வறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்

Varumaiyin Niram Sivappu

வேலைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகப் பொருளாதாரக் கொள்கையும் நமது இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளன என்பது உண்மை. ஆனால், 1970 – 1980களில் வேலையின்மை பெரிய பிரச்சினையாக இருந்தது. இக்காலக்கட்டத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம்தான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’. இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தனது சமூக கோபத்தை, ஆதங்கத்தை, பார்வையை கமலஹாசனின் ‘ரங்கன்’ கேரக்டர் வாயிலாக உலகத் தரத்தில் பதிவு செய்த படம்.

ரங்கனாக வரும் கமல் தனது நண்பர்களான திலீப், எஸ்.வி.சேகர் ஆகியோருடன் தில்லியில் ஒரே வீட்டில் தங்கி வேலை தேடிக் கொண்டு இருப்பார்; வேலைக்காகப் பல நேர்காணல்களை எதிர்கொள்வார். இயல்பாகவும், உண்மையாகவும் இருக்கும் பொதுவுடைமைச் சிந்தனையாளரான அவருக்கு எந்த ஒரு வேலையும் சரி வராது. ஒரு பக்கம் வேலையின்மையால் வறுமை, பசி; தவிர சமூக கோபம் ஒருபுறம். இம்மூன்று உணர்வுகளையுமே சரிவிகிதத்தில் ரங்கனின் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் கமல். 

ஏமாற்றுக்காரத் தந்தைக்கு மகளாக வரும் தேவி (ஸ்ரீதேவி) கமலின் ஆதங்கத்திற்கும், கோபத்திற்கும் வடிகாலாக இருப்பார். வேலைக்காகக் கமலைப் பிரதாப்பிடம் அறிமுகம் செய்துவைப்பார். நாடகம் நடத்தும் பிரதாப், கமலுக்கு நடிக்கக் கற்றுத்தருவார். இயல்பாக நடிக்கும் கமல், இயற்கைக்கு மாறாக மிகையாக நடிக்கச் சொல்லும் பிரதாப்பின் பேச்சைக் கேட்க மாட்டார். முரண்பாட்டால் வெளியேறிவிடுவார். 

எஸ்.வி.சேகர், தன் நண்பன் திலீப்பின் கற்பனையில் உருவான திலீப் என்ற கற்பனைக் கதாப்பாத்திரத்தையே (ஆம், அதன் பெயரும் திலீப்!) பின்பற்றத் தொடங்கிவிடுவார். உண்மையான உலகில் காயம்படும் உள்ளங்களுக்குக் கற்பனை உலகம்தான் ஆறுதல் மருந்து என்று குறிப்பால் உணர்த்தியிருப்பார் இயக்குநர். இறுதியில், எஸ்.வி.சேகர் மனநிலை பாதிக்கப்பட்டு விடுவார். திலீப் ஒரு பணக்கார விதவைக்குக் கணவனாக வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். ஆனால், கமல் மட்டும் பிடிவாதமாகத் தன் கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பார். இறுதியில் நேர்மையான, தன் கொள்கைக்குப் பாதிப்பில்லாத முடி திருத்தும் வேலையை மேற்கொள்வார்.

ஊரிலிருந்து தில்லிக்கு வரும் கமலின் தந்தை பூர்ணம் விஸ்வநாதன் தன் மகனின் இந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவார். இசைப் பாடகரான தன் மகன் இத்தொழிலைச் செய்கிறானே என உள்ளுக்குள் குமுறுவார். “இது மனசாட்சிக்கு விரோதமில்லாத தொழில். நீங்க விரும்பினால் உங்களுக்கும் சவரம் பண்ணத் தயாரா இருக்கேன்” என்று தன் அப்பாவை சமாதானப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து, முகச்சவரம் செய்து விடுவார் கமல். 

தங்களது வறுமை ஸ்ரீதேவிக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, கதவைப் பூட்டிக் கொண்டு சாப்பிடுவது போல பாவனை செய்வது, உண்மை தெரியும்போது வெட்கத்துடன் தலைகுனிவது போன்ற காட்சிகளில் கமலின் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குநரின் ஆளுமையும் தனித்துவமாகத் தெரியும். 

பாரதியார் பாடல்கள் கே.பி-யின் படங்களில் ஏதாவது ஒரு வகையில் இடம் பிடித்துவிடும். “வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா” பாடல் காதலின் ஆழத்தையும், காதலியின் பிரிவையும் வடித்தெடுத்துச் சொல்வது போல இருக்கும். 

இன்றைய தலைமுறைக்கு ‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படம் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், வறுமையையும் நெஞ்சில் ஆழப் பதியவைக்கும். பணம் சம்பாதிப்பதற்கும், நேர்மைக்கும் இடையேயான வேறுபாடு, மாறிவரும் காலக்கட்டத்திலும் மாறாது நிலையாக இருக்கும் என்பதை நன்கு புரியவைக்கும். 

- ஓகே! கட்!
எழுத்து: ராகவ்
படம்: பிரகாஷ் சங்கர் 

கூடுதல் ஆர்வத்துக்கு: பாலச்சந்தர்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.