ரசனை தரும் வாழ்க்கைத்தரம்! | மச்சி! நீ கேளேன்! {5} - இ.பு.ஞானப்பிரகாசன்

Taste! - An Essential ingrediant of lifestyle
சனை! – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்!

நினைத்துப் பார் மச்சி! ஆதி காலத்தில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தது? பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதனும் உண்டான், உறங்கினான், இனத்தைப் பெருக்கினான், பின்னர் இறந்து போனான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு மனிதன் மேற்கொண்ட முதல் செயல் ஓவியப் பதிவு!

கற்கால மனிதர்கள் குகைளிலும், பாறைகளிலும் வரைந்து வைத்திருக்கும் கீறல் ஓவியங்கள்தான் மனித இனத்தின் ஆகப்பெரும் ஆவணங்களாக, வரலாற்றுக் கருவூலங்களாக (treasure) இன்றும் போற்றப்படுகின்றன. மற்ற விலங்குகளைப் போல் ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்றில்லாமல் தான் பார்த்ததை வரைந்து வைக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் எப்பொழுது ரசனை உணர்வு ஊற்றெடுத்ததோ அப்பொழுதுதான் முதன்முறையாக மனிதர்கள் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டார்கள்; முன்னேறத் தொடங்கினார்கள்.

ஆக, நாகரிகத்தை நோக்கி மனித இனம் எடுத்து வைத்த முதல் காலடியே ரசனை எனும் புள்ளியில்தான் தொடங்கியது என்றால் அது மிகையாகாது!

கற்காலத்தில் மட்டுமில்லை, தற்காலத்திலும் மனித வாழ்வை வடிவமைப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது! எப்படி?... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!

ரசனை வளர்ச்சியே அறிவின் வளர்ச்சி

ரசனை என்பது பெரும்பாலான சமயங்களில் அறிவுக்கு இணையானதாகப் பார்க்கப்படுகிறது. திரைப்படத்துறையையே எடுத்துக்கொண்டால் மேட்ரிக்ஸ், லைப் ஆப் பை போன்ற கடினமான கதைக்களங்களைப் படமாக்குவதில் இன்றும் நம் இயக்குநர்களுக்குத் தயக்கம் இருக்கக் காரணம், அவற்றை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியுமா எனும் ஐயம்தான். இத்தனைக்கும், கடந்த இருபது ஆண்டுகளில் படித்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியிருந்தும், வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்திலேயே அதன் அடுத்த கட்டக் கலைவடிவத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட நாம் இன்னும் முன்னேறவில்லை என்றால், படிப்பு எந்த அளவுக்கு நம் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மருத்துவம் பொறியியல் போன்ற பெரிய படிப்புகளைப் படித்த பலரே உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களையோ, இலக்கிய நயம் மிகுந்த படைப்புகளையோ புரிந்துகொள்ளத் திணறும்பொழுது, பத்தாவது பன்னிரண்டாவதோடு நின்றுவிட்ட எத்தனையோ பேர் இவற்றை ரசிப்பதோடில்லாமல் விரிவாக விமர்சனமே செய்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கிறோம். அதற்காக, படித்தவர்களெல்லாரும் முட்டாள்கள், படிக்காதவர்கள்தாம் அறிவாளிகள் எனக் கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டா! எல்லாவற்றுக்கும் பழக்கம்தான் காரணம். வெகு காலமாக நல்ல படங்களையும் கதைகளையும் தொடர்ந்து ரசித்துப் பழகியவர்கள், காலப்போக்கில் சராசரி மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமான கதைக்களங்களையும் ரசிக்கும் அளவு வளர்ந்து விடுகிறார்கள். அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அந்த அளவுக்கு மேம்பட்டு விடுகிறது. ரசனை வளர வளர அறிவும் தன்னால் வளரும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல படங்களை இப்பொழுது நம்மால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. நாடகத்தனமான காட்சியமைப்புகள், தேவையில்லாத விளக்க உரையாடல்கள், யதார்த்தமில்லாத கதைப்போக்கு என அவற்றில் பல குறைகள் நமக்கு இப்பொழுது தென்படுகின்றன. ஆனால், அப்பொழுது பார்க்கும்பொழுது அவை தென்படவில்லையே, ஏன்? காரணம், இடைக்காலத்தில் வந்த திரைப்படங்கள் அந்தளவுக்கு நம் ரசனையை மெருகேற்றி விட்டன. அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் திரைக்கதை, உரையாடல், காட்சியமைப்பு என எல்லா வகைகளிலும் படிப்படியாகத் தரத்தில் உயர்ந்ததால் நம் ரசனையும் அதற்கேற்ப உயர்ந்து விட்டது. அதனால், நமது புரிந்து கொள்ளும் திறனும், அறிவும் அடுத்த கட்டத்தை எட்டி விட்டதால், பழைய படங்களில் அன்று நமக்குப் புலப்படாத பல குறைகள் இன்று நமக்குப் பளிச்செனத் தெரிகின்றன. நமக்கே தெரியாமல் நம் அறிவை இப்படி ஒரு பூ மலர்வது போல மிக மிக மென்மையாகவும் இயல்பாகவும் வளர்த்தெடுப்பது ரசனை எனும் ஆசிரியரைத் தவிர வேறு யாராலாவது இயலுமா?

எல்லாத் தரப்பு மனிதர்களாலும் ரசிக்கப்படுவது என்பதால்தான் திரைப்படங்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் எல்லாக் கலைவடிங்களுமே ரசனை மூலம் அறிவை வளர்க்கக்கூடியவைதாம்! எழுத்து, இசை, கணிதம், விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அதை ரசிப்பதற்கென்று ஓர் அடிப்படை அறிவு கட்டாயம் தேவை. அந்த ரசனை வளர வளர அதைச் சார்ந்த நம் அறிவும் தானாக வளரவே செய்யும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனின் உண்மையான அறிவு என்பதே கற்பனைத் திறன்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ‘அறிவுச் சோதனை’களின்பொழுதும் (I.Q test) மனிதரின் கற்பனைத் திறன்தான் முக்கியமாக அளவிடப்படுகிறது. அப்பேர்ப்பட்ட கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதற்குக் கலைவடிவங்களின் மீதான ரசனையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

ரசனை வளர பண்பு வளரும்

சாதாரண பள்ளிச் சிறுவனை அண்ணல் காந்தியடிகளாக மாற்றிய அரிச்சந்திரன் நாடகம் முதல் இன்றைய தலைமுறையின் விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வரை எல்லாக் காலக்கட்டங்களிலுமே கலைவடிவங்கள் பண்புநலனில் பெருத்த தாக்கத்தைத் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஏற்படுத்தியே வருகின்றன.

கதை, கவிதை, கட்டுரை, திரைப்படம், சொற்பொழிவு போன்றவை நற்பண்புகளை நேரடியாக வலியுறுத்துகின்றன என்றால், இசை, நடனம், கணிதம், ஓவியம் போன்ற நுண்கலைகள் உளவியல்ரீதியாகச் செயல்பட்டு நம் உள்ளத்தை மறைமுகமாக நெறிப்படுத்துகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய தரத்திலான இசை, கலையழகைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதின ஓவியம் (modern art) எனக் கலைகளின் நுட்பமான பரிமாணங்களையே ரசிக்கும் அளவுக்கு நுண்ணறிவும் மென் உணர்வும் கொண்டவர்களால் உடன் வாழும் மனிதர்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி சக மனிதர்களைப் புரிந்து நடக்கும் நேசமுள்ள மனிதர்கள் ஒருபொழுதும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். பொதுவாகவே, கலாரசனை மிகுந்த உள்ளம் கொண்டவர்கள் பெருந்தன்மையும், குழந்தை உள்ளமும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஆக, ரசனை வளர வளர நம் பண்பும் வளரும் என்பது உறுதி!

ஒரு மனிதரின் மிகப்பெரிய சொத்தே அவருடைய அறிவும் பண்பும்தாம். இந்த இரண்டின் மூலம்தான் மற்ற எல்லாச் சொத்துக்களையும் உறவுகளையும் நாம் சம்பாதிக்க முடிகிறது. யாராலும் பறித்துக்கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாத இந்தச் சொத்துக்கள்தாம் ஒரு தனி மனிதரின் இணையற்ற அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்தெடுக்கிற, அதுவும் எந்தவிதமான சிரமமோ முயற்சியோ இல்லாமல், நமக்குப் பிடித்த விஷயத்தைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலமாகவே இந்த இரண்டிலும் உச்சத்தைத் தொட வழி வகுக்கிற ரசனை உணர்வை வளர்த்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை?

“அட, ரசனையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் கிடைப்பதாகவே இருக்கட்டும். ஆனால், அதை வளர்த்துக் கொள்ளாவிட்டால் பெரிதாகக் கெடுதல் ஏதாவது வந்துவிடப் போகிறதா என்ன” என்று கேட்கிறாயா மச்சி?

அதையும் பகிர்கிறேன்; அடுத்த பதிவில்... 

--பகிர்வேன்...
எழுத்து: இ.பு.ஞானப்பிரகாசன்
ஓவியம்: சாருமதி
 • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
 • 3 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. நன்றி பாலா! உன் பாராட்டுக் கண்டு மிக்க மகிழ்ச்சி!

    நீக்கு
   2. உங்கள் பாராட்டுக்கு நமது நன்றி! நீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்!

    நீக்கு

  Blogger இயக்குவது.