ரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது
உலகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங்களைக் கழுவிக் கொள்ளக் கடலுக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும் இல்லையா? அதற்கான ஓர் ஏற்பாட்டைப் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாளை ஒட்டிச் செய்திருந்தது ரெயின்டிராப்ஸ் தொண்டு அமைப்பு. “ரீச் தி பீச்” எனும் நிகழ்வை ஒருங்கிணைத்த இவர்கள் மாற்றுத்திறனாளிகள் பலரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தார்கள்!
பொதுமக்களைப் பொறுத்த வரை, கடல் பார்த்தல் என்பது ஒன்றுமேயில்லாத விதயம்தான். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படிப்பட்ட சின்னஞ்சிறு இன்பங்கள் கூடப் பெரும் கனவுதான். அவர்களுடைய அந்தக் கனவை நனவாக்கும் விதமாகக் கடந்த 02.12.2018 அன்று (பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாளுக்கு முன்நாள் மாலை) பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மேற்படி சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ரெயின்டிராப்ஸ். இவர்களுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, டி.எக்ஸ்.சி டெக்னாலஜி, வி.ஜி.பி., யுவா மீடியா அண்டு என்டெர்டெயின்மெண்ட், மெகா டிஜிட்டல், சாஜ் அண்டு தாஜ் பேனர் எரெக்ஷன், பாங்க் மற்றும் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கம் ஆகியோரும் உறுதுணையாக இருந்து இந்நிகழ்வை நடத்தினர்.
வெறுமே கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வாக இல்லாமல், இதற்கென நல்வரவு வளைவு அமைத்து, சிவப்புக் கம்பளம் விரித்து மாற்றுத் திறனாளிகளுக்கு இவர்கள் அளித்த தடபுடல் வரவேற்பு நெகிழ்ச்சியானது. அறக்கட்டளைத் தோழர்கள் சக்கர நாற்காலிகளை அலை தவழும் பகுதி வரை தள்ளிச் சென்று விருந்தினர்களின் பாதங்களைக் கடல் தழுவச் செய்த காட்சி, அலையின் தழுவலை அனுபவித்தவர்களுக்கு மட்டுமில்லை, பார்த்தவர்களுக்கும் சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.
இதற்கு மேலும் இதைச் சொற்களில் காட்டிக் கொண்டிருப்பதை விட இதோ அந்த இனிய தறுவாயின் காட்சிப் பதிவுகள் உங்கள் பார்வைக்கு:
ரெயின்டிராப்ஸ் இந்த ரீச் தி பீச் நிகழ்வை நடத்துவது இது இரண்டாவது முறை. இந்த அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதராக விளங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா அவர்கள் முன்னிலையில் நடிகர் ராதிகா அவர்கள் இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இவர்களுடன் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், ‘உதவிக்கரம்’ சங்க மாநிலத் தலைவர் வரதக்குட்டி, ‘பிக்பாஸ்’ புகழ் நித்யா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
![]() |
ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை நிறுவனர் அரவிந்த் ஜெயபால் அவர்கள் உரையாற்றியபொழுது |
![]() |
ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா அவர்கள் |
![]() |
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர் வரதக்குட்டி அவர்கள் விழா மேடையில் வீற்றிருந்தபொழுது |
![]() |
நாட்டுப் பாடல் கலைஞர், திரையிசைப் பாடகர் வேல்முருகன் அவர்கள் |
![]() |
நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த நடிகை ராதிகா அவர்கள் |
![]() |
பாடகர் வேல் முருகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா ஆகியோருடன் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் அவர்கள் விழா மேடையில் |
ரெயின்டிராப்ஸ்
அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான அருண் லோகநாதன் அவர்களும் இன்னொருவரான
அரவிந்த் ஜெயபால் அவர்களின் தந்தையும் வாழ்வில் வென்ற மாற்றுத்திறனாளிகள்.
அதனால்தானோ என்னவோ மாற்றுத் திறனாளிகளின் இந்த அடிமனத்து ஏக்கம் கூட
இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது!
மாற்றுத் திறனாளிகள் தாங்களும் மற்றவர்களுக்கு நிகராக வாழத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் இத்தகைய சின்னஞ்சிறு கனவுகளைக் கூட உய்த்துணர்ந்து நிறைவேற்றி வைக்கும் ரெயின்டிராப்ஸ் போன்ற தோழர்கள் இருக்கும் பொழுது அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
படம்: நன்றி கணேஷ் நடராஜன் - www.lens23.in
மாற்றுத் திறனாளிகள் தாங்களும் மற்றவர்களுக்கு நிகராக வாழத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் இத்தகைய சின்னஞ்சிறு கனவுகளைக் கூட உய்த்துணர்ந்து நிறைவேற்றி வைக்கும் ரெயின்டிராப்ஸ் போன்ற தோழர்கள் இருக்கும் பொழுது அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
படம்: நன்றி கணேஷ் நடராஜன் - www.lens23.in
இது பற்றி உங்கள் கருத்து?...