உ.பி.: நடந்தது பாலியல் வன்கொடுமை இல்லை இனப்படுகொலை! - ஊடகங்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!

UP: Not a Sexual harassment but a Genocide
 
த்திரப்பிரதேசத்தில் இளம்பெண் மனிஷா பற்றிய செய்தியைக் கேள்வியுற்ற மனித இதயமுள்ள யாருக்கும் அன்றிரவு தூக்கம் வரவில்லை.

அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து...

அதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக நாக்கை அறுத்து...

இடுப்பு எலும்பு, கழுத்து எலும்பு ஆகியவற்றை முறித்து...

கேட்கவே நெஞ்சில் நெருப்பள்ளிக் கொட்டுவது போல் துடிதுடிக்க வைக்கின்றன அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள்.

நாடே இதற்காக உதிரக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்பொழுதே மீண்டும் இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது, உத்திரப் பிரதேசம் உண்மையில் மனிதர்கள் வாழும் பகுதிதானா எனும் ஐயத்தை எழுப்பியுள்ளது.

நடந்த இந்தக் கொடுமைகளை விடக் கொடியது மனிஷா வழக்கை அம்மாநில அரசு கையாளும் விதம்.

- பாதிக்கப்பட்ட பெண் இறந்ததும் பெற்றோருக்குக் கூடத் தெரிவிக்காமல் உடலைக் காவல்துறையினரே எரிக்கிறார்கள்!

- நடந்த குற்றத்துக்கு எதிராகப் போராடுபவர்களைக் கைது செய்கிறார்கள்!

- இறந்த பெண்ணின் குடும்பத்தினரை ஊடகங்களோ தலைவர்களோ சந்திக்க விடாமல் வெளிப்படையாகவே தடுக்கிறார்கள்!

- கொடுத்த வாக்குமூலத்தை மாற்றிக் கூறும்படி மாவட்ட ஆட்சியரே அந்தப் பெண்ணின் தந்தையை மிரட்டுகிறார்!

அடுத்தடுத்து நிகழும் இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது உ.பி., அரசு முழுக்க முழுக்கக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவது பச்சையாகத் தெரிகிறது.

ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு படைத்தவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதும் அரசு இயந்திரம் அவர்களுக்கு ஆதரவாக வளைந்து கொடுப்பதும் காலங்காலமாக நாம் பார்த்து வரும் காட்சிகள்தாம். ஆனால் அவையெல்லாம் தனிப்பட்ட சில கீழ்த்தரப் பிறவிகளால் தனிப்பட்ட பெண்கள் மீதான தாக்குதலாக மட்டுமே இதுவரை இருந்து வந்தன. ஆனால் இப்பொழுது உ.பி-இல் நடப்பது அஃது இல்லை.

கொல்லப்பட்ட பெண்கள் மூன்று பேருமே பட்டியலின சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவர் மட்டுமில்லை கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நடந்து வரும் இத்தகைய கொடூரமான பாலியல் வன்முறைகள் மிகப் பெரும்பாலானவை பட்டியலினம் எனப்படும் தலித் சாதிப் பெண்கள் மீதுதான் குறி வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

இவ்விவகாரங்களில் குற்றம் வெளியில் தெரிந்ததும் முதலில் கைது, சிறை எனக் கெடுபிடி காட்டும் காவல்துறை, பின்னர் குற்றம் புரிந்த மேல்சாதி இந்துக்களுக்கு ஆதரவாக வழக்கை நீர்த்துப் போகச் செய்வதையும் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.

ஆகவே இவை தனிப்பட்ட சிலர் மீது தனிப்பட்ட சிலர் நடத்தும் வன்முறைகள் அல்ல. நாட்டின் சாதியச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் நடத்தும் இனப்படுகொலை!

மிகைப்படுத்திச் சொல்லவில்லை நண்பர்களே! “சமயம், இனம், தேசியம் என ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்களைப் பகுதியாகவோ முழுமையாகவோ அழிப்பதும் மனித இனம் சார்ந்த இன ஒதுக்கல், சமய வேற்றுமை, தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் உடலளவிலோ மனதளவிலோ தொல்லை கொடுப்பதும் கொல்ல நினைப்பதும் அழிப்பதும் இனவேறுபாட்டைக் காரணம் காட்டிக் குழந்தைப் பிறப்பைத் தடுப்பதும் குழந்தைகளை இடம் பெயரச் செய்வதும் வேறு எவ்வகையிலேனும் இனவேறுபாடு காட்டுவதும் இனப்படுகொலைக் குற்றம்” என்கிறது ஐ.நா., சட்ட விதி-2. அப்படிப் பார்த்தால் பட்டியலினம் எனும் குறிப்பிட்ட பிரிவு மக்களைக் குறி வைத்து நடந்த, நடக்கிற இந்த வன்கொடுமைகள் இனப்படுகொலை இல்லாமல் வேறென்ன?

இவர்கள் என்ன குறிப்பிட்ட அந்தப் பெண்கள் மீதான இச்சை காரணமாக அவர்களை வல்லுறவுக்கு ஆட்படுத்துகிறார்களா? அல்லது, அந்தப் பெண்கள் மீதான வெறுப்பு காரணமாக அவர்களைப் பழிவாங்க இப்படிச் செய்கிறார்களா? இரண்டுக்குமே வாய்ப்பில்லை! பட்டியலின மக்களைத் தொடுவதே தீட்டு என நினைப்பவர்கள்தாமே இவர்கள்? அப்புறம் அந்தப் பெண்கள் மீது மட்டும் இவர்களுக்கு எங்கிருந்து வரும் இச்சை? வழியில் தன் பாட்டுக்குப் போகிற முன்பின் தெரியாத பெண் மீதும் சின்னஞ் சிறுமிகள் மீதும் திடீரென எங்கிருந்து வந்து விடும் பழிவாங்கும் வெறி?

ஆக இது முழுக்க முழுக்க சாதிய வெறுப்பு! காலங்காலமாகப் பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டு வரும் ஏற்றத்தாழ்வு காரணமாக மூளையிலேயே புரையோடிச் சீழ் பிடித்துப் போன ஆதிக்க வெறி! அதை மேலும் உசுப்பி விடும் ஊக்க மருந்தாக அமைந்திருக்கிறது நாட்டில் நிலவும் பா.ஜ.க., ஆட்சி.

நான்கு வருணங்களை மட்டும்தாம் கடவுள் படைத்தான் எனும் பகவத்கீதையைப் புனித நூலாகக் கொண்டாடுபவர்கள் உயர்சாதி இந்துக்கள். ஐந்தாம் வருணமான பட்டியலின சாதி மக்கள் இவர்களைப் பொறுத்த வரையில் மனித இனத்துக்குள்ளேயே வர மாட்டார்கள். அதனால்தான் இவர்களால் பட்டியலின ஆண்களையும் பெண்களையும் இவ்வளவு கொடூரமாக நடத்த முடிகிறது.

ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கொல்லவோ காயடிக்கவோ இன்ன பிற வதைகளுக்கு உள்ளாக்கவோ பொதுவாக மனிதர்கள் யாரும் தயங்குவதில்லை. ஆனால் இன்னொரு மனிதரை அப்படி நடத்த யாருக்கும் மனம் வராது. ஆனால் இவர்களுக்கு மனம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் இவர்கள் குறிப்பிட்ட சாதியினரை மனிதர்களாகவே பார்க்கவில்லை என்பதால்தான்.

இப்படிப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில் “சிறுபான்மையினரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். ஆட்சி, அதிகாரம், சட்டம், நீதி என எதுவும் தட்டிக் கேட்காது” எனும் உறுதியான பேராதரவை ஆட்சியாளர்கள் வழங்கும்பொழுது கேட்க வேண்டுமா? இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை வன்மத்தையும் கக்கி வெறியாட்டம் போடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

எனவே நம் ஊடகங்கள் இனி இவற்றைப் பாலியல் குற்றம், பாலியல் வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்ற சொற்களால் குறிப்பதை நிறுத்த வேண்டும்! தனிப்பட்ட ஒருவர் மீது அல்லது சிலர் மீது தனிப்பட்ட ஒருவரோ சிலரோ நடத்தும் பாலியல் தாக்குதல்களுக்குத்தாம் இத்தகைய சொற்கள் பொருந்தும். ஆனால் இங்கு நடப்பது ஈழத்தில் நடந்ததைப் போல் சிறுபான்மையர் மீது அரசு ஆதரவுடன் பெரும்பான்மையர் நடத்தும் இனத் தாக்குதல். எனவே இனி இத்தகைய குற்றங்களை இனப்படுகொலை எனக் குறிக்க ஊடகங்கள் முன் வர வேண்டும்!

சமூக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும், இன்ன பிற இயக்கங்கள் – கட்சிகள் போன்றவையும் இனியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி ஒன்றிய அரசையோ மாநில அரசையோ மன்றாடிக் கொண்டிராமல் நடக்கும் இந்த இன அழிப்பைக் குறித்துப் பன்னாட்டு சமுகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்!

இதை நாம் செய்யத் தவறினால் பார்ப்பனர்கள் நான்கு பேர் வாழ்வதற்காக உலகையே அழிக்கவும் தயங்காத சனாதன (அ)தருமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பா.ஜ.க., ஆட்சியில் இன்று பட்டியலினப் பெண்களுக்கு நேரும் அட்டூழியம் எதிர்காலத்தில் நம் வீட்டுப் பெண்களுக்கும் நடக்க அதிக நாட்கள் ஆகாது!

கணினி வரைகலை: சந்தோஷ் ஏழுமலை
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.