இந்த 21 நாட்கள்! - வரமா? சாபமா?

Quarantine - A Boon or Curse?

டுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி எத்துணை நாள் வருந்தி இருப்போம்! விடிந்தும் விடியாமலும் எழுந்து வந்து அடுப்பங்கரையில் சமைத்துக் கொண்டு இருந்திருப்போம். காலை உணவைக் கூடக் கால நேரம் தெரியாமல் சாப்பிட்டுத் தொலைத்திருப்போம். அவதியாகவே கார், பைக், பேருந்து என ஏதாவது ஒன்றில் விடிந்தும் விடியாத கனவுகளோடு பயணப்பட்டுக் கொண்டிருந்திருப்போம். கூட்ட நெரிசல், போக்குவரத்து நெருக்கடி என அனுதினமும் ஏதாவது ஒரு காரணத்தால் காத்துக் கிடந்திருப்போம். எதிர்பாராத விபத்து, திடீர் மரணம் என ஏதாவது ஒன்றில் மனம் உடைந்து போயிருப்போம். வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்திருப்போம் . குழந்தை, குடும்பம், பெற்றோர் எனக் கால்கள் சற்று நேரம் ஓய்வு கொண்டாலும் இரவு உணவு, மீண்டும் வேலை என்று மறுபடியும் ஓடிக் கொண்டே இருந்தோம்.

நாமே நினைத்தாலும் மீள முடியாத இந்த அதிவேகச் சுழற்சியிலிருந்து சற்றே விடுவித்துக் கொள்ளக் கனவிலும் கிடைக்காத வாய்ப்பைக் காலம் வழங்கியிருக்கிறது!

அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை. காலைச் சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்திருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனங்கள் இல்லை. பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளைப் பார்க்க முடிகிறது. அடிதடி வெட்டு குத்துகள் குறைந்திருக்கின்றன. மதுக்கடைகள் மூடிக் கிடக்கின்றன. நகைக்கடைகள் பூட்டியே இருக்கின்றன. ஜவுளிக்கடை விளம்பரங்களைக் காணவில்லை. நிரம்பி வழியும் மாநகரப் பேருந்துகள் இல்லை. படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை.


தெருவெல்லாம் சுத்தமாய்க் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள். அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை. எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை. காவல்துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். மருத்துவரைத் தெய்வமாய்ப் பார்க்க முடிந்திருக்கிறது. செவிலியர்களை சகோதரிகளாய் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.

சிட்டுக்குருவிகள் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகின்றன. பறவைகள் ஓசை பலமாய்க் கேட்க முடிகிறது. பொழுது சாயும்போது எந்த இரைச்சலும் இல்லை. வெளியே போனவன் எப்படித் திரும்ப வருவானோ என்ற பயம் குடும்பத்திற்கு இல்லை. போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய ஆர்வமில்லை.

தெருவில் எச்சில் துப்பத் தயங்குகிறோம். வெளிநாட்டிலிருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம். அகந்தை அழிந்து போயிருக்கிறது. சிறு வயது ஞாபகங்களை அசை போட நேரமிருக்கிறது. தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம். சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். சிந்திக்க பழகி இருக்கிறோம். மற்றவர்கள் வழி புரிந்திருக்கிறது. மனம் நோகாமல் பேச முயன்று வருகிறோம்.
 

ஆனால் இது மட்டும் போதாது. அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குவோம். அப்பாவோடு மனம் விட்டுப் பேசுவோம். பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுப்போம். பிரிந்த நண்பர்களின் எண்களைத் தேடி எடுப்போம். மன்னிப்புக் கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுவோம்! யாரையாவது மன்னிக்க நினைத்திருந்தால் மன்னித்தும் விடுவோம்!

ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்போமோ அப்படி நேசித்துப் பார்ப்போம்.மீண்டும் தொடங்குவோம்! எங்கு எந்தத் தவற்றைச் செய்தோமோ அதைத் திருத்திக் கொள்வோம். வீட்டில் இருப்பதற்கு வெறுப்படைய வேண்டாம்! வீடே இல்லாதவர்களை நினைத்துப் பார்ப்போம்!

நாம் யாரென்பதை உணரவே நமக்கு ஒரு வைரஸ் தேவைப்பட்டிருக்கிறது. உணர முயற்சிப்போம்! நம்மை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுவோம்! வாழ்க்கை எப்போதும் ரீ ஸ்டார்ட் ஆப்ஷனை வழங்குவதில்லை. ஆனால் இப்போது வழங்கியிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள்! இது வரமா, சாபமா? நிச்சயமாக வரம்தான்!

வாருங்கள்! வாழ்ந்து பார்க்கலாம்!

எழுத்து: மௌலிப் பிரியா           |           கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.