‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்
வணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை.
நிலம் அதன் மீதான தார்மீக உரிமைகள் ஆகியவற்றைப் பேசுபொருளாக்கி இயக்குநர் லெனின் பாரதி, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் அருமையான ஒரு படத்தைப் படைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தின் ஒரு மலை கிராமம். இந்த கிராமத்தின் இளைஞன் நிலம் வாங்க ஆசைப்படுகிறான். ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களால் அது முடியாமல் போகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு அவன் வாங்கும் நிலம் கார்ப்பரேட் தந்திரங்களால் எப்படி அவன் கைவிட்டுப் பறிபோகிறது என்பதை சமகால அரசியல் களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் .
மழை பொழியும் இரவில் கதை தொடங்குகிறது. அன்றாடப் பிழைப்புக்காக மலையேறிக் கடந்து கேரள மாநிலம் செல்லும் இளைஞன், ஓங்கி உயர்ந்த மலையைத் தன் பாதங்களில் கடக்கிறான் . முதலில் கதாநாயகன் வழியாகக் கதை சொல்லும் இயக்குநர் மெதுவாக மலை வழியாகக் கதை சொல்லத் தொடங்குகிறார்!
மலையைக் கடக்கும்போது நடுகல், பைத்தியக்காரக் கிழவி, கழுதையுடன் நடப்பவர் எனக் கதைமாந்தர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பைப் பயணத்துடன் சொல்லியிருக்கிறார். இது நாமும் மலையில் நடப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கதைநாயகனாக வருபவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நடிகர் எனத் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஏலக்காய் மூட்டை கவிழ்ந்து தன் கனவு தோற்கும்போதும், தான் வாங்க நினைத்த நிலத்திலேயே காற்றாலை மின்சாரக் கருவிக்குக் கண்காணிப்பாளனாக வேலை பார்க்கும்போதும் பார்வையாளர்களைக் கண்ணீர் விட வைத்து விடுகிறார்.
இப்படத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடக்கும் மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலைத் திட்டம் போன்ற பிரச்சினைகள் நம் நினைவில் குத்துகின்றன. பொதுவாக, உலக சினிமாக்களில் அந்தந்த நாட்டுப் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. ஆனால், தமிழில் அது போன்ற முயற்சிகள் அரிது. அப்படி ஓர் அரிதினும் அரிதான படமாக வந்திருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை! இது வெறும் படம் இல்லை; கார்ப்பரேட்டுகளுக்கும் நிலமற்ற ஏழை மண்ணின் மைந்தனுக்கும் நடக்கும் அறிவிக்கப்படாத ஒரு போரைச் சொல்லும் கலைவடிவம். இந்தத் துணிவான முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களான நமது கடமை!
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த படங்கள், இதோ ‘நமது களம்’ நேயர்களின் சிறப்புப் பார்வைக்கு☟ ☟ ☟
--ஓ.கே கட்!
படைப்பு
✎ ராகவ்
இது பற்றி உங்கள் கருத்து?...