, தமிழர் பிரச்சினைகள் பற்றி, அவற்றுக்கான தீர்வுகள் வேண்டி அவ்வப்பொழுது ஐ.நா., அவையிலும் உரையாற்றி வருகிறார். இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பன்னாட்டு அளவில் கொண்டு சென்று உரிய நீதி கிடைக்கப் பாடுபடுகிறார். 

அப்படிப்பட்டவரை, அண்மையில் ‘தூத்துக்குடிப் படுகொலைகள்’ பற்றி ஐ.நா-வில் உரையாற்றி விட்டு வந்தபொழுது, நாட்டின் எந்தப் பகுதிக்குள் அவர் காலடி எடுத்து வைத்தாலும் உடனடியாகக் கைது செய்யும்படி ஆணையிட்டு, ஏதோ பல நாட்களாகத் தேடப்படும் குற்றவாளியைப் போல் கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால் நீதிமன்றத்தில் அவரை நேர்நிறுத்தியபொழுது, வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், "ஐ.நா., மன்றத்தில் ஒருவர் பேசியதற்கு அவரை எவ்வாறு கைது செய்ய முடியும்?", "ஐ.நா-வில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாக இருக்கிறதுதானே?" என்று கேள்விகள் எழுப்பி, 24 மணி நேர விசாரணைக் கெடு முடிந்ததும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதியே விடுதலை செய்யச் சொன்ன பிறகும், திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய மனமில்லாத தமிழ்நாடு காவல்துறை, அவர் வெளியே வந்ததும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து, பழைய கதைகள் சிலவற்றைத் தோண்டி எடுத்து அவற்றைக் காரணங்களாகக் காட்டி மீண்டும் வழக்குப் பதிந்து அவரைச் சிறையில் தள்ளியிருக்கிறது! சிறையில் இருக்கும்பொழுதே மேலும் மேலும் பல வழக்குகளை அவர் மீது தொடர்ந்து தொடுத்து வருகிறது. தொடுக்கப்படும் அத்தனை வழக்குகளிலும் தேசதுரோகக் குற்றமும் தொடர்ந்து சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த இடத்தில் "குமரி முதல் காசுமீர் வரை இந்திய மக்கள் அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர் எப்படி தேச துரோகியாக இருக்க முடியும்?" எனும் கேள்வி நமக்கு எழுகிறது. "நாட்டு மக்களுக்காகப் போராடும் இவர் தேச துரோகி என்றால் தேசப்பற்றாளர் யார்?" எனும் கேள்வியும் கூடவே எழுகிறது.

தமிழ் மக்களுக்காக எவ்விதப் பின்வாங்கலும் இன்றித் தொடர்ந்து பாடுபடும் போராளியை இப்படி முற்றிலும் முடக்கிப் போட முயலும் இந்த அட்டூழிய நடவடிக்கைகளைக் கண்டித்தும், திருமுருகன் காந்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு எண்ணிம ஊடகக் கூட்டமைப்பு (Tamil Nadu Digital Media Association) காணொலி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதை இங்கே பகிர்வதன் மூலம் தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அறப் போராளியை இக்கணமே விடுதலை செய்யுமாறு நமது களம் இதழும் தன் குரலை இங்கே ஓங்கிப் பதிவு செய்து கொள்கிறது! அத்துடன், இந்தப் பதிவை உங்களால் முடிந்த அளவுக்குப் பகிர்ந்து இந்தக் கோரிக்கை நிறைவேற உதவுமாறும் நீதியை நிலைநாட்ட உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது நமது களம்!
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.