நாம் மறந்த சேர நாடு! - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்

Chera Nation - The lost Tamil country

ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அவ்வளவு ஆர்வம் இல்லாதவர்களாக உள்ளோம். காரணம், இப்போது சேர நாடு ‘கேரளா’ என வேற்று மொழி மாநிலமாக உள்ளது.

ஆனால், அந்த மொழி எல்லை கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சிறு முயற்சி உங்களைச் சங்கக் காலச் சேர தேசத்தை நோக்கிக் கொண்டு செல்லும்.


சேர நாட்டின் அமைவிடம்

சேர தேசம் மலைகளாலும் கடலாலும் சூழப்பட்ட அற்புதமான நிலப்பரப்பு! இப்பகுதியில் நிலவும் மலையின் ஆளுமை காரணமாக ‘மலை + ஆள + நாடு = மலையாள நாடு’ என்றும் ‘மலைநாடு’ என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இதை உச்சரிக்கத் தெரியாத வடநாட்டினரும் யவனரும் ‘மாலை நாடு’ என்று குறிப்பிட்டதும் உண்டு.

வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுகோட்டைக்கு அருகில் ஓடும் வெள்ளாறு வரைக்கும் சோழ நாடு, வெள்ளாற்றுக்கும் தென்குமரிக்கும் இடைப்பகுதி பாண்டிய நாடு, மேலைக் கடலுக்கும் மேலை மலைத்தொடருக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி சேர நாடு என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

அதாவது, சேர தேசம் இப்போதைய கன்னியாகுமரி – கோவை - ஈரோடு பகுதிகளை உள்ளடக்கி, கர்நாடக மாநிலக் குடகு மலை வரை எல்லைகளைக் கொண்டு விளங்கியது.

ஆயினும் ஏனைய சோழ, பாண்டிய நாடுகளைப் போலின்றித் தனது மொழியையும் பண்பாட்டுத் தொன்மையும் இழந்து முற்றிலும் வேறு நாடாக அது மாறி நிற்கிறது. இதற்குக் காரணம், சோழர்களையும் பாண்டியர்களையும் விடச் சேரநாடு வட தேசத்தவரான ஆரியர்களின் கூட்டுறவை மிகுதியாக ஏற்றுக் கொண்டதுதான் என்று தெரிகிறது.

சங்கக் காலச் சேரர்களின் கடல் வாணிபம்

மற்ற இரண்டு தமிழ் அரசர்களைப் போலவே சேரர்களும் கடலில் கலம் செலுத்தி வணிகம் செய்தார்கள் என்கிறது வரலாறு.

கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே மேலைத் தேசமான சால்டியா (Chaldea) நாட்டுக்குச் சேர நாட்டுத் தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு போகப்பட்டன என்று மேலைநாட்டு அறிஞர் பெட்ரோனியஸ் (Petronius) அவரது நூலில் குறிப்பிடுகிறார்.

சேர நாட்டின் துறைமுகமாக முசிறியும் தொண்டியும், தலைநகராக வஞ்சி மாநகரும் விளங்கின. உணவுப் பொருட்கள், மலை வளங்கள், கடல் வளங்கள், காட்டு வளங்கள் என எல்லாம் மிகுதியாகக் கிடைத்தமையால் சேர நாட்டின் மக்கள் மேலைநாட்டு மக்களுடன் பெருவணிகம் நடத்தி வந்தார்கள்! அதனால் மேனாட்டு யவனரும் கீழ்நாட்டுச் சீனரும் பிறரும் சேர நாட்டில் போக்குவரவு புரிந்தனர் என்றும் தெரிய வருகிறது.

மேலும், அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சேர நாட்டின் தமிழ் மக்கள் சிலர் குடியேறி இருந்தனர் என்ற வியப்பான செய்தியையும் மேனாட்டுப் பழஞ்சுவடிகள் பதிவு செய்துள்ளன!

சேரநாட்டில் இருந்து மேலைநாடுகளுக்கு ஆண்டுதோறும் 4,86,679 பவுன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்!!!


Silk Road - The route used by ancient merchants for international trade
 பட்டுப்பாதை எனக் குறிப்பிடப்படுகிற முற்காலச் சேர நாட்டினர் முதலான
பண்டைய உலக வணிகர்கள் பயன்படுத்திய கடல் - தரை வழி

கடல் வணிகத்தில் மட்டுமில்லை, கடல் மீதான ஆளுமையிலும் முற்காலச் சேரர்கள் (வில்)கொடி பறக்க வாழ்ந்திருக்கிறார்கள்!

அந்நாளில் கடலில் செல்லும் வணிகக் கலங்களைத் தாக்கிக் கொள்ளை கொள்வதையும் கடற்கரையில் வாழ்ந்த மக்களுக்கு இன்னல் புரிவதையும் தொழிலாகச் செய்து திரிந்த யாதர் (Yats), கடம்பர் முதலியோரைக் கண்டு மேலைநாட்டு வணிகர்கள் அஞ்சி நடுங்கினர். ஆனால், நம் சேரர்கள் அவர்களை வென்று ஒழித்து, கடலில் வணிகம் செய்பவர்களுக்கு அரணாக விளங்கினார்கள்! அந்நாளில் சேரநாட்டுக் கப்பல்கள் கடலில் சென்றால் மற்ற நாட்டுக் கப்பல்கள் மிரளுமாம்!

நினைத்துப் பாருங்கள்! இன்று அமெரிக்க, சீனக் கப்பல்களைப் பார்த்தால் எப்படி மற்ற நாடுகள் ஒதுங்கி வழிவிடுமோ அது போல்! அப்பேர்ப்பட்ட உலகின் சிறந்த வல்லரசு நாடாக அன்று தமிழர்கள் நாம் திகழ்ந்திருக்கிறோம்!

சேரப் பேரரசின் முடிவு

இப்படியெல்லாம் உலகம் போற்ற நடைபெற்ற சங்கக் காலச் சேரப் பேரரசு, சங்கக் காலத்தின் கடைசிக் கட்டமான இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னும் பல காலம் நீடித்து, இறுதியில் களப்பிரர் படையெடுப்பின் விளைவாக முடிவுக்கு வந்தது. சமணமும் பௌத்தமும் அங்கு தலையெடுத்தன. அதைத் தொடர்ந்து பார்ப்பனர்களும் குடியேறத் தொடங்கினர். முன்பே குறிப்பிட்டது போல மேலைநாட்டு யவனர்களும் போக்குவரவு செய்தமையால் கிறித்துவ மக்களும் வந்தனர்.

இவ்வாறு சங்கக் காலச் சேர மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வட நாட்டினர் சேர நாட்டைக் கைப்பற்றினர். சேரத்தின் தமிழுடன் வட மொழியான சமசுகிருதம் கலந்து ‘மலையாளம்’ உருவானது. சேரர் என்பது சேரலர் > சேரளர் எனத் திரிந்து கேரளர் ஆகிப் பின்பு கேரளவாக மாறிப் போனது. தமிழர்களின் முப்பெரும் ஆட்சிகளில் ஒன்றின் வரலாறு அத்துடன் முடிந்து போனது!

எனவே, சேரர்கள் என்றதும் அவர்கள் கேரளத்தினர், வேறு மொழி பேசும் இனத்தினர் என நினைத்து விடக்கூடாது.
சேர நாடு நம் தமிழ் இனத்தின் வீரமிகு அடையாளம்! அங்கிருந்தும் நமது வரலாற்றை மீட்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழர்களான நம் ஒவ்வொருவருக்கும் உண்டு! 

Ilango Adigal - Author of the great Tamil epic Silappatikaram
இளங்கோவடிகள்
சேர அரசக் குடும்பத்தில் பிறந்து தமிழின் அருங்காப்பியமான
சிலப்பதிகாரம் வழங்கிய பெரும்புலவர் 
 
 
உசாத்துணை:

1. பெரிப்பிளசு ஆஃப் தி எரித்திரேயன் சீ, கி.பி.1ஆம் நூற்றாண்டு 

2. தமிழ் லிட்டிரேச்சர், 1974, கமில் சுவலபில்

3. சேர மன்னர் வரலாறு, 2002, ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை 


எழுத்து: ஷியாம் சுந்தர்
கணினி வரைகலை: கௌதம்
படம்: நன்றி Kasiarunachalam - English Wikipedia
 • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
 • 9 கருத்துகள்:

  1. ஷ்யாம் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் வாழ்த்துக்குக் கட்டுரையாசிரியர் சார்பாக இதழின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!

    நீக்கு
  2. Arputhamana padaippu innum ithu pondru nam Marantha pala varalatru unmaigalai veliyida Vazthukal 💐💐💐

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!

    நீக்கு
  3. அற்ப்புதமான படைப்பு இன்னும் இது பே ான்று பல வரலாற்று உண்மைகளை வெளியிட வாழ்த்துக்கள்💐💐💐

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!

    நீக்கு
  4. நினைத்துப் பாருங்கள்! இன்று அமெரிக்க, சீனக் கப்பல்களைப் பார்த்தால் எப்படி மற்ற நாடுகள் ஒதுங்கி வழிவிடுமோ அது போல்! அப்பேர்ப்பட்ட உலகின் சிறந்த வல்லரசு நாடாக அன்று தமிழர்கள் நாம் திகழ்ந்திருக்கிறோம்!


   தமிழரின் வீரத்திற்கு இன்னொரு சான்று

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!

    நீக்கு
  5. சேர தேசம் தன்மை இழந்து நிக்கிறது என்பது முற்றிலும் உங்கள் எண்ணம் மட்டுமே தவிர உண்மை இல்லை. இன்னும் தமிழகத்தில் கிறிஸ்துவ மத மாற்றம் பெருமளவில் ஈ
   எடுபடாத தேசம் தான் இந்த சேர கொங்கு சீமை காரணம் இங்கு குல தெய்வ நம்பிக்கை மிக வலுவாக உள்ளது. இன்றும் இங்கு பல நடுகற்களும் கல்வெட்டுகளும் இந்த சேர தேசத்தின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது.கம்பர் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களை பெருமை படுத்தும் விதமாக அவர்களுக்கு மங்கள வாழ்த்து பாடலே எழுதி அவர்களது திருமணத்தில் இன்றளவும் அதை பாடும் சடங்கு இங்கு உள்ளது. இங்கு பிரம்மாண்டமான கோவில்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல்லாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த கோவில்கள் தெய்வ நம்பிக்கை,வீரம்,வரலாறு என்று மற்ற இரு தேச மக்களுக்கு எந்த விதத்திலும் சேர கொங்க தேச மக்கள் சளைத்தவர்கள் அல்ல. சேர மன்னர்கள் சோழர் மற்றும் பாண்டியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.

   பதிலளிநீக்கு

  Blogger இயக்குவது.