இப்தார் சமத்துவ நோன்புத் திறப்பு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா - ரெயின்டிராப்ஸ்

IFTAR-6th-year-celebrations-by-raindropss-2019

இப்தார் விருந்து மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ரெயின்டிராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்றது.

ரெயின்டிராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வுக் கருத்துகளைக் கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் ‘சாதனைப் பெண்கள்’, சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ‘விருந்தாளி திட்டம்’ போன்றவை ரெயின்டிராப்ஸ் அமைப்பின் பணிகளுக்குச் சான்றுகளாகும்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு மேற்கொண்டுள்ள இசுலாமியர்கள் நாள்தோறும் மாலை நோன்புத் திறப்பைக் கடமையாகக் கொண்டுள்ளனர். இந்த நோன்புத் திறப்பை நாடெங்கும் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக விழாவாக நடத்தி வருகின்றன. அவ்வகையில் ரெயின்டிராப்ஸ் அமைப்பின் சார்பில், இப்தார் சமத்துவ நோன்புத் திறப்பு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. ரெயின்டிராப்ஸ் சார்பில் 6-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில், ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு கொண்டிருக்கும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா அவர்கள் தலைமை வகித்தார். ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் வரவேற்றார்.


The Iftar feast

தொடர்ந்து நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்து உணவருந்தினர். நிகழ்ச்சியில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடினர். ஆண்டுதோறும் ரெயின்டிராப்ஸ் அமைப்பின் சார்பில் கல்வியில் சிறப்புறும் மாணவர்கள், ஏழை மாணவர்கள் எனப் பலருக்கும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில் ரெயின்டிராப்ஸ் அமைப்பின் தன்னார்வக் கொடையாளர்கள் மூலமாக 50 ஏழை எளிய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டுக்கான உதவியாக ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழா நிறைவாக அனைவருக்கும் ‘திண்டுக்கல் தலைப்பாக்கட்டி’ உணவகம் சார்பில் ரமலான் சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது.

விழாவில் வி.ஜி.பி., குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம், ‘எக்ஸ்னோரா’ அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல், ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில், எத்திராஜ் கல்லூரின் முன்னாள் தலைவர் ‘மைக்’ முரளிதரன், பாடகர் ஷம்சுதீன், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் நிர்வாகியும் அப்துல் கலாம் ஐயாவின் பேரனுமான ஷேக் தாவூத், சமூக சேவகர் உமர் முக்தார் மற்றும் ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
படம்: நன்றி ரெயின்டிராப்ஸ்
 • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
 • 2 கருத்துகள்:

  1. அருமையா ஒரு நிகழ்வு! தொடரட்டும் சேவை!

   ரமலான் வாழ்த்துகள் அனைவருக்கும்.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி கீதா அவர்களே! நீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம்! தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்! தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

    நீக்கு

  Blogger இயக்குவது.