படைப்பு வெளியீட்டுக் கொள்கை

ட்புக்கினிய களத்தினரே!

இந்த இதழுக்கு ‘நமது களம்’ எனப் பெயர் வைத்ததன் காரணமே உலகெங்கிலும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்குமான களம் இது என்பதை உரக்கச் சொல்லத்தான். நாங்கள் இதைத் தொடங்கியதே தமிழ் படிப்போர் – படைப்போர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில்தான். எனவே, தட்டிவிடுங்கள் உங்கள் கற்பனைக்குதிரையை! தெறிக்க விடுங்கள் உங்கள் சமூக அக்கறையை! கதையோ கட்டுரையோ, எழுத்தோ காட்சியோ எந்த வகைப் படைப்பையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் மட்டும் போதும். உலகின் பரந்துபட்ட பார்வைக்கு உங்கள் திறமையை விருந்தாக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்!

அதே நேரம், படைப்புகளை வெளியிடுவதற்கென ஒரு கொள்கையை வடிவமைத்துக் கொள்வது இதழின் தரத்தை உங்களுக்கு உறுதி செய்து தருவதாக அமையும் என நம்புகிறோம். எனவே, அந்த ஒரே காரணத்தை முன்னிட்டு, படைப்புகளை அனுப்புவதற்கான வழிமுறைகள், நெறிமுறைகள் ஆகியவற்றின் பட்டியலும் இதன் மூலம் படைப்பாளருக்கும் இதழ் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்படும் உடன்படிக்கை குறித்த விளக்கமும் இதோ உங்கள் மேலான பார்வைக்கு!

 • எழுத்து, படம், ஒலி, விழியம் (video) என எந்த வகைப் படைப்பையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். ஆனால், அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க விரும்புகிறோம்!

 • படைப்பாளரின் சொந்த ஆக்கங்களை, அதுவும் இணையத்திலோ வெளியிலோ எங்கும் வெளியாகாதவற்றை மட்டுமே நாங்கள் வரவேற்கிறோம்.

 • தழுவல், மொழிபெயர்ப்புப் படைப்புகளை அனுப்புபவர்கள் மூலப் படைப்பின் பெயர், அதன் படைப்பாளர் பெயர் இரண்டையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறோம்!

 • படைப்புகளில் பயன்படுத்தப்படும் படங்கள், ஒலிகள், விழியங்கள் போன்றவை படைப்பாளரின் சொந்த ஆக்கங்களாகவோ பொதுப் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டவையாகவோ மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்!

 • படைப்புகளை writetokalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கக் கோருகிறோம்! சமூக ஊடகங்கள் வழியாகவோ வேறு வழிகளிலோ அனுப்ப வேண்டா!

 • எந்த வகைப் படைப்பாக இருந்தாலும் கோப்பை (file) மின்னஞ்சல் வழியே நேரிடையாகப் பெறவே விழைகிறோம். கோப்பின் இணைப்பை (file link) அனுப்புவது வேண்டா!

 • இதழில் படைப்பு வெளியாகி ஒருநாள் ஆகும் வரை அல்லது படைப்பு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் வரை சமூக ஊடகங்களிலோ இணையத்தின் பிற பகுதிகளிலோ வெளியிலோ எங்கும் படைப்பை வெளியிட வேண்டா எனக் கேட்டுக் கொள்கிறோம்!

 • எழுத்துப் படைப்புகளை வேர்டு (MS-Word) அல்லது நோட்டுபேடு (Notepad) ஆவணத்தில் ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம்!

 • ஒருங்குறி வகையைச் சேர்ந்த எந்த எழுத்துருவில் (font) வேண்டுமானாலும், எத்தனை எழுத்தளவில் (font size) வேண்டுமானாலும் படைப்புகளை அனுப்பலாம். ஆனால், வேர்டு ஆவணத்தில், லதா அல்லது ஏரியல் யூனிகோடு எழுத்துருவில், எழுத்தளவு 8-இல் வைத்துப் பார்த்தால் 12 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! இந்தப் பக்கக் கட்டுப்பாடு நோட்டுபேடு படைப்புகளுக்கும் பொருந்தும்.

 • விழியப் (video) படைப்புகள் 100 பேரெண்ணுண்மிகளுக்கு (100 MB) மிகாமல் இருந்தால் மட்டுமே வெளியிட இயலும் என்பதைப் புரிந்து கொள்ளக் கோருகிறோம்!

 • படைப்பாளர் தமது சொந்தப் பெயர், புனைபெயர் என ஏதாவது ஒரு பெயரைப் படைப்பில் குறிப்பிடுவது இன்றியமையாதது. பெயரில்லாமல் வரும் படைப்புகளைப் பரிசீலிக்க இயலாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

 • ஒருவருக்கு மேற்பட்டோர் சேர்ந்து உருவாக்கிய படைப்பாக இருந்தால் அனைவர் பெயரையும் குறிப்பிடலாம்; அல்லது ஒரு பொதுப்பெயரிலோ நிறுவனப் பெயரிலோ படைப்பை அனுப்பி வைக்கலாம்.

 • படைப்பாளர் விரும்பினால் தமது பெயருடன் தம்முடைய சமூக ஊடக (social site) முகவரி, வலைப்பூ முகவரி போன்ற ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம்.

 • படைப்பாளருக்கு விருப்பம் இருந்தால் தமது ஒளிப்படத்தையும் (photo) படைப்பில் இணைக்கலாம்.

 • படைப்பாளர் அல்லது படைப்பாளர்கள் உடைய ஒளிப்படத்தில் படைப்பாளிகளைத் தவிர வேறு யாரும் இடம்பெற வேண்டா என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

 • படைப்பாளரின் வலைப்பூ - யூடியூபு தொலைக்காட்சி முதலானவற்றின் சின்னங்கள், கையொப்பம் போன்றவற்றைப் படைப்புகளில் ஒருபொழுதும் இணைக்க வேண்டா எனத் தெரிவித்துக் கொள்கிறோம்!

 • நாடு, மொழி, இனம், பாலினம், நிறம், சமயம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் எதையும் இவற்றைச் சார்ந்தவர்கள் யாரையும் தனித்தோ தொகுத்தோ, நேரடியாகவோ மறைமுகவோ தாக்குகிற படைப்புகள், விரசமான (vulgar) – தரக்குறைவான சொற்பயன்பாடு கொண்ட படைப்புகள், யார் மீதும் அல்லது எதன் மீதும் வெறுப்புணர்வை/பாலுணர்வை உமிழுகிற/தூண்டுகிற படைப்புகள் போன்றவற்றைத் தவிர்ப்பீர்கள் என நம்புகிறோம்!

 • அதே போல் புகைபிடித்தல், மது அருந்துதல், வன்முறை, பாலியல் அத்துமீறல், மிரட்டல் போன்ற பொருள்களிலோ இத்தகைய சட்டப்புறம்பான செயல்களை ஊக்குவிக்கிற, காட்சிப்படுத்துகிற வகையிலோ படைப்புகளை யாரும் அனுப்ப மாட்டீர்கள் என்பதும் எங்கள் நம்பிக்கை.

 • அரசு, அரசு சார் அமைப்புகள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஆட்சியாளர்கள் போன்றோரின் பதவி சார்ந்த செயல்பாடுகளான அலுவல் முடிவுகள், நடவடிக்கைகள், ஆணைகள், தீர்ப்புகள் போன்றவற்றைப் பற்றிப் படைப்புகளில் குறிப்பிடும்பொழுது உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் குறிப்பிட வேண்டா எனத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

 • சாதியம், வருணாசிரமம் ஆகியவற்றை ஆதரிக்கும் விதமான படைப்புகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டுகிறோம்!

 • இராசிபலன் - பெயரியல் - மனையடி சாத்திரம் போன்ற சோதிடம் தொடர்பான படைப்புகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றை அனுப்ப வேண்டா எனக் கேட்டுக் கொள்கிறோம்!

 • தேர்ந்தெடுக்கப்படாத படைப்பை மறுபடியும் அனுப்புவது விரும்பத்தக்கதில்லை. ஒருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட பின் மறுபரிசீலனை செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

 • படைப்பு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்காமல் இருக்க நிறுவனத்துக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம்!

 • மேற்கூறிய நெறிமுறைகளைப் படைப்போ படைப்பாளரோ மீறினால்/மீறியிருந்தால் படைப்பைப் பரிசீலிக்காமலோ பரிசீலித்தோ, தேர்ந்தெடுக்கும் முன்னரோ பின்னரோ தள்ளுபடி செய்ய/தளத்திலிருந்து நீக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு என்பதை அறிவிக்க விரும்புகிறோம்!

 • படைப்புகள் அனைத்தும் பரிசீலனைக்குப் பிறகே வெளியிடப்பெறும். படைப்புகளைத் தேர்ந்தெடுப்பது, தள்ளுபடி செய்வது, வெளியிடுவது முதலான அனைத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது என்பதைப் பதிவு செய்ய விழைகிறோம்!

 • அதே போலப் படைப்பைச் சுருக்கவும், விரிவாக்கவும், திருத்தவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.

 • படைப்புகளின் காப்புரிமையும் (copyright) பொறுப்பும் (responsibility) முழுக்க முழுக்கப் படைப்பாளர்களுக்கு மட்டுமே உரியவை. (‘நமது களம்’ இதழின் காப்புரிமை, பொறுப்புத்துறப்பு ஆகியவை பற்றி மேலும் அறிவதற்கு அவ்வப் பக்கங்களைப் பார்க்க!).

இவ்வாறு ‘நமது களம்’ இதழுக்கு ஒரு படைப்பை அனுப்புவதன் மூலம் அதை http://www.namathukalam.com இணையத்தளம், அதன் மென்படி (pdf) வடிவம், தளத்தின் குறுஞ்செயலிப் பதிப்புகள், சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றில் தலா ஒருமுறை முழுமையாக வெளியிடவும் சமூக ஊடகங்களில் கணக்கற்ற தடவைகள் பகுதியாக வெளியிடவும் நீங்கள் ‘நமது களம்’ இதழுக்கு உரிமை வழங்குவதோடு மேற்கண்ட எல்லா நெறிமுறைகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளிக்கிறீர்கள் என்பது இதன் மூலம் ஏற்படும் உடன்படிக்கை ஆகும்.
Blogger இயக்குவது.