உயிர் வ(ழி)லி - தீபா ஜெயபாலன்
கருத்த மேகம் கணகணன்னு
இடி இறக்க
காத பொத்தி
வச்சாலும் வெட்டுற மின்னலு
விலகியா போகும்!
கொட்டுற மழையில
கூடு சாஞ்ச
நிலையில
கூவத்தான் சத்து
இருக்குமா
குயிலுக்கு!
கோட்டை கட்டி
வாழ்ந்த இடமெல்லாம்
கோட்டான் கூடு கட்டி
அலறுது!
நாதியத்த மக்களோ
நத்த போல
நகருது!
காய்ந்த
சருகாட்டம்
காத்து அடிக்கும்
திசையை பார்த்து
உசுரெல்லாம்
பறந்து போச்சே!
இறுக்கிப்
பிடிச்ச ஈசலாட்டம்
ஒடிஞ்சு போச்சே
மனுச வாழ்க்கை!
ஊரு கூடிக் குலம்
செழிக்க
பலிச் சோறு
படைக்கறீங்களே?
உறிஞ்சப்பட்ட
இரத்தம்தான்
மணி மணியாய்
மின்னுதோ!
வெள்ளந்தி மனசுல
வெனைய வெதச்சி
துரோகம் எனும்
அருவாளால அறுபட்டு
சிந்தப்பட்ட
குருதியில் சிரிக்குமா
அந்தச் சாமி!
பாட்டன் பூட்டன்
உழுத நிலமெல்லாம்
ஊர் நத்தம் ஆகிப்
போச்சு!
பவுசு காரும்
பண்ணையாரும்
நாட்டாமை பண்ண
வந்தாச்சு!
கை கட்டி வாழுங்க,
இல்ல
நடைய கட்டிக்
கெளம்புங்க!
இறுமாப்பாய்
இறங்கிய வார்த்தைகளோ
பல!
வாழ வழி விட்டு
வாழ இடம் தேடி
புரை விழுந்த
கண்ணோடு
நரை படிந்த
தலையோடு
நடை தளர்ந்த
காலோடு
நடந்து போகுதே
ஒரு கூட்டம்!
வெரசா நட ஆத்தானு
சொன்ன
பொக்க
வாய்க்குள்ளதான் எத்தன நடுக்கம்!
புள்ளதாச்சி
புள்ள
புதுப் பொண்ணு
கணக்காவா நடப்பா!
பொத்திகிட்டு நடம்மான்னு
கிழவி
சொன்னாளே எடுப்பா!
தோளுல பிள்ளையும்
மாருல வலியும்
சுமந்த கூட்டம்
ஊர் எல்லைய
தொட்டுச்சோ
இல்லையோ
மண்ண தின்ன
வாயோடு
மழலை மாறா
சொல்லோடு
ஏ... ஆத்தா போற
இடத்துல
தின்ன மண்ணு
இருக்குமானு
கேக்க
மொத்த உசுரும்
ஒத்த நொடியிலே
சரிஞ்சு போச்சு
மண்ணு மேல!
எழுத்து: தீபா ஜெயபாலன் | படம்: நன்றி இராய்ட்டர்ஸ்
நாதியத்த மக்களோ நத்த போல நகருது...உண்மையில் உயிர் வலி..
பதிலளிநீக்குஉங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி!
நீக்கு