கருத்துரைக் கொள்கை | Comment Policy

ட்புக்கினிய களத்தினரே!

நம் இதழின் கருத்துரைப் பெட்டி எனும் பொன்தட்டை மிகுந்த ஆவலுடன் உங்கள் முன் வைத்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எதை வைத்து அளிக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்! இனிக்கும் பாராட்டோ, உரைக்கும் கண்டனமோ, திருத்தும் திறனாய்வோ, நகைக்கும் கிண்டலோ எதுவாக இருந்தாலும் இன்முகத்தோடு ஏற்க நாங்கள் காத்திருக்கிறோம்.

அதே நேரம், இதழைப் பயன்படுத்தும் உங்களுடைய நலனுக்கும் உரிமைக்கும் பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்பதால் கருத்துரைப்பது குறித்துச் சில நெறிமுறைகளையும் வகுத்தளிக்க வேண்டியிருக்கிறது. சமூகப் பொறுப்புணர்வு கருதி நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையோடு இதோ அவை உங்கள் பார்வைக்கு!

1. கருத்திடுக! அதைப் படித்திடுக!

படைப்போ மற்றவர் கருத்தோ எதுவாக இருப்பினும் முழுமையாகப் படித்து விட்டுக் கருத்திடக் கோருகிறோம்! படைப்போடு தொடர்பில்லாத கருத்துக்களை யாரும் விரும்புவதில்லை என்பது நீங்கள் அறிந்ததே! படைப்போடு தொடர்பில்லாத, பொதுவான கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் தளத்தின் வலப்பக்கத்தில் உள்ள தொடர்புப் படிவத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நீங்கள் அதை அனுப்பி வைக்கலாம்.


2. தாய்மொழியையும் மதிப்போம்

நாம் யாராவது ஆங்கிலத் தளத்தில் போய்த் தமிழில் கருத்திடுவோமா? மாட்டாம்! அது நாகரிகமற்ற செயல் என நினைப்போம். அதே மரியாதையை நம் தாய்மொழிக்கும் தருவோமே! உங்கள் கருத்துக்கள் கூடுமான வரை தமிழில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒருவேளை உங்களிடம் தமிழில் கருத்திடும் வசதி இல்லாவிட்டால், கவலையே வேண்டா! கருத்துரைப் பெட்டியின் மேலேயே தமிழில் கருத்திடுவதற்கான வசதியளிக்கும் இணைப்பை வைத்திருக்கிறோம். நீங்கள் அதைச் சொடுக்கி, குறிப்பிட்ட பக்கத்துக்குச் சென்று எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமலே தமிழில் எழுதலாம் (மேலும் விவரங்களுக்கு: அழுத்துங்கள் இங்கே). 

3. கருத்துக்கள் வெளியிடப்படும் முறை

கருத்துரைக் கொள்கையைத் தவறியும் யாரும் மீறி விடாமலிருக்கும் பொருட்டு, தற்பொழுதுக்குக் கருத்துக்கள் அனைத்தையும் மட்டுறுத்தலுக்குப் (moderation) பின்பே வெளியிடுகிறோம். ஒருவேளை பெரும்பாலானோர் விரும்பினால், கருத்துக்கள் தாமாகவே உடனுக்குடன் வெளியாக எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யலாம்.

4. கருத்துக்களை நாங்கள் பயன்படுத்தும் விதம்

உங்கள் கருத்துக்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதனாலேயே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் விழைகிறோம். இதழிலும் எங்கள் மற்ற வெளியீடுகளிலும் நற்சான்றிதழ்களாகவும் மேற்கோளுக்காகவும் இன்ன பிற ஆக்கம் சார் வகைகளிலும் உங்கள் கருத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.

5. கருத்துரிமை உண்டு! காப்புரிமை இல்லை!

தளத்தில் நீங்கள் இடும் எல்லாக் கருத்துக்களும் பொதுப் பார்வைக்கானவை. உலகின் எந்த மூலையிலிருந்தும் யார் வேண்டுமானாலும் அவற்றை அணுக முடியும். எனவே கருத்துக்குக் காப்புரிமப் பாதுகாப்பு (copyright security) அளிப்பது இயலாத ஒன்று என்பதை அறிய வேண்டுகிறோம்! (தளத்தின் காப்புரிமை பற்றி மேலும் விவரங்கள் இங்கே).

6. நாங்கள் குறுக்கிட மாட்டோம்

இதழின் சார்பில் வெளியிடப்படும் படைப்புகள் தவிர மற்ற படைப்புகளுக்கு நீங்கள் இடும் கருத்துக்கள் அந்தந்தப் படைப்பாளருக்கானவை. அவற்றைப் படிப்பது, மறுமொழி அளிப்பது முதலானவை அந்தந்தப் படைப்பாளரின் பொறுப்புக்கள். முழுக்க முழுக்க இது படைப்பாளருக்கும் ரசிகருக்கும் இடையிலானது. இதில் எந்த வகையிலும் இதழ் தலையிடவோ பொறுப்பேற்கவோ இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்!

7. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

உங்கள் கருத்து உங்கள் உரிமை! அது போல், அடுத்தவர் கருத்தும் அவர் உரிமை. எனவே, கருத்திடும்பொழுது மற்றவர் கருத்தையும் மதிக்குமாறு தோழமையோடு வலியுறுத்துகிறோம். படைப்பாளர்களோடும் பிற கருத்தாளர்களோடும் இதழாளர்களான எங்களோடும் நீங்கள் எது குறித்தும் கலந்துரையாடலாம், விவாதிக்கலாம். ஆனால், ஒருபொழுதும் அடுத்தவர் கருத்துக்குண்டான மரியாதையைத் தரத் தவற வேண்டா எனக் கேட்டுக் கொள்கிறோம்!

8. நா காப்போம்

இங்கு எது பற்றியும் கருத்துக் கூற, விவாதிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதே நேரம், உங்கள் சொல்லாடல் எப்பொழுதும் நாகரிகமாக இருத்தல் இன்றியமையாதது. தனிப்பட்ட தாக்குதல், மறைமுகத் தாக்குதல், விரசமான (vulgar) – தரக்குறைவான சொற்பயன்பாடு போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் யாரும் ஈடுபட மாட்டீர்கள் என நம்புகிறோம். நாடு, மொழி, இனம், பாலினம், நிறம், சமயம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் எதையும் இவற்றைச் சார்ந்தவர்கள் யாரையும் தனித்தோ தொகுத்தோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் வகையிலோ முன்னிலைப்படுத்தும் வகையிலோ, யார் மீதும் அல்லது எதன் மீதும் வெறுப்புணர்வை/பாலுணர்வை உமிழுகிற/தூண்டுகிற விதத்திலோ ஒருபொழுதும் நடந்து கொள்ள மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு.

9. சட்டம் போற்றுவோம்

சட்டம் அனைவருக்கும் சமம்! நம் இதழும் அதற்கு விலக்கானதில்லை. எனவே, நம் கருத்துக்கள் எப்பொழுதும் சட்டத்துக்கு உட்பட்டவையாகவே அமைவது கட்டாயமானது. புகைபிடித்தல், மது அருந்துதல், வன்முறை, பாலியல் அத்துமீறல், மிரட்டல் போன்ற பொருள்களிலோ இத்தகைய சட்டப்புறம்பான செயல்களை ஊக்குவிக்கிற, காட்சிப்படுத்துகிற வகையிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ கருத்திட இங்கு யாருக்கும் நாங்கள் இசைவளிக்க விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளக் கோருகிறோம்!

10. கருத்திட மட்டுமே கருத்துரைப் பெட்டி!

இங்குள்ள கருத்துரைப் பெட்டி நம் இதழ், தள அமைப்பு, இதில் வெளியாகும் படைப்புகள், கருத்துகள் ஆகியவற்றைப் பற்றிக் கருத்துரைக்கவும் விவாதிக்கவும் மட்டுமே. மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள் (blogs), இணையத்தில் / வெளியில் உள்ள வணிகம் சார்ந்த – சாராத நிறுவனங்கள் போன்ற எதையும் விளம்பரப்படுத்தும் நோக்கில் இங்கு கருத்திடுவதைத் தவிர்க்குமாறு அன்புடன் வலியுறுத்துகிறோம்!

11. கருத்துரையாளர் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு

மேற்கண்ட 7, 8, 9, 10 ஆகிய நெறிமுறைகளை யாராவது மீறினால் குறிப்பிட்ட கருத்தின் பக்கத்தில் உள்ள கொடிச் சின்னத்தை (flag as inappropriate) அழுத்தி நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கலாம். நெறிமுறைகளுக்குப் புறம்பான அத்தகைய கருத்துக்களை உடனே நீக்குவதோடு, தேவைப்பட்டால் (அதாவது, குறிப்பிட்ட பயனர் தொடர்ந்து அத்தகைய கருத்துக்களை இட்டால்) அவரைத் தடை செய்து களத்தினரைப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.

12. நெறிமுறைகளை மீறினால்...

மேற்கண்ட 7, 8, 9, 10 ஆகிய நெறிமுறைகளை யாராவது மீறுவது தெரிந்தாலோ தெரியப்படுத்தப்பட்டாலோ முதல் நடவடிக்கையாக நெறிமுறைகளுக்குப் புறம்பான அத்தகைய கருத்துக்கள் நீக்கப்படும். அதன் பிறகும் குறிப்பிட்ட பயனர் அப்படிப்பட்ட கருத்து ஏதேனும் வெளியிட்டால் கருத்து நீக்கப்படுவதோடு பயனருக்கு எச்சரிக்கையும் தர வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும். அதன் பின்னரும் பயனர் நெறிமுறைகளை மீறி நடந்தால் குறிப்பிட்ட பயனரைத் தடை செய்வது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!

13. பொறுப்புத் துறப்பு

கருத்துக்கள் அனைத்தும் அவரவர் சொந்த எண்ணங்களே! அதனால் அவற்றுக்கான பொறுப்பும் அவரவருக்கே! இதழின் சார்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் தவிர வேறு எந்தக் கருத்துக்கும் இதழோ ஆசிரியரோ இதழ் நிறுவனத்தினரோ பொறுப்பேற்க இயலாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்! (பொறுப்புத் துறப்புக் குறித்த முழுமையான விவரங்கள் இங்கே).

14. கடைசியாக...

மேற்கண்ட எல்லாக் கட்டுப்பாடுகளும் படைப்பாளர்களுக்கும் இதழாளர்களான எங்களுக்கும் கூடப் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் நன்றாகச் செயல்பட்டால், உங்களுக்கு நேரமிருக்கும்பொழுது பாராட்டுங்கள்! தவறாகச் செல்வது தெரிந்தால், நேரம் ஒதுக்கியாவது கண்டியுங்கள்! மொத்தத்தில் இந்த இதழையும் படைப்பாளர்களையும் மென்மேலும் செம்மைப்படுத்துவதாகவும் ஊக்குவிப்பதாகவுமே உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அமைய வேண்டுமென விரும்புகிறோம்! அறிவும் பண்பும் நிறைந்த ஒரு சமூகத்தின் கலந்துரையாடல் எப்படி இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இங்கு எழும் விவாதங்கள் திகழ வேண்டும் என்பதே எங்கள் அவா! உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறோம், கண்டிப்பாக நீங்கள் அதைச் சுமையாகக் கருத மாட்டீர்கள் எனும் நம்பிக்கையுடன்!

கடைசியாக இற்றைப்படுத்தியது (Last Updated): 10.01.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.