எனது வாக்கு யாருக்கு? - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க வேண்டிய தெள்ளத் தெளிவான அலசல்

To Whom Should I Vote? - Must read article for each and every voter
அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட
வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் - பிளாட்டோ

மிழகம் இதுவரை சந்தித்த பாராளுமன்றத் தேர்தல்களைக் கழகங்களின் வருகைக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம். கழகங்கள் தோன்றும் முன் காங்கிரசைத்தான் ஆதரித்தோம். ஆனால் அதற்குப் பின் இந்தியாவே கையா, தாமரையா, கதிர்-அரிவாளா என்று முட்டி மோதிக் கொண்டாலும் ‘தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதை உரக்கச் சொல்லும் விதமாக, நமக்கு மட்டும் நாடாளுமன்றத் தேர்தல்கள் சூரியனா, இரட்டை இலையா என்பதாகத்தான் இருந்தன! மத்தியில் தேர்தல் நெருங்க நெருங்க தில்லிப் பெருந்தலைகள் சென்னைக்கு நடையாய் நடந்தது ஒரு காலம். காங்கிரஸ் இந்தியாவெங்கும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே பிரதம வேட்பாளரை முன்மொழியும் தீர்க்கமும் தெளிவும் கொண்ட ‘கிங் மேக்கர்’ வாழ்ந்த மண் நமது.

ஆனால் “வந்து பார்” எனச் சிலிர்த்து நிமிரும் ஆளுமைகளை வரிசையாக இழந்து விட்டு நிற்கும் தமிழகம் சந்திக்கப் போகிற முதல் பாராளுமன்றத் தேர்தல் இது! மாற்றம் எனும் விளம்பரச் சொல் கொண்டு ஹீலியம் பலூனாய் ஊதி பா.ஜ.க-வை இந்தியாவே கொண்டாடியபோதும், இந்தியா ஒளிர்கிறது என அவர்கள் வாய் வித்தை காட்டியபோதும் தமிழர்கள் எதையும் சட்டை செய்யாது வழக்கம் போல் கழகங்களுக்கே வாக்களித்தோம். இன்றோ நமது மாநிலத்தில் நடப்பது நாம் தேர்ந்தெடுத்த அரசுதானா என ஐயம் கொள்ளாதோர் குறைவு.

இப்படிப்பட்ட சூழலில், நடந்து முடிந்த பா.ஜ.க., ஆட்சியில் எட்டப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் என என் சிற்றறிவுக்கு எட்டாத சங்கதிகளை ஆராய முற்படாமல், அன்றாடம் நேரில், என் சூழலில் அறிந்த, செய்தித்தாள்களில் படித்த சில கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

1. நாட்டின் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி ஒரே இரவில் “இதுவரை நீங்கள் பயன்படுத்திய நோட்டுகள் செல்லாது” என்றார். “இதன் மூலம் கறுப்புப் பணத்தை எல்லாம் ஒழித்துவிடுவேன்” என்றார். சில படித்த மேதாவிகளோ “புதிய நோட்டில் சிப்பு எல்லாம் வைத்து வருகிறது. நூறு அடி தோண்டிப் புதைத்தால் கூடக் காட்டிக் கொடுத்து விடும்” என்றார்கள். சரி, சுவிஸ் வங்கிப் பணத்தை மீட்டு நமக்குப் பதினைந்து இலட்சம் தருவதாகச் சொன்னதைத்தான் செய்யவில்லை; இதோ கருப்புப் பணத்தை ஒழித்து, நம் கஷ்டத்தை எல்லாம் தீர்க்கப் போகிறார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கு தோல்வியோ தோல்வி! வங்கி வாசலில் மயங்கிச் சரிந்த, மாரடைப்பில் உயிர் நீத்த முதியோரை, திருமணம் நெருங்கிய இளையோரைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் அடுத்த தாக்குதலுக்குக் கிளம்பிவிட்டார் நம் பிரதமர்.

2. என் உறவினர் இருவர். வெவ்வேறு ஊர்களில் சுயதொழில் செய்பவர்கள். ஒருவர் சென்ற தேர்தலில் பா.ஜ.க., வென்றபோது “அவனுங்க ஆட்டத்தை அடக்கணும்” என்று இந்துத்துவா பேசிய அனுபவம் வாய்ந்த தொழிலதிபர். மற்றவர் #GoBackModi எனும் வாசகத்தை டெம்ப்ளேட் செய்து வைத்திருக்கும் இளைஞர். பாரபட்சம் இல்லாத நம் பிரதமர் ஜி.எஸ்.டி கொண்டு வந்தார். இரண்டு பேரும் தொழிலை மூடிவிட்டு, காது கொடுத்தும் கேட்க முடியாத செந்தமிழில் மோடியை அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

3. எங்கள் ஊரில், சாகும் வரை முப்பது ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த ஒரு மருத்துவருக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். இன்னொரு மருத்துவர் இருக்கிறார் கிராம மக்களிடம் “இந்த மாத்திரை சோத்துக்கு முன்னாடி; இது சோறு சாப்பிட்டுட்டு” என்று விளக்குவார். அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு மருத்துவர், பல்துறைச் சிறப்பு சிகிச்சைப் பிரிவெல்லாம் கொண்ட மருத்துவமனையைக் கட்டி இன்னும் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கிறார். அவர் நீட் தேர்வெல்லாம் எழுதவில்லை. இனி அதையெல்லாம் எழுதித் தேர்வு பெற்று வரும் வடநாட்டு மருத்துவர்கள் எங்களூர் மக்களுக்கு எப்படி விளக்கம் சொல்லுவார்களோ?!

4. ஒளிரும் இந்தியாவில் ஜியோ நெட்வொர்க் போடு போடென முன்னேற அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாமல் திண்டாடுகிறது.

5. போலியோ மருந்துக்குக் காசில்லை; கோடிக்கணக்கில் பட்டேலுக்கு சிலை.

6. கஜா புயலைப் பார்வையிடக் கூட நேரமில்லாத பிரதமர் பிரியங்கா சோப்ராவின் கல்யாணத்தில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

7. எத்தனை எதிர்த்தாலும் நீட் நடக்கத்தான் செய்தது.

8. தமிழக அரசுத் தேர்வுகளில் வட இந்தியர்கள் தேர்வு பெறுகிறார்கள்.

9. சாமியார்கள் வியாபாரம் செய்கிறார்கள்; செல்வந்தர்கள் ஆகிறார்கள்.

10. ஆளுநர் பெயரைச் சொல்லிப் பேராசிரியர் பேரம் பேசுகிறார்.

11. இவற்றையெல்லாம் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் பத்திரிக்கை ஆசிரியர்கள் கொல்லப்படுகிறார்கள். போராளி ஒருவர் காணாமலே போய்விட்டார்.

12. இதுவரை இல்லாத அளவுக்குப் பாலியல் வன்கொடுமைகள். குறிப்பாக, சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் பிரிவுப் பெண்கள் மீது.

13. எல்லாவற்றுக்கும் மேலாக, இனியும் ஒரு முறை பா.ஜ.க-வைத் தேர்ந்தெடுத்தால் அடுத்து தேர்தல் என்ற ஒன்றே இல்லாமல் போகும் நிலை வரலாம் என முன்னாள் நீதியரசர்கள், துணை வேந்தர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் அஞ்சுகிறார்கள்.

இவ்வளவுக்கும் பிறகும் “நான் இந்து மதத்தைக் காப்பாற்ற, நிலை நிறுத்த மறுபடி பா.ஜ.க-வுக்குத்தான் வாக்களிப்பேன் என்று சொல்பவர்களுக்கு ஒரு சிறிய நினைவுறுத்தல்; இந்து எனும் சமயம் எல்லோரும் சமம் என்று சொல்வதில்லை. இதற்கு, “ஆம்! நாங்கள் உங்கள் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள்தான்!” என்பது உங்கள் பதிலானால் அப்படிப்பட்ட உங்களவாளுக்கான கட்டுரை இல்லை இது. மற்றவர்கள் நீங்கள் நம்பும் சாதிப்படி அவாள் கால் பணியத் தயார் என உறுதி செய்து கொண்டு பின் வாக்களியுங்கள். இப்போதே பத்து சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தாகி விட்டது. ஒட்டகம் தலை நுழைத்திருக்கிறது. இப்போதே விரட்டாவிட்டால் நாம் கூடாரங்களைக் காலி செய்ய வேண்டியதுதான்.

என்னைப் பொறுத்த வரை, இன்னொரு முறை இவர்களுக்கு வாக்களித்தால் இது வரை அவர்கள் செய்த அனைத்தையும் நான் ஆதரித்ததாக ஆகிவிடும். அது முடியாது! என் சுற்றத்தில் இன்னொரு அனிதாவையோ, ஆசிபாவையோ, ஸ்னோலினையோ பலி கொடுக்க நான் தயாராய் இல்லை. எனவே பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்தே தீர வேண்டும். ஆனால் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டால், யாருக்கு வாக்களிப்பது என்பது அடுத்த கேள்வி!

The five parties compete in parliament election 2019 in Tamil Nadu

பிரதமர், நிதியமைச்சர் என இரண்டு பொருளாதார மேதைகள் கொண்டு அமைந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்தான் கமாடிட்டி மார்க்கெட் எனப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான துவரம் பருப்பு முதலான பருப்பு வகைகளை, அதுவரை பெயிண்ட், சிமெண்ட் போன்றவை பட்டியலிடப்பட்டிருந்த பங்குச் சந்தையின் பொருளாக மாற்றிய சாகசம் நடந்தது. நான் அம்புட்டு பொருளாதார விஞ்ஞானி எல்லாம் இல்லைதான். ஆனால் கிலோ முப்பது ரூபாய், இருபது ரூபாய் என்று விற்ற துவரையும், உளுந்தும் திடீரென அறுபது, எழுபது ரூபாய் உயர்ந்ததன் விளைவாய் சராசரிக் குடிமக்களையும் பொருளாதாரப் புலமை பெற வைத்தவர்கள் காங்கிரசின் பொருளாதார மேதைகள். அப்படிப்பட்டவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என நினைத்தால் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது.

‘சயின்டிபிக் கரப்ஷன்’ எனும் புதிய சொல்லாடல் ஒன்றை சர்க்காரியா கமிஷன் முன்வைத்தபோதும் ‘தேன் எடுக்கிறவன் புறங்கையை விட்டு வைப்பானா’ என்று புறந்தள்ள முடிந்தது. ஆனால் இலங்கையின் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் பொழிந்த குண்டு மழைக்கு “மழை விட்டாலும் தூவானம் விடாதில்லையா” என்று அரை நாள் உண்ணாவிரதத்திற்குப் பின் அறிக்கை விட்ட தி.மு.க-வை இன்று ஆதரிக்க வேண்டும் என நினைத்தால் மனம் சற்று இடறத்தான் செய்கிறது.

ஆனால் அதற்காகச் சீமானை நம்பினால் வாக்குகள் பிரியும். கமலை நம்பினால் வாக்குப் பிரிவது மட்டுமில்லாமல், ‘கருப்புக்குள் காவி’ என்று சொன்ன அவர் வென்ற பின் யாரைத் தவிர்க்க நாம் அவருக்கு வாக்களித்தோமோ அவர்களோடே இணைந்து விடவும் கூடும். தினகரன் எப்படிப்பட்டவர் என்பதே தெரியவில்லை.

நோட்டா என்பதோ செல்லாக்காசு. நோட்டா பொத்தானை அழுத்தி விட்டு நாம் தவறான தலைவனைத் தேர்ந்தெடுக்கவில்லை எனத் திருப்திப்பட்டுக் கொள்வது, இடறி விழப் போகும் குழந்தையைப் பார்க்காமல் முகம் திருப்பிக் கொள்வதைப் போலத்தான்.

எனவே வேறு வழியே இல்லாத இந்நிலையில்... பா.ஜ.க-வை ஆட்சியை விட்டு இறக்கியே ஆக வேண்டிய இன்றைய சூழலில்... அதற்கு எதிரான ஒரே வலுமிக்க கூட்டணியாக இருக்கும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பதுதான் சரி என்பதே என் முடிவு! நம் இனத்தையே அழித்தவர்கள்தான் இவர்கள். ஆனால் அப்படிப்பட்ட அவர்கள் ஆட்சியில் கூட ஈழத் தமிழர்களுக்காக நாம் போராடவாவது செய்தோம். ஆனால் இன்று, நம் பிரச்சினைகளுக்குப் போராடவே நமக்கு ஆண்டின் 365 நாட்களும் போதாததால் ஈழத் தமிழர்களை மறந்தே விட்டோம்.

எனவே இன்றைய நமது பிரச்சினைகள் தீருமோ இல்லையோ, குறைந்தது இந்தத் தொடர்ச்சியான போராட்ட வாழ்க்கையிலிருந்து நாம் சிறிது காலம் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதற்காகவாவது...

தனி ஈழம் கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்தது நம் தொப்புள் கொடிச் சொந்தங்களுக்காகப் போராடும் அளவுக்காவது நாம் நன்றாக இருப்பதற்காகவாவது...

இந்த முறை எனது வாக்கு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குத்தான்!

உசாத்துணை: 

1. BSNL fails to pay salaries for the first time; 1.76 lakh employees affected, 13.03.2019, பிசினஸ் டுடே. 

2. Does India have enough funds for its next polio vaccination drive?, 26.01.2019, பிஸ்மா மாலிக் 

எழுத்து: கோடை                             |                      கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.