தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள்! - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா

கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிட்டுப் பிட்டு வைத்தார். அடுக்கடுக்கான புள்ளிவிவரங்களும் கள ஆய்வு ஆதாரங்களும் நிரம்பிய அவரது அந்த உரையின் காணொலி மேலே! அதன் முழு எழுத்தாக்கம் அப்படியே கீழே!

இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகரத்தில் இருக்கும் அத்தனை பேரும் பதற்றமாகச் சொன்னார்கள். தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பெரிய பதற்றம் அகரத்தில் இருக்கும் அனைவருக்கும் இரவு பகலாகப் பணியாற்றும் தன்னார்வலர்கள் உட்பட அத்தனை பேருக்குமே இருந்தது. என்ன என்று ஆராய்ந்து பார்த்தபோதுதான் இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரிய வந்தது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு மாணவ மாணவிகள், அதிலும் 88% முதல் தலைமுறை மாணவர்கள் இங்கிருந்து படிப்பை முடித்து வேலைக்குப் போயிருக்கிறார்கள். இரண்டாயிரம் மாணவர்கள் இங்கே படித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் அரசுப் பள்ளிகளிலிருக்கும் தன்னார்வலர்கள் மூலமாக அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது, அடிமட்ட அளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய நிகழ்வுகள் எங்களுக்குத் தெரிந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு அரசுப் பள்ளிகளில், போதுமான கட்டமைப்புகள் இல்லாமல், போதுமான ஆசிரியர்கள் இல்லாமல், சாதாரண கிராமப்புறங்களிலிருந்து வந்து பல தடைகளைத் தாண்டி மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அப்படிப் படிக்கிற மாணவர்களின் பிரதிநிதியாக, அங்கே இருக்கும் முதல் தலைமுறை மாணவர்களின் பெற்றோர்களுடைய பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன்.

இங்கே இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை பற்றிய சரியான வெளிச்சம் போய்ச் சேரவே இல்லை. இந்தக் கல்விக் கொள்கை இந்தியா முழுக்க முப்பது கோடி மாணவர்களுடைய கல்வியைத் தீர்மானிக்கும் ஒன்று. அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியது. எதிர்காலத்தை மாற்றுவது. இதைப் பற்றிப் பேசுவது என்பது நம் நாட்டுடைய வளர்ச்சி பற்றி, எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவதாகும். ஆகவே முக்கியமாக இது எல்லாருக்கும் போய்ச் சேர ஒரு மேடை வேண்டும். அந்த மேடையில் நான் கண்டிப்பாக இருக்கிறேன்.

நான் இருபது ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ நான் சொல்வதைப் பார்ப்பார்கள், கேட்பார்கள், புரிந்து கொள்வார்கள் இது போய்ச் சேரும் என்கிற காரணத்தால்தான் இங்கே வந்திருக்கிறேன்.

இங்கே முக்கியமாக எல்லாருடைய கோபமும் வருத்தமும் அச்சமும் என்னவென்றால், தேசியக் கல்விக் கொள்கையில் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத்தேர்வு ஆகியவற்றில் காட்டப்பட்டிருக்கும் கவனம் தரமான சமமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை. இது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. தரமான சமமான கல்வியைக் கொடுக்காமல் எப்படித் தகுதியான மாணவர்களை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? எப்படி நுழைவுத்தேர்வுகளுக்கு மட்டும் நீங்கள் கவனம் செலுத்த முடியும்? அடிமட்டத்தில் இருக்கும் விஷயங்கள் பற்றி எப்படிக் கவனமில்லாமல் இருக்க முடியும்? முப்பது கோடி மாணவர்கள் பற்றிப் பேசும் விஷயம் இது! அப்படி என்ன காலக்கெடு? அப்படி என்ன நேரமின்மை? ஏன் உடனே செய்தாக வேண்டும்?

ஏன் இங்கிருக்கும் அத்தனை பேரும் பேசவில்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தது. நான் யாரையும் மறக்கவில்லை. நாங்கள் இப்பொழுது நடத்தும் ஊடகச் சந்திப்புக்கு முன்பாகவே நிறைய ஊடகச் சந்திப்புகளைக் கல்வியாளர்களும் அறிஞர்களும் நடத்தியிருக்கிறார்கள். அப்படி ஒரு குரலை எழுப்பியதற்காக அவர்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு! பெரிய மரியாதை! அப்படி அவர்கள் செய்திருக்காவிட்டால் இந்த ஜூன் 30ஆம் நாள் வரையிலான காலக்கெடு ஜூலை 30 என்று நீட்டிக்கப்பட்டிருக்காது.

ஆனால் ஏன் மாணவர்களோ ஆசிரியர்களோ பெற்றோர்களோ இதைப் பற்றிக் கவனம் செலுத்தவேயில்லை என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. இதுதான் எதிர்காலம்! இதுதான் எல்லாவற்றையும் மாற்றப் போகிறது! நம் வீட்டிலிருக்கும் குழந்தைகளுடைய எதிர்காலத்தை மாற்றப் போகிறது! எந்தப் பள்ளியில் எந்தக் கல்லூரியில் நீங்கள் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தாலும் இது அவர்கள் வாழ்க்கையை மாற்றி விடும். அவர்கள் நம் கண்ணெதிரே சிரமப்பட்டுப் படிக்கப் போகிறார்கள். நாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோம். “இதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் படித்து விடு” என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

கிராமப்புற மாணவர்கள் கல்விக்காக ஆங்காங்கே சிறு சிறு பள்ளிகள் இருக்கின்றன. அங்கே ஓராசிரியர் கொண்ட அல்லது பத்துக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள். அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? என்ன குறை இருக்கிறதோ, எங்கே சரியான கட்டமைப்புகள் இல்லையோ, என்ன வசதி இல்லையோ அதைச் சரி செய்யாமல் அவற்றை மூடினால் என்னாகும்?

எத்தனையோ கிராமங்களை நாங்கள் போய்ப் பார்த்திருக்கிறோம். பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் எங்கே போய்ப் படிப்பது எனத் தெரியாமல் மலையேறி ஆறு தாண்டி வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவுதான் அங்கே வசதி இருக்கிறது. ஓராசிரியர் பள்ளிகள் நிறைய இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் மூடி விட்டு ஒருங்கிணைந்த பள்ளி என்பதைத் தொடங்கப் போகிறார்கள். அப்படியானால் பச்சையாகச் சொன்னால் – சென்னையில் இருக்கிற, இது போன்ற மாநகரங்களில் இருக்கிற மாணவர்களை நீங்கள் விட்டு விடுங்கள். அவர்கள் நன்றாக, பாதுகாப்பாகத்தான் இருக்கப் போகிறார்கள் – பழங்குடியினர், இன்னும் கீழே கிராமங்களில் இருப்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கை என்னாகும்? அவர்களுடைய தொடக்கப்பள்ளி வாழ்க்கை என்னாகும்? இது மிகப் பெரும் கேள்விக்குறி. ஏறக்குறைய 1848 பள்ளிகள் இருக்கின்றன. இவை அனைத்துமே மூடப்படும் என்கிறார்கள். இவை மூடப்பட்டால் என்னாகும்?

இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது என்கிறோம். நம் மாணவர்களில் 60% பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். இவர்களில் நிறைய பேர் உண்மையாகவே கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள். தேசியக் கல்விக் கொள்கை மூலம் அவர்களின் தொடக்கக்கல்வி என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறுகிறது.

மூன்று வயதில் மூன்று மொழி திணிக்கப்படுகிறது. எங்கள் வீட்டில் மூன்று மொழிகள் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் என் மகனுக்கும் மகளுக்கும் மூன்றாவது மொழியைக் கற்றுக் கொடுப்பது பெரிய சவாலாக இருக்கிறது. எனில் இதையே நீங்கள் இங்கே ஒரு கல்விமுறையாக ஆக்கினால் எப்படி மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள்? எப்படிப் படிப்பார்கள்? அவர்களுக்கு யார் கற்பிப்பார்கள்? முதல் தலைமுறை மாணவர்களுக்கெல்லாம் என்ன ஆகும்? அவர்களின் எதிர்காலம் என்னாகும்? இந்தக் கல்வி திணிக்கப்பட்டால் எப்படி இதைச் சமாளிக்கப் போகிறோம்? நீங்கள் எல்லாரும் அமைதியாகவே இருந்தால் இது திணிக்கப்படும்.

அடுத்தது பள்ளித்தேர்வு.

மூன்றாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு; ஐந்தாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு; எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட இருக்கிறது. ஒரு தேர்வைச் சரியாகச் சந்திக்க முடியவில்லை என்றால் வெட்கப்பட்டு, குறுகி பள்ளியை விட்டே சென்று விடுகிறார்கள் பல மாணவர்கள். வளர்ந்த நாடுகள் பலவற்றில் எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளோ இது போன்ற இன்ன பிற விதயங்களோ இல்லை.

நம் மொத்த மாணவர் எண்ணிக்கையில் தொடக்கப்பள்ளியில் சேர்பவர்களின் எண்ணிக்கை 95% என்றால் 11ஆவது, 12ஆவதின்பொழுது அந்த எண்ணிக்கை வெறும் 55% ஆகக் குறைந்து விடுகிறது. ஆக 40% மேல் அங்கேயே இடைநிற்றல். பள்ளிக்கு வருவதேயில்லை. நான் தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை மற்ற மாநிலங்களைப் பற்றியும்தான் பேசுகிறேன். ஏறக்குறைய 6.5 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. இடைநிற்றலில் 40% தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன காரணம் என்று ஆராய்ந்தால், நான் மறுபடியும் அகரத்திலிருந்து எடுத்துக்காட்டு சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் நாங்கள் பள்ளிகளை, மாணவர்களை, ஆசிரியர்களை, அங்கிருக்கும் நிலைமைகளை, எவற்றையெல்லாம் அவர்களை தாண்டி வருகிறார்கள் என்பதைப் பத்து ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பத்து ஆண்டுகளாக மாணவர்கள் 30% பேர் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை.

இங்கிருக்கும் மாணவர்களைக் கேட்டுப் பாருங்கள்! நிறைய பேர் கை தூக்குவார்கள். இந்தப் பாடத்துக்கு எனக்கு ஆசிரியர் இல்லை. ஆசிரியர் இல்லாமல் இந்தப் பாடத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கை தூக்குவார்கள். 30% மாணவர்கள் போதுமான ஆசிரியர்களே இல்லாமல் 12ஆவது பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். அவர்களை எப்படி நீங்கள் மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வு (NEET) எழுதச் சொல்வீர்கள்? எப்படி ஆறு செமஸ்டர்களை எழுதச் சொல்வீர்கள்? எப்படி எட்டு செமஸ்டர் வைப்பீர்கள் ஆசிரியர்களே இல்லாமல்? இது போன்ற தேர்வுகள் பள்ளிகளில் கொண்டு வரப் போகிறார்கள்.

அடுத்தது நுழைவுத்தேர்வு.

நீங்கள் மூன்றாம் வகுப்பில், ஐந்தாம் வகுப்பில், எட்டாம் வகுப்பில் என இத்தனை பொதுத்தேர்வுகள்; அப்புறம் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அத்தனை செமஸ்டர்கள், அத்தனை கேள்வித்தாள்கள், அத்தனை விடைத்தாள்கள், அத்தனை மதிப்பெண்கள், அத்தனை பதற்றம் என அவ்வளவு அழுத்தங்களையும் தாண்டி வந்தால் இவை அத்தனையையும் அப்படியே தூக்கிப் போட்டு விட்டு ஒரே ஒரு தேர்வு – நுழைவுத்தேர்வு. அந்த ஒரு தேர்வை நீ வென்றால்தான் எந்த ஒரு பட்டப்படிப்பையும் படிக்க முடியும்.

மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வுக்கு வந்த சிக்கல்களைப் பார்த்தீர்கள். முதலில் அறிமுகப்படுத்தியபொழுது அரசுப் பள்ளிகளிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள். ஆனால் அதில் ஒரே ஒரு மாணவர்தான் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. அரசும் தனியாரும் சேர்ந்த எண்ணிக்கையில் பதினெட்டு மாணவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்த ஆண்டு மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 60% பேர் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பை முடித்தவர்கள், அதற்கு முந்தைய ஆண்டு 12ஆம் வகுப்பை முடித்தவர்கள் அத்தனை பேரும் மறுபடியும் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் (private coaching centre) சேர்ந்து இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது சமூகத்தின் சமநிலையைப் பாதிக்கிறது. கன்னா பின்னாவென்று பாதிக்கிறது. மருத்துவம் எனும் ஒரு கல்விக்கு வைத்த நுழைவுத்தேர்வினாலேயே இவ்வளவு பாதிப்பு. தேசியக் கல்விக் கொள்கை மூலம் எல்லாப் படிப்புக்குமே இது வரப் போகிறது.

ஆக கற்பித்தல் என்பதே இனி இல்லை. கற்பித்தல் என்பதே இல்லாமல் எல்லாப் பள்ளிக்கூடங்களும் பயிற்சி மையங்களாக மாறப் போகின்றன. இப்பொழுதே நிறைய பள்ளிகளில் இது தொடங்கி விட்டது. தேசியக் கல்விக் கொள்கை இன்னும் அமல்படுத்தப்படவே இல்லை. அதற்குள்ளாகவே இந்தப் பயிற்சி மையங்களின் வருமானம் ரூ.5000 கோடி என்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் நம்முடைய எதிர்காலம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? இவ்வளவு நுழைவுத்தேர்வுகள் வைத்தால் அவர்கள் எங்கே போய்ப் படிப்பார்கள்? என்ன செய்வார்கள்? இது அவர்களைப் பொறுத்த வரை கல்வியை அப்படியே ஓர் இரும்புக் கதவு போட்டு மூடுவது போலத்தானே? மாநகர மாணவர்களைப் பற்றி மட்டும்தானே இதில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது? அப்படித்தானே தெரிகிறது? அப்படித்தானே இதைப் பார்க்க முடியும்?

இந்தப் பொதுத்தேர்வுகள், செமஸ்டர்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டால் பள்ளியில் படிப்பது மட்டும் போதாது. பயிற்சி மையங்கள் தானாகவே இன்னும் நிறைய முளைக்கப் போகின்றன. ஆக கற்பித்தல் என்பது போய் வெறும் பயிற்சியாக நமது கல்விமுறை மாறப் போகிறது.

அடுத்து கல்லூரிகள்.

ஏறக்குறைய 907 பல்கலைக்கழகங்களும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளும் இந்தியா முழுக்க இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை தேசியக் கல்விக் கொள்கை மூலம் அப்படியே நான்கில் ஒரு பங்காக மாற்றப் போகிறார்கள். ஏறக்குறைய வெறும் 12000 கல்லூரிகள் மட்டும்தான் இனி இருக்கும். எளிமையானது, வசதியில்லாதது, தரமில்லாதது எல்லாவற்றையும் இழுத்து மூடப் போகிறார்கள். ஆனால் 2035-இல் நம் மாணவர்களில் 50% மேற்பட்டோர் உயர்கல்வியைப் படிப்பார்கள் என்கிற ஒரு கணிப்பையும் இதில் காட்டுகிறார்கள். சீனாவில் உயர்கல்வி கற்பவர்களின் விழுக்காடு 51ஆக இருக்கிறது. நாம் அதைத் தாண்டப் போகிறோம் என்கிறார்கள். அதாவது கல்லூரிகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திலிருந்து பன்னிரண்டாயிரமாகக் குறைந்து விடுமாம். ஆனால் அதில் படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்து விடுமாம். அது முடியுமோ இல்லையோ, ஆனால் இந்த எண்ணிக்கைக் குறைப்பிலிருந்து என்ன தெரிகிறது? கிராமப்புறங்களில், சிறிய ஊர்களில் இருக்கும் கல்லூரிகள் இழுத்து மூடப்படும். அங்கிருக்கும் மாணவர்களுக்கு மறுபடியும் தடை... தடை... தடைதான்! அவர்கள் எங்கே போய்ச் சேருவார்கள்?

இதை ஏன் நாம் யாருமே கேட்க மாட்டேன்கிறோம், இது ஏன் நம் யாருக்குமே தெரிய மாட்டேன்கிறது, இதைப் பற்றி அச்சம் இருக்க மாட்டேன்கிறது, ஒரு விழிப்புணர்ச்சி இருக்க மாட்டேன்கிறது என்பது எனக்குப் பெரிய கலக்கத்தையே ஏற்படுத்தியது.

நம் சமூகத்தில் ஏறக்குறைய 80 இலட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ஆசிரியர் அமைப்புதான் இந்தத் தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் பிரதிநிதியாக இருந்திருக்கிறது. அதே போல் ஒரே ஒரு மாணவர் அமைப்பு மட்டும்தான் மாணவர் பிரதிநிதியாக இருந்திருக்கிறது. இவர்களிடம் கேட்டுத்தான் இதை வடிவமைத்ததாகத் தெரிய வருகிறது. இதன் காரணம் என்ன என்பது மறுபடியும் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆக அருள் கூர்ந்து விழிப்போடு இருங்கள்! கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் உரிமைக்காகப் போராடுகிற சங்கங்கள் அத்தனை பேருமே கொஞ்சம் விழித்து இதற்கான மாற்றங்களை உரக்கச் சொல்லாவிட்டால் நமக்கான மாற்றங்கள் நமக்குக் கிடைக்கவே போவதில்லை.

எனவே நமது குரல் வெளியில் கேட்க வேண்டும் என்றால் கடைசி நாளான ஜூலை 30-க்குள் https://innovate.mygov.in/new-education-policy-2019/ எனும் இணையத்தளத்தில் உங்களுடைய கருத்துக்களை அருள் கூர்ந்து பதிவிடுங்கள்! இது நம் குழந்தைகளின் எதிர்காலம்! நம் தலைமுறையின் எதிர்காலம்! இதில் நிறைய நன்மைகளும் உள்ளன. அதே நேரம் அச்சம் தரக்கூடியவையும் நிறையவே உள்ளன. எனவே அரசுடன் இணைந்து இதில் என்னென்ன மாற்றங்கள் தேவையோ அவற்றைக் கண்டிப்பாகச் செய்வோம்! விழித்திருந்து செய்வோம்!


 நன்றி: சினிமா விகடன்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.