சென்னை எனக்குக் கொடுத்தது என்ன? | #Madras380 (1)தமிழர்களின் தாய்மடி தமிழ்நாடு. அந்தத் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை! அப்பேர்ப்பட்ட சென்னையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆகஸ்டு 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 380ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். அதையொட்டி நான் விடுத்த அழைப்பை ஏற்று நம் நேயர்கள் சென்னையுடனான தங்கள் உறவை, பிணைப்பைச் சொற்களால் வடித்து அனுப்பியிருந்தார்கள். சென்னை என்பது வெறும் பிழைப்புக்கான வேட்டைக் களம் எனும் மாயத்தோற்றத்தை நொறுக்கி இந்நகரத்துடனான நெகிழ்மிகு அன்பைப் பேசும் அந்தப் பதிவுகள் இன்று முதல் தொடர்ச்சியாய் உங்கள் பார்வைக்கு. 
- பிரகாஷ் சங்கர், ஆசிரியர்.

சென்னை! இந்த வார்த்தையைச் சொல்லும்போதே ஒரு சொல்ல முடியாத உணர்ச்சி எனக்குள் வரும். எல்லாரும் “சென்னை என்பது வெறும் சொல்; மெட்ராஸ் என்பது உணர்வு” என்பார்கள். எனக்குச் சென்னைதான் உணர்வு! மெட்ராசுடனான என் பழக்கம் வெறும் 14 வருடம்தான். அதில் 10 வருடம் மெட்ராஸ் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வளர்ந்திருப்பேன். ஆனால் சென்னையுடனான உறவு 24 வருடம். இனியும் அது நான் இருக்கும் வரைக்கும் தொடரும்.

சென்னையில் பிறந்து வளர்ந்ததால் நடந்த முக்கியமான நல்ல விஷயம், யார் என்ன சாதி, என்ன மதம் எனப் பார்க்காமல் பழகும் வழக்கம். இன்றைக்கு வரைக்கும், என்னோடு படித்தவர்கள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என யாருடைய சாதியும் எனக்குத் தெரியாது. அதைக் கேட்க வேண்டிய தேவையும் இருந்ததில்லை. இது நான் கேரளாவிலேயோ தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலேயோ வளர்ந்திருந்தால் சாத்தியப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

அதே போல், ஒரே குடியிருப்பு வளாகத்தில் தமிழ், தெலுங்கு, மார்வாடி எனப் பல மொழிகள் பேசுபவர்களோடு பழகும் வாய்ப்பையும் சென்னைதான் எனக்குக் கொடுத்தது. எல்லார் பண்டிகைகளையும் ஒன்றாகக் கொண்டாடியிருக்கிறோம்.

“சென்னையெல்லாம் ஒரு ஊரா?” என்று கேட்பவனிடம் “சென்னை உன்ன என்னடா பண்ணிச்சு?” என்று கேட்டால் அவன் சூழ்நிலையாலும் மனிதர்களாலும் ஏற்பட்ட கெட்ட அனுபவங்களைச் சொல்லுவான். அதில் சரிபாதி அவனுடைய பங்கும் இருக்கும். ஆனால் குறை சொல்வது நம் சென்னையை.

சென்னை என்று இல்லை. நாம் இடம்பெயரும் எந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரோடு உள்ளார்ந்த ஒரு பிணைப்பை உண்டாக்கிக் கொள்ளாவிட்டால் அங்கே வாழ்வது நரகமாகத்தான் இருக்கும். அது அந்த ஊரின் தவறு இல்லை; நம் தவறு. கொண்டாட ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது எதற்காகச் சரியாக அமையாத ஒன்றிண்டு விஷயங்களைப் பெரிதுபடுத்திச் சென்னையைப் பழிக்க வேண்டும்?

யாராவது என்னிடம் “சென்னை உனக்கு என்ன குடுத்துச்சு? என்ன பண்ணுச்சு?” என்று கேட்டால் கெத்தாகச் சொல்வேன், “சென்னைதான் எனக்கு வாழ்க்கை கொடுத்துச்சு” என்று.

எழுத்து: ஷினு வின்சென்ட் | கணினி வரைகலை: ஜெகதீஷ்வரன்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.