விண்ணுக்கும் மண்ணுக்கும் - விண்வெளியில் பெயர் பொறித்த சாதனைத் தமிழர்கள்
இதுவரை யூடியூபில் மட்டுமே தங்கள் படைப்புகளை வெளியிட்டு வந்த பிளாக் ஷீப் அடுத்த கட்டமாக பி.எஸ் வேல்யூ எனும் இணையவழித் தொலைக்காட்சியைத் (OTT) தொடங்கியது. இதன் வெளியீட்டை இவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதுதான் இங்கு செய்தியே!
சாதிப்பதற்கு வானமே எல்லை என்பார்கள். ஆனால் “வானம் கூட எங்களுக்கு எல்லையில்லை. அதையும் தாண்டிக் காட்டுகிறோம், பாருங்கள்” என்று தங்கள் இணையவழித் தொலைக்காட்சியின் இலச்சினை வெளியீட்டை (OTT Logo Launch) விண்வெளியில் நிகழ்த்திக் காட்டி அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள் இந்தப் பெருமைக்குரிய இளைஞர்கள்.
“அது எப்படி விண்வெளியில்...?” என நினைப்பீர்கள். அதைப் படிப்பதை விடப் பார்ப்பதுதான் சுவை. மலைக்கச் செய்யும் அந்த நிகழ்வை இதோ காணொலியில் கண்டு மகிழுங்கள்.
இந்தியாவிலேயே முதல் முறையாக இப்படி விண்வெளியில் வெளியிடப்படும் முதல் குறுஞ்செயலி (app) பி.எஸ் வேல்யூதான் என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தகவல்!
இதையே இந்நேரம் பெரும் பணக்காரர் ஒருவர் செய்திருந்தால் மது விருந்து, கேளிக்கை, ஆட்டம், பாட்டம் என இந்த வெற்றியைக் கொண்டாடியிருப்பார். ஆனால் பொழுதுபோக்கும் சமுக அக்கறையுமே இரு கண்களாகக் கொண்ட பிளாக் ஷீப் நிறுவனத்தினர் இதற்கான தங்கள் கொண்டாட்டத்தையும் ஒரு சமுக அக்கறை சார்ந்தே அமைத்துக் கொண்டனர். அதுதான் அடுத்த சாதனை!
மக்களிடம் நிதி திரட்டி, சென்னை ஒரகடத்தில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் மரக்கன்றுகள் நட்டு, ஒரு காட்டை உருவாக்குவதன் மூலம் இந்த வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள். உலகிலேயே யூடியூபர்களால் உருவாக்கப்படவிருக்கும் முதல் மக்கள் முதலீட்டுக் காடு என இது வரலாற்றில் பதிவாக உள்ளது! ஆம், ஒரு சாதனையைக் கொண்டாட இன்னொரு சாதனையையே நிகழ்த்துகிறார்கள்!
இதற்காக மக்கள் நாம் இவர்களிடம் மரக்கன்று வாங்க வேண்டும். அப்படி நாம் வாங்கும் மரக்கன்றுக்கு நம் பெயரையோ நமக்குப் பிடித்தமானவர்களின் பெயரையோ சூட்டி முழுமையாக வளர்த்துக் காடாக்கும் பொறுப்பை இவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். கூடவே, மரக்கன்று வாங்குபவர்களுக்கு பி.எஸ் வேல்யூவின் சிறப்பு உறுப்பினர் பயன்பாடு (premium membership) ஓராண்டுக்கு இலவசம்! அதாவது ஓராண்டுக் காலத்துக்கு பி.எஸ் வேல்யூவின் எல்லாக் காணொலிகளையும் விளம்பரமின்றிக் கண்டு களிக்கலாம்.
ஆனால் மரக்கன்றை எங்கே, எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது?
அதற்குத்தான் மூன்றாவது சாதனை!
ஒன்றில்லை, இரண்டில்லை மொத்தம் 110 மணி நேரத் தொடர் நேரலைப் பேச்சு நிகழ்ச்சியை யூடியூபில் வழங்குகிறது பிளாக் ஷீப் குழு! Yes! 110 hours Live Talk Show Marathon.
ஆசியச் சாதனைப் பதிவேடு (Asian Book of Records), இந்தியச் சாதனைப் பதிவேடு (Indian Book of Records) ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் நான்கு நாட்களைக் கடந்து வீறுநடை பயிலும் இந்த நிகழ்ச்சியின் இணையத்திரைக்குக் கீழே ஒரு சுட்டி (link) தரப்பட்டுள்ளது. அதைச் சொடுக்கி ரூ.590/- செலுத்தினால் உங்கள் பெயரில் அல்லது நீங்கள் குறிப்பிடும் பெயரில் மரக்கன்றை அவர்கள் நடுகிறார்கள். அல்லது பி.எஸ் வேல்யூ குறுஞ்செயலியைத் தரவிறக்கி அதிலிருந்தும் மரக்கன்றுக்கு நிதியைச் செலுத்தலாம்.
கடந்த திங்களன்று (02.11.2020) காலை 10:20 மணிக்குத் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்று (06.11.2020) நள்ளிரவு 12:30 மணிக்கு நிறைவடைய உள்ளது! இந்த ஐந்து நாட்களாகத் திரைப்படக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள், யூடியூபு புகழ்முகங்கள் எனப் பலதரப்பட்ட பெரும்புள்ளிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சியைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறார்கள்.
இவர்களோடு மக்களான நாமும் இதில் கலந்து கொள்ளலாம். 7010658455 எனும் எண்ணுக்கு அழைத்து நிகழ்ச்சியில் நேரலையில் பேசலாம். அல்லது 9976227061 எனும் எண்ணுக்கு நம் வாழ்த்தைக் காணொலிப் பதிவாக அனுப்பி வைக்கலாம். அது நிகழ்ச்சியின் இடையில் ஒளிபரப்பப்படும். அதுவும் இல்லாவிட்டால் நேரலை நிகழ்ச்சியின் அரட்டைப் பெட்டியில் நம் கருத்துக்களைத் தெரிவித்தால் தேர்ந்தெடுத்த கருத்துக்கள் நிகழ்ச்சியில் இடையில் காட்டப்படும். தொடர் நேரலை நிகழ்ச்சியைப் பார்க்க - https://youtu.be/wMKgAiXSv4M.
இப்படி ஒரே நேரத்தில் முப்பெரும் சாதனைகளை மேற்கொண்டிருக்கும் இந்தத் தமிழ் இளைஞர் கூட்டம் கட்டாயம் வென்றாக வேண்டும்! அது நம் கையில்தான் இருக்கிறது!
முதல் சாதனையான விண்வெளி வெளியீட்டை அவர்களே முடித்து விட்டார்கள். இரண்டாவது சாதனையான தொடர் நேரலை நிகழ்ச்சியிலும் வெற்றி இன்னும் தொட்டு விடும் தொலைவில்தான். ஆனால் மூன்றாவது சாதனையான 1,10,000 மரக்கன்று நடுவதில் மக்களான நம் உதவி அவர்களுக்கு இன்றியமையாதது.
தன் குடும்பம், தன் வாழ்க்கை எனவே எல்லாரும் ஓடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் தங்கள் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வைக் கூட இம்மண்ணுக்கு நன்மை செய்வதன் மூலம் கொண்டாட விரும்பும் இந்த அருந்தமிழ்ப் பிள்ளைகளின் முயற்சி வெற்றி அடைய நீங்களும் ஒரு மரக்கன்றை வாங்குங்களேன்! இதோ அதற்கான இணைப்பு - https://imjo.in/epq48p.
இது பற்றி உங்கள் கருத்து?...