தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்!

Actor Surya's letter to Tamil Nadu Parents

த்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ஏழைகளுக்குக் கல்வியை எட்டாக் கனியாக்குதல் என இந்தக் கல்விக் கொள்கையில் அடி முதல் நுனி வரை காணப்படும் அத்தனையும் நாட்டின் மொத்தக் கல்வித்துறையையும் சீரழித்து விடும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோரின் வாழ்வில் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கல்வி விளக்கேற்றி வரும் நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகப் பெற்றோர்களிடம் அவசரமான ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். துவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதம் இங்கே உங்கள் இன்றியமையாப் பார்வைக்கு.

"அனைவருக்கும் வணக்கம். 

30 கோடி இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை.  

அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்ய வேண்டும்? உயர்கல்வி படிக்கத் தகுதித் தேர்வு அவசியமா? கல்வி கற்பிக்கிற மொழிக் கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா? நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இது போன்ற பல கேள்விகளுக்குப் புதிய கல்விக் கொள்கையின் பதில் என்ன?  

நம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால், கல்விக் கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன்வைக்காமல் அமைதியாகக் கடந்துவிடுகிறோம். அந்த 'அமைதி' நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். கல்விக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர்கள் புதிய கல்வி கொள்கை பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.

ஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்தக் கல்விக் கொள்கை பற்றிய நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையைத் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் குழுவிற்கு நன்றிகள்! 

நம்முடைய பங்கேற்பு மட்டுமே நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கும். அனைவரும் பங்கேற்று சமூக ஊடகங்களில் உரையாடுவோம். தமிழகக் கல்வியாளர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்போம். 

கல்வியே ஆயுதம்! கல்வியே கேடயம்!"  இவ்வாறு சூர்யா அவர்கள் கூறியுள்ளார். ஒரு நடிகரே கூறிய பிறகாவது இனியேனும் நம் மக்கள் தேசியக் கல்விக் கொள்கை குறித்து அக்கறை கொள்வார்கள் என நம்புகிறோம்! 

  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.