"சொல்லித் தெரிவதில்லை திரைப்படக்கலை!" – இயக்குநர் உமா வங்கல்

‘Filmmaking cannot be taught, but can be learned’ – Uma Vangal

ரடங்கு அமலானது முதல் இணையம் வலைக்கருத்தரங்குகள் (webinars) நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் மிகச் சிறந்த வலைக்கருத்தரங்கு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறை, திரைப்பட நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது. "Cinema Speak: Decoding Film Texts" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பிரபல திரைப்பட இயக்குநரும், விமர்சகருமான உமா வங்கல் அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டார். 

காலப்போக்கில், உலக சினிமா தன் தாக்கத்தின் வரம்பை விசாலமாக்கிக் கொண்டுள்ளது பற்றிய ஒரு குறிப்புடன் தொடங்கிய அவர், அதனை பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் எனப் பிரித்துப் பார்ப்பது தவறு என்று சுட்டிக் காட்டினார். அவரது பார்வையில், ஒவ்வொரு மொழி சார்ந்த திரையுலகமும், அதற்கே உரிய பாணியில் தன் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

பிறகு, திரைப்படப் பார்வையாளர்கள் தன்னை அறியாமல் பல்வேறு கலாச்சாரத் தாக்கங்களுக்கு உட்படுவது குறித்து விரிவாகப் பேசிய அவர், இந்த வித்தியாசங்களும், விவரங்களும்தான், திரைப்படங்களோடு, சில பார்வையாளர்கள் தங்களை அதிகம் தொடர்புபடுத்திக் கொள்ள முடிவதற்கான காரணம் என்றார். இதைத் தெளிவுபடுத்த, தமிழ்த் திரைப்படம் ஒன்று, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படுவதைச் சுட்டிக் காட்டினார். 

கதை, எழுத்தாக்கம் (script), திரைக்கதை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அவரைப் பொறுத்த வரை, கதையே திரைப்படத்தின் கரு. அதுதான் அந்த ஊடகத்தின் வழியே ஓர் இயக்குநர் சொல்ல விரும்பும் கருத்தின் சட்டகத்தைத் தீர்மானிக்கிறது. எழுத்தாக்கம் என்பது கதையைப் பகுதி பகுதியாகப் பிரித்து முழு வடிவத்தைக் கொண்டு வருவது, சற்று தொழில்நுட்பமானது. திரைக்கதையின் வேலையோ கதையை மக்களிடம் எடுத்துரைப்பது. இந்த நிலையில், இயக்குநர் கதையை மக்களிடம் எவ்விதம் சொல்ல வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இது மக்களின் விருப்பு வெறுப்பு, கலாச்சாரம், நம்பிக்கைகள், பின்னணி ஆகியவற்றைப் பொறுத்தது என்றார். 

சினிமாவின் வகைகள், அவற்றின் வித்தியாசங்கள், முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்திய சினிமாவில் 6 அல்லது 7 வகைமைகளை (genres) ஒரே திரைப்படத்தில் தந்ததும், வணிக நோக்கில் மட்டுமே அதிகம் படங்கள் வந்ததையும் குறிப்பிட்ட அவர், ஹாலிவுட்டில் 3 வகைமைகளுக்கு மேல் ஒரு திரைப்படத்தில் உபயோகிக்காததையும் சுட்டிக் காட்டினார். இந்தியத் திரையுலகம் இந்த உத்தியைக் கையாளக் காரணம் பார்வையாளர்களின் ரசனை அத்தனை வேறுபட்டிருந்ததே. இந்தியத் திரையுலகம், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏதாவது கிடைக்க வேண்டும் என்ற தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறது. 

இத்துடன் திரைப்படப் பகுப்பாய்வின் வடிவங்கள் குறித்து ஒரு சுருக்கமும் வழங்கப்பட்டது. குறியீட்டியல் (semiology), உளவியல், சமுகவியல், கலாச்சார ஆய்வுகள், இடைநிலை ஆய்வுகள் மற்றும் விமர்சன ஆய்வுகள் என ஆறு வடிவங்களை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு விமர்சனத்தை உருவாக்க இந்த அம்சங்கள் அனைத்துமே பயன்படுத்தப்படலாம். 

உமா அவர்களைப் பொறுத்த வரை, திரைப்பட இயக்கத்தைச் சொல்லித் தர முடியாது; ஆனால், கற்றுக் கொள்ள முடியும். அனுபவமே ஒவ்வொரு நாளும் புரிதலை அதிகப்படுத்தி, திறமை மெருகேறச் செய்யும். 

எழுத்து: யாஷ் மிஷ்ரா
தமிழில்: நா.ஐஸ்வர்யா
நன்றி: சினிமாபீடிகா
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.