"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா?" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி

JACTO-GEO Protest-Shocking informations that must know by the people
நான் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடைபெற்று வந்த ஜாக்டோ ஜியோ போராட்டங்களிலெல்லாம் என் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பயனடைந்தவர்கள்தான். அவர்கள் என்னைப் போன்ற சிறுபான்மையினர் - அதாவது புதிய ஓய்வூதியத்தில் இருப்போர் - நலனுக்காகப் போராட்டத்தில் ஈடுபடும்போது நான் மட்டும் தயங்கிக் கொண்டுதான் வீட்டில் இருப்பேன். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கேட்பதில் நானும் சற்று முரண்பட்டுத்தான் இருந்தேன். அப்படிப்பட்ட நானே இந்த முறை முழு மூச்சில் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றால் அதற்குக் காரணம் ஊதிய உயர்வு அல்ல அல்ல அல்ல!!!

முதலில், ஆசிரியர்கள் கொடி பிடித்துத் தெருவில் இறங்கினாலே ஊதிய உயர்வுக்காகத்தான் என்று உங்களுக்கு யார் மனதில் விதைத்தது? மிகவும் வேதனையாக இருக்கிறது! மிகப் பெரிய தனியார் நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் அவை தமது லாபத்தில் 50 சதவீதத்தை ஊழியர்களின் ஊதியத்துக்காகத்தான் செலவிடுகின்றன. அரசு தனது ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 45 சதவீதத்தை அரசாங்க ஊழியர்களுக்குத் தருவதாகச் சொல்கிறது. அதில் பள்ளியின் கட்டுமானம், பயிற்சிக்காக ஒதுக்கும் நிதி அனைத்தும்தான் சேர்க்கப்பட்டிருக்கின்றன! அரசாங்கத்தின் மூளையும் இதயமுமாகச் செயல்படும் இந்த அரசு நிறுவனங்களுக்கு 45 சதவிகிதம் அரசு ஒதுக்குகிறது. அதற்கு ஆண்டு முழுவதும் பனியிலும் வெயிலிலும் அனைவருமே பணி செய்து கிடக்கிறோம்.

அடுத்ததாக வருகிற குற்றச்சாட்டு, பொதுவாக மீம்களில் பார்க்கிறேன்; இன்றைக்கு வாங்குகிற ஊதியத்தைக் கணக்கிட்டுப் பழைய ஊதியம் வாங்கியவர்கள் நிலுவை (arrear) கேட்பதாக உங்களிடம் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

உண்மை என்னவென்றால், எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள புதிய ஊதியம் 21 மாதங்களுக்கு முன் தேதியிட்டதாக உள்ளது! நான் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு பெற்றேன். ஆனால் அதற்கான ஆணையில் ஊதிய உயர்வுக்கான தேதி 21 மாதங்களுக்கு முன் தேதியிட்டதாக இருந்தது. எனில், அந்த 21 மாத நிலுவைத் தொகை எங்கே என்று கேட்போமா  இல்லையா? கையெழுத்து மட்டுமே போடக் கற்றுக் கொண்ட எளிய மனிதர்கள் கூட இதைக் கேள்வி கேட்பார்களே?

ஒரு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரின் சம்பளம் எண்பத்து நான்காயிரம் என்கிறார் முதல்வர். எண்பத்து நான்காயிரம் ஊதியமாகப் பெற வேண்டுமானால் அந்தத் தலைமையாசிரியர் முப்பத்தைந்து ஆண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்பது பாவம் அவருக்குத் தெரியாது போல!

ஊதியம் மட்டும் புதிதாக வேண்டும்; ஓய்வூதியம் மட்டும் பழையபடி அப்படியே இருக்க வேண்டும் - இது சரியா என்பது உங்களைப் போன்றோரின் அடுத்த கேள்வி. இதற்கு பதில் சொல்லும் முன் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நாங்கள் சி.பி.எஸ், சி.பி.எஸ் என்கிறோமே (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) அப்படி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

சொல்கிறேன், கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்! உண்மையில் எங்கள் யாருக்கும் இப்போது ஓய்வூதியம் என்பதே கிடையாது! அதற்கு மாறாக, ஒவ்வொரு ஆசிரியரும் தனது மாத ஊதியத்தில் 10 சதவீதத்தை அரசிடம் கொடுத்து வைக்கிறார். அரசு அதைப் பங்குச்சந்தையில் செலுத்தி, வரக்கூடிய லாபத்தை நாங்கள் ஓய்வு பெறும்போது எங்களுக்குத் தருவதாக வாக்குறுதி தந்தது. நான் இதுவரை தோராயமாக ஆறு லட்சம் ரூபாய் வரை சி.பி.எஸ்-ஆக அளித்துள்ளேன். அது பங்குச் சந்தையில் என்ன நிலையில் வளர்ந்துள்ளது என்கிற எனது தனிப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை.

ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்? அரசு என்ன அப்படியா ஏமாற்றி விடும் என நீங்கள் கேட்கலாம். சென்ற முறை கணினித் தமிழ்ச் சங்கக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிஞர் வைகறை அவர்களை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அவரும் இறந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றன. இன்னும் அவரது சி.பி.எஸ் (CPS) பணம் கிடைக்கவில்லை! கடந்த முறை போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடியபோதும் இதே குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தன.

ஆம்! இது ஆசிரியர்களின் கதை மட்டுமில்லை, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது முதலே அரசு ஊழியர்கள் நிலைமை இதுதான். உங்கள் நட்புகளிடம், சொந்த பந்தங்களிடம் கொடுத்து வைத்த ஐந்நூறு, ஆயிரம் ரூபாயையாவது நீங்கள் வாய் திறந்து கேட்காமல் இருப்பீர்களா? இருபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் எங்கள் பணம் அரசிடம் இருக்கிறது!! அது என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டால் தப்பா?

இப்போது உங்கள் முந்தைய குற்றச்சாட்டுக்கு வருகிறேன். ஊதியம் மட்டும் புதிது புதிதாக உயர்த்திக் கேட்கும் நாங்கள், அதற்கேற்ப ஓய்வூதியத்திலும் புதிய முறையை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம் என்கிறீர்கள். அப்படி எனில் 2003-க்கு – அதாவது புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு - பின் பணியேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையினர் ஆகியோரும் எங்களைப் போலவே புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்தானே வர வேண்டும்? எங்களை விட மூன்று மடங்கு ஊதியம் அதிகம் வாங்குபவர்கள் அவர்களுக்கான முதுமைக் காலத்தை ஏன் அவர்களே திட்டமிட்டுக் கொள்ளக் கூடாது? அவர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் இருக்கிறது என்பதோ, அவர்கள் இன்னும் சி.பி.எஸ்-க்கு மாறவில்லை என்பதோ நீங்கள் அறியாத ஒன்று.

அடுத்து, பள்ளிகளை இணைக்கிறேன் என்று கிளம்பி இருக்கிறார்கள். பள்ளிகளைத் தரம் உயர்த்துவதாகச் சொல்லி, இனி இடைநிலைப்பள்ளிகள் (எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள்) இருக்கப் போவதில்லை; அவற்றை மேல்நிலை - உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப் போவதாகச் சொல்கிறார்கள். நீங்களும் ஆகா ஓகோ என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உண்மை என்னவெனில், அப்படி ஒரு பள்ளியை இணைப்பதற்கு, குறைந்தது அந்தப் பள்ளியைச் சுற்றி இருக்கிற ஐந்து பள்ளிகளையாவது மூட வேண்டும்.  அத்துடன் சேர்த்து அந்தப் பகுதியில் இயங்கி வரும் ஐந்து அங்கன்வாடிகளும் மூடப்படும்.
 

காமராஜர் காலத்தில் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி திறக்கப்பட்டது. அது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பள்ளியாக வளர்ந்தது. இதனால் கல்வி என்பது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் ஒன்றாக இருந்தது. இப்போது அந்தப் பள்ளிகளை மூடுவதால் மறுபடியும் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் அருகாமையில் இருக்கும் மற்றொரு கிராமத்திற்கு அல்லது நகரத்திற்குச் சென்றுதான் உயர்நிலைப்பள்ளியிலும்  மேல்நிலைப் பள்ளியிலும் படிக்க முடியும்.

ஆக, அப்படிப் பயணித்துப் படிக்க முடிந்தவன் படி; மற்றவன் மறுபடியும் குலத்தொழிலைச் செய் என்று அரசு சொல்லாமல் சொல்கிறது. இதன் மூலம் இந்தப் பணியிடங்கள் மூடப்படுவது கிடக்கட்டும்; கல்விக்கான வாய்ப்பு மற்றும்  வேலைவாய்ப்பு ஆகியவையும் சேர்த்தே காலி  செய்யப்படுகின்றன. இதையும் எதிர்த்துத்தான் நாங்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகிறோம்.

‘கல்வியின் மெக்கா’ என்றழைக்கப்படும் பின்லாந்து, பள்ளிக்கல்வியை ஏழாம் வயதில் இருந்து தொடங்குவதுதான் சரியானது என்கிறது. ஆனால் நம் அரசோ தனியார் பள்ளியுடன் போட்டி போடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஐந்து வயதில் தொடங்கிய பள்ளிக்கல்வியை இப்போது இன்னும் குறைத்து அரசுப் பள்ளிகளிலேயே எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளைத் தொடங்குவதாக அறிவிக்கிறது. இது நல்லதல்ல எனக் கல்வியாளர்கள் ஒருபுறம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க, “மாணவர் நலனைக் கருத்தில் கொண்டுள்ள” இந்த அரசோ அதைக் காதிலேயே வாங்காமல் கிடக்கிறது. போதாததற்கு, அந்தப் பாலர் வகுப்புகளை நடத்த அதற்கெனவே படித்த எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டுக் காத்திருக்கும் நிலையில் இதுவரை ஐந்தாம் வகுப்பு வரை, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுத்த ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்ய முயல்கிறது.

ஒரு மருத்துவமனையில் மருந்தாளுநர் (compounder) பணியிடம் காலியாக இருந்தால் அதில் ஒரு மருத்துவரை இட்டு நிரப்ப முடியுமா? இப்போது எந்த உள்ளாட்சியிலும் மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் (councilor) இல்லை. அதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்களை அந்தப் பதவிக்கு இறக்க முடியுமா? இப்படிப்பட்ட அட்டூழியமான பதவி இறக்கத்தை எதிர்த்துப் போராடினால் நாங்கள் பேராசைக்காரர்களா?

அப்படியானால் நாங்கள் ஊதிய உயர்வே கேட்கவில்லையா என்றால், கேட்கிறோம்தான்! ஆனால் யாருக்குக் கேட்கிறோம் தெரியுமா?

2012-க்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் எல்லாரும் கடைநிலை ஊழியர்களின் - அதாவது அலுவலக உதவியாளர் (Office Assistant) வாங்கும் அடிப்படை ஊதியத்தைத்தான் பெறுகிறார்கள். அவர்களுக்கு  மட்டும்தான் ஊதிய முரண்பாட்டைச் சரி செய்யச் சொல்கிறோம். எங்கள் எல்லோருக்கும் இன்னும் நிறையக் கொடுங்கள் என்று அலையவில்லை! இதோ பாருங்கள், எங்கள் 9 அம்சக் கோரிக்கைகளை


The 9 Demands of JACTO-GEO

உண்மையில், உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வுக்கு முன்பாக ஒரு மாதக் காலம் பெரும்பாலும் அவர்களது பள்ளியிலேயேதான் நாட்களைக் கழிக்கிறார்கள். இரவு வகுப்பெடுக்கிறார்கள்; சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நிறைய ஆசிரியர்கள் தமது வீடுகளில் கூட மாணவர்களை அழைத்து இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள். உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒன்றிரண்டு குறைபாடுள்ள ஆசிரியர்களைக் கொண்டு அனைவரையும் மதிப்பிடாதீர்கள்!
 
எங்கள் வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களது பொருளாதார - குடும்பச் சூழல்களை மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள். அவர்களது இல்லத்து விழாக்களில் பங்கேற்று அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் நாங்கள். இப்படி ஒரு ஆசிரியர் – மாணவர் உறவுமுறை, இப்படி ஒரு வாழ்க்கை முறை இருப்பதை நீங்களெல்லாரும் கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா?

மாட்டீர்கள்! காரணம், இன்று மீம்களிலும் டுவீட்டுகளிலும் செய்தி அறிக்கைகளிலும், இதை விட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு எங்களைக் கொச்சைப்படுத்தும் பொதுமக்களும் ஊடகத்துறையினருமான நீங்கள் யாரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களும் இல்லை; உங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்தவர்களும் இல்லை. ஆசிரியர்களை “ஸ்டாஃப்” எனக் குறிப்பிடும் சமூகத்தைச் சேர்ந்த உங்களுக்கு, “டீச்சர்” என்று அழைத்தாலும் ஆசிரியர்களைத் தாயாகவும் தந்தையாகவும் கருதும் எங்கள் மாணவர்கள் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

உங்களைப் போல் எத்தனை பேர், எத்தனை முறை தூற்றினாலும் கடைசி வரை நாங்கள் போராடிக் கொண்டிருப்போம். எங்கள் காலம் முடிந்து விடும். எங்களுக்குப் பின் அரசுப் பணி என்ற ஒன்றே இல்லாமல் போய்விடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை. (அரசாணை எண் ஐம்பத்து ஆறு என்றால் என்ன என்று படித்துப் பாருங்கள்! இதன் தீவிரம் தெரிய வரும்).

அரசு ஊழியர்களுக்கு என ஓர் அமைப்பு இருக்கிறது. ஆகவே அது தனக்கான உரிமையைக் கோருகிறது. நீங்கள் எந்தத் துறையில் இருக்கிறீர்களோ அதற்கான அமைப்பை நீங்களும் உருவாக்குங்கள். உங்களுக்கும் கேள்வி பிறக்கும்.

எழுத்து: Mythily KasthuriRengan | கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர் | படம்: நன்றி JACTO-GEO
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.