சீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்

Seemaraja - Movie Review

பொன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன் முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளார் ‘சீமராஜா’.

குதூகலமாக ஊர் சுற்றும், சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு சிவகார்த்திகேயனுக்கு உடற்கல்வி ஆசிரியை சமந்தா மீது காதல். தான் வைக்கும் பல சோதனைகளைச் சிவா கடந்து வெற்றி கண்ட பின் காதலுக்கு ஒப்புதல் தருகிறார் சமந்தா. சரியாக அந்த நேரத்தில் சமந்தாவின் அப்பா, வில்லன் லாலின் அறிமுகம். அவர் சமந்தாவை வீட்டுச் சிறையில் வைத்து விடுகிறார். சமந்தாவை மீட்டுக் காதலில் வெற்றி கண்டாரா சீமராஜா என்பதை நிறைய நகைச்சுவையோடும் வரலாற்று முன்கதையோடும் சொல்லியிருக்கிறார் பொன்ராம்.


கதாநாயகியின் அப்பாவே வில்லன், அவர் உழவர்களின் எதிரி, கடைசியில் அவரைக் கதாநாயகன் அறிவுரை கூறியே திருத்துவது எனக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய கதைதான். என்றாலும், சிவா – சூரி கூட்டணியின் நகைச்சுவை மயக்கத்தில் அதை மறந்து போகிறோம் என்பது உண்மை! ராமர் - அனுமன் வேஷம் போடுவது, நாய்க்குச் சிறுத்தை வேஷம் போட்டு ஊருக்குள் சலசலப்பை ஏற்படுத்துவது என வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார்கள் இந்த இருவர் கூட்டணி.

பிளாஷ்பேக்கில், தமிழ் வேந்தனாக சிவகார்த்திகேயன்! கூடவே, மாலிக்காபூரின் மதுரைப் படையெடுப்பைக் கற்பனை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். சுவையாக இருந்தாலும், தமிழ்ப்பற்று, வீரம், மண், துரோகம், சமகால அரசியல் எனப் பலவும் பேசும் இப்படத்துக்குச் சிவா இன்னமும் பயிற்சி செய்திருக்கலாம்.

பள்ளியில் மாணவர்களுக்குச் சிலம்பம் சுழற்றிக் காட்டும்போதும், உச்சக்கட்டக் காட்சியில் சிலம்புச்சண்டை போடும்போதும், காதலில் உருகும்போதும் சமந்தாவின் நடிப்பு சிறப்பு!!

வில்லனின் இரண்டாம் மனைவியாக வரும் சிம்ரனை வில்லியாகக் காட்ட மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள் (!). கறாரான குரலில், வித்தியாசமாக சிம்ரன் செய்வதெல்லாம்... சிரிப்புத்தான் வருகிறது. இமானின் இசை இன்னும் தூக்கலாக இருந்திருக்கலாம்.

தமிழர் வீரம், வளரி வரலாறு, உழவு, பெருநிறுவன வணிகம் (corporate) எனப் படம் பலவற்றையும் பேசினாலும் வெளியில் வரும்போது சிவா - சூரி நகைச்சுவைதான் மனதில் நிற்கிறது.

‘சீமராஜா’ - குடும்பத்துடன் சென்று சிரித்துவிட்டு வரலாம். 


‘சீமராஜா’ வெள்ளோட்டம் (அதாம்ப்பா டீசரு!)
--ஓ.கே கட்!

படைப்பு
 ராகவ்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.