த(க)ற்காலப் பயணம்! | மச்சி! நீ கேளேன்! {6} - இ.பு.ஞானப்பிரகாசன்

ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்த உணர்வு இல்லாவிட்டால்?... அது பற்றி இந்தப் பகுதியில் கொஞ்சம் பார்ப்போமா மச்சி?

இன்று தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் குடிப் பழக்கம் பற்றி மிகவும் கவலை தெரிவிக்கிறார்கள். குடிக்காதவர் என யாருமே இல்லை எனச் சொன்னால் நம்பக்கூடிய அளவுக்கு ஆகி விட்டது இன்றைய நிலைமை. இதற்கு ரசனை இல்லாத வாழ்க்கைமுறையும் ஒரு காரணம் எனச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? ஆனால், அது உண்மை!

குடிக்கிறவர்கள் பெரும்பாலும் அதற்குச் சொல்லும் காரணம், மன அழுத்தம் (stress). ஆடல், பாடல், இசை, இலக்கியம் என அதற்கு எத்தனையோ தீர்வுகள் இருக்க, குடிப் பழக்கத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இப்படிப்பட்ட நல்ல ரசனைகளை வளர்த்துக் கொள்ளாததைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? மாலை ஆறு மணிக்கு மேல் கவியரங்கத்துக்கோ, இலக்கியக் கூட்டத்துக்கோ, சொற்பொழிவுக்கோ போக வேண்டியிருந்தால் ஒருவர் குடிக்கப் போவாரா? அந்த நினைப்புதான் வருமா?

குடிப் பழக்கம் மட்டுமில்லை, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எனப் பல கெட்ட குணங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ரசனையின்மைதான் காரணமாக இருக்கிறது!

கலைவடிவங்கள் அனைத்துமே மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நற்பண்புகளை நினைவூட்டிக் கொண்டே இருப்பதாலும், அப்படிப்பட்ட ஏதேனும் ஒன்றின் மீது தீவிர ரசனை கொண்டவர்களுக்கு அதற்குச் செலவிடவே நேரம் சரியாக இருப்பதாலும் ரசனை மிகுந்த மனிதர்களுக்கு மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளவோ, புறம் பேசவோ, தவறாக நினைக்கவோ வாய்ப்புக் குறைவு! அவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் இருக்காது; ரசனையால் பண்படுத்தப்பட்ட அவர்கள் உள்ளம் அவற்றுக்கு இடமும் கொடுக்காது!

நேற்றைக்கு வேலைக்கு வந்தவன் இன்று பதவி உயர்வால் தன்னைத் தாண்டி எங்கேயோ போய்விட்டானே எனப் பொருமும் நம் சக அலுவலர்கள் முதல், “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்” என உறுமும் திரைப்பட வில்லன்கள் வரை அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்கும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் அவர்களுள் பெரும்பாலோர் பெரிதாக எந்த வித ரசனையும் இல்லாதவர்களாக இருப்பது தெரிய வரும்!

இவர்களுக்கு நேர்மாறாக நாணயங்கள், அஞ்சல்தலைகள், அரிய நூல்கள் போன்றவற்றை அலைந்து திரிந்து சேகரிப்பவர்கள், நல்ல கலைநிகழ்ச்சிகளைத் தேடிப் பிடித்துச் சுவைப்பவர்கள், கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தியில் ஆண்டுக்கு ஒருமுறை படும் கதிரவன் ஒளியைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட நாளுக்கு எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைக்காரர்கள் எனத் தன் ரசனைக்காக நேரத்தையும் பணத்தையும் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்பவர்களுக்கு அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படவோ, அவர்களுக்குத் தீங்கு நினைக்கவோ நேரம் இருப்பதில்லை!

இப்படி எதையுமே ரசிக்கத் தெரியாமல் இளமைக் காலத்தைக் கழித்தவர்கள்தாம் முதுமையில் மகனையோ மகளையோ மருமகளையோ குறைசொல்லிக் கொண்டு, அவர்களின் இயல்பான வார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் கூடத் தவறாகப் புரிந்துகொண்டு அழுது புலம்புகிறார்கள். ஏதாவது ஒன்றில் தீவிர ரசனையும் ஈடுபாடும் கொண்ட பெரியவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதுமில்லை; அப்படி அழுது புலம்பித் தாழ்வு மனப்பான்மை கொள்ள அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு துறை மீதான ஆர்வமும் தேடலும் ஆழ்ந்த சிந்தனையுமாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதுமே நிகழ்காலத்தை விரல்நுனியில் வைத்திருப்பவர்களாகவும் (updated) இளைஞர்களுக்கு இணையான அறிவுக்கூர்மையும், துடிப்பும் உள்ளவர்களாகவும் கூட விளங்குகிறார்கள். சுஜாதா, வாலி ஆகிய மேதைகள் இறுதி மூச்சு வரை இளைஞர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் திறமையுடன் வலம் வந்த இரகசியம் இதுதான்!

எல்லாவற்றுக்கும் மேலாக, விலங்கோடு விலங்காகத் திரிந்து கொண்டிருந்த நாம் மனிதனாக மாறக் காரணமே ரசனை உணர்வுதான் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். ஆக, அது இல்லாத வாழ்வு மனித வாழ்வே இல்லை. ஆதிகாலக் காட்டுமிராண்டி வாழ்வுதான்.

இன்றைய கல்விமுறையும், உலகமய நாகரிகமும் சேர்ந்து படிப்பதும், சம்பாதிப்பதும், பிள்ளை பெற்றுக்கொள்வதும், இன்னபிற பொருளியல் சார்ந்த (materialistic) வெற்றிகளை ஈட்டுவதும் மட்டும்தான் வாழ்க்கை என நமக்குக் கற்பித்து வைத்துள்ளன. இது முழுக்க முழுக்கக் கற்கால மனிதர்களின் வாழ்க்கைமுறையேதான்!

இன்று நாம் பிழைப்பை மட்டுமே குறியாக வைத்துப் படிக்கிறோம்; அதே போல அவர்கள் அன்று மற்ற விலங்குகளிடமிருந்து பிழைக்கத் தேவையான வேட்டை நுணுக்கங்களை மட்டுமே கற்று வாழ்ந்தார்கள். இன்று நாம் பணமாகச் சேர்த்து வைக்கிறோம். அவர்கள் கிழங்கு, தோல், என உணவு வகைகளாகவும் ஆடை வகைகளாகவும் பொருட்களாகச் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இனப்பெருக்கத்துக்கு முதன்மை கொடுத்தே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தார்கள்; நாமும் அது போல, ஒரு குழந்தை பிறந்தவுடன், அதற்கு மேல் வாழ்க்கைத்துணையோடு ஒத்துப்போக முடியாமல் மணவிலக்குப் பெற்றுக் கொள்கிறோம். நமது வெற்றிகள் பணம், சமூகநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை; அவர்களின் வெற்றிகள் ஈடுபட்ட வேட்டைகள், அவற்றில் கிடைத்த பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. ஆக மொத்தத்தில், இரண்டும் ஒன்றுதான்!

ஆம்! ரசனை இல்லாத வாழ்வு தீய எண்ணங்களையும், கெட்ட பழக்கங்களையும் தூண்டுகிறது. ரசனை இல்லாத உள்ளம்தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலும் நினைக்கிறது; பிறரைப் பற்றித் தவறாகவும் நினைக்கிறது. ரசனை இல்லாத வாழ்க்கைமுறை மீண்டும் நம்மை ஆதிகாலக் காட்டுமிராண்டியாக மாற்றுகிறது!
 

எனவே, ரசித்துப் பழகு மச்சி! 
கலைகளை
அறிவியலை 
தொழில்நுட்பத்தை 
சக மனிதர்களை 
ரசிக்கப் பழகுவோம்! 
வாழ்க்கை அழகாகும்! 
மனிதநேயம் மிக்க
கண்ணீரே இல்லாத - புது 
உலகம் உருவாகும்! 


 --பகிர்வேன்...
எழுத்து: இ.பு.ஞானப்பிரகாசன்
கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்
படம்: நன்றி wikipedia
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.