தேர்வெனும் அரவம் - கோடை


Public Exam for 5th and 8th Standard

குடித்த பால்
குமட்டிலேயே இருக்கிறது
அவர்களுக்கு!!

முன்பல் எத்தி வந்த பின்
விரல் சப்புவதை விட்டிருக்கிறாள் அவள்

பலப்பம் கடிப்பதை விடுத்து
பச்சைக்குதிரை தாவுகிறான் அவன்

பச்சைக் குழந்தைகள் அவர்களை
தேர்வெனும் அரவம்
விழுங்கும் கொடுந்துயரை
பதற்றமே இல்லாமல்
பார்த்து ரசிக்கிறாய் நீ!
உன் குடை சரிக!!
கொற்றம் வீழ்க!!!

புதைக்கப் பார்க்கிறாய்
அவர்கள் புழுக்கள் அல்ல
விதைகள் என்பதே மறந்து

இடர்களுக்கிடையே
சுடர் விடும் தீர்க்கம் எமது
கேட்டுப் பார் கீழடியை!

குருதி படிந்த உன்
கோரைப்பல் பிடுங்க
இம்முறை எம் அசுரன்
ஏந்துவான் அறிவெனும் ஆயுதம்

சரித்திரத்தை நாங்கள் எழுதுவோம்
புராணமாய் அதை
புரட்டிப் போட்டுப் பிழைத்துக் கொள் போ!!

நினைவில் வை!!
மண்ணுயிர்க்கெல்லாம்
ஒளி நல்கும்
சூரியப்பந்து குளிர்கிற
இறுதி நாளிலும் இருக்கும்
எம் தமிழின் கையெழுத்து!!

எழுத்து: கோடை    |     ஓவியம்: மைதிலி     |     வரைதல் உதவி: க.மகிமா, 5ஆம் வகுப்பு
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.